ஜெபக்குறிப்பு: ஜனவரி 28 செவ்வாய்
உபா.28:12 இன்படி ஏற்றகாலத்தில் நம்முடைய தேசத்திலே மழை பெய்யவும், பொருளாதாரத்தில் உள்ள மந்தநிலை மாறி செழிப்புண்டாவதற்கு தேவன்தாமே தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறந்தருளவும், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு சித்தமானவர்களை உயர்த்தி நீதியுள்ள ஆட்சி நடைபெறுவதற்கு கர்த்தர் உதவி செய்திடவும் மன்றாடுவோம்.
என்னைக் காண்கிறவர்
தியானம்: ஜனவரி 28 செவ்வாய்; வாசிப்பு: சங்கீதம் 139:1-10
“…தன்னோடே பேசின கர்த்தருக்கு,
நீர் என்னைக் காண்கிற தேவன்
என்று பேரிட்டாள்.” (ஆதியாகமம் 16:13)
நாட்டுப் பிரச்சனையில் இடம்பெயர்ந்து சென்றபோது, ஒரு பெரிய வீட்டில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு குடும்பமாகப் பத்துக் குடும்பங்கள் அங்கே இருந்தோம். அங்கிருந்த ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவிதமான எண்ணங்கள். ஒவ்வொருவரும் எதையோ இழந்த நிலையில் இருந்தனர். இரவு நேரம் வந்ததும் அனைவரும் கூடி தேவனை ஆராதிப்போம். வெவ்வேறு குடும்பங்களாக, வித்தியாசமான மனநிலையுடன், வித்;தியாசமான இழப்பு களுடன் இருந்தாலும், தேவனுடைய சமுகத்திற்கு வந்தபோது, தேவன் நம் ஒவ்வொருவரின் உள்ளங்களையும் பிரச்சனைகளையும் காண்கிற தேவனாய் இருக்கிறார் என்ற எண்ணம் நமக்குப் பெரியதொரு ஆறுதலும் தேறுதலுமாய் இருந்ததை உணரக்கூடியதாக இருந்தது.
அன்று ஆகார் தனது நாச்சியாரால் துரத்திவிடப்பட்டு வனாந்தரத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்தாள். அப்போது தன்னோடு பேசின கர்த்தருக்கு ‘நீர் என்னைக் காண்கிற தேவன்’ என்று பேரிட்டாள். தேவன் எப்போதும் நம்மைக் காண்கிற தேவனாகவே இருக்கிறார் என்பது நமக்கு எவ்வளவு ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருக்கிறது. அவர் நமது துக்கங்களையும் துயரங்களையும் மட்டும் காண்கிறவர் அல்ல; நமது உண்மைத்துவம், நாம் அவர்மீது வைத்திருக்கும் அன்பு, நமது வாழ்வில் நாம் அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தையுமே காண்கிறவராய் இருக்கிறார்.
ஒருவர் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வு, நம்மை எப்போதும் உண்மையுள்ளவர்களாய் நடக்கத் தூண்;டுவதாய் அமையும். தாவீது தனது சங்கீதத்தில், “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர்” என்று பாடியுள்ளார். அதாவது, தன்னை முழுவதுமாய் அறிந்திருக்கிற தேவன் இவரே என்ற நம்பிக்கை அவருக்குள் வேரூன்றியிருந்தது என்பது விளங்குகிறது. நமது உள்ளத்தில் விசாரங்கள் பெருகும்போதும், நிந்தைகள் தாக்கும் போதும், யார் நம்மைக் காண்பார் அல்லது நமக்கு ஆதரவளிக்க யாருண்டு என்று நினைக்கிறோம். அப்போதெல்லாம் நம்மை ஆற்றித்தேற்றும் ஒரு அன்பின் கரம் உண்டு என்பதை மறந்துபோக வேண்டாம். அதேசமயம், நமது இருதய சிந்தனைகளையும் அவர் அறிகிறார் என்பதையும் மறக்கக்கூடாது. எப்போதும் நம்மோடு உறவாட விரும்பும் ஆண்டவருக்கு நமது வாழ்வை அர்ப்பணித்து, எந்நாளும் அவருக்கே உண்மையாய் நடக்க தூய ஆவியானவர் தாமே நம்மை வழிநடத்துவாராக.
ஜெபம்: பிதாவே, நீர் என்னைக் காண்கிற தேவன். உம்மையே நேசித்து உமக்கே உண்மையாய் வாழ என்னை முற்றிலும் உமக்கே அர்ப்பணிக்கிறேன். ஆமென்.