ஜெபக்குறிப்பு: ஜனவரி 7 செவ்வாய்

“… நாங்கள் தேவவசனத்தை .. துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும் .. பேசுகிறோம்” (2கொரி.2:17) இவ்வாக்குப்படியே கர்த்தருடைய வார்த்தைகளை வானொலியிலும், தொலைகாட்சியிலும் போதித்துவரும் தேவதாசர்களின் நல்ல சுகத்திற்காகவும், செய்திகள் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.

கேளுங்கள்…

தியானம்: ஜனவரி 7 செவ்வாய்; வாசிப்பு: லூக்கா 11:5-13

“…கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்…”
(லூக்கா 11:9)

அப்பா, தனது பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்வதுண்டு. மறுபுறத்தில், பிள்ளைகளும் தங்களுக்குத் தேவையானவற்றை அப்பாவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வதும் உண்டு. அதுபோலவே, நமக்குத் தேவையானதைத் தேவன் நமக்கு அருளுகிறார். அத்துடன், நமது தேவைகளை நாம் தம்மிடம் வேண்டிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் ஆசிக்கிறார்.

ஒரு தம்பதியினர் சில பிரச்சனைகளினால் பிரிந்தனர். அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அவரவர் செய்த பிழைகளை உணர்ந்து திருந்தி, ஒருவரோடொருவர் பேசி சீர்பொருந்தும்படி ஒருசில கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் நிறுத்திவிடாமல் அவர்களுக்காக அனைவரும் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டனர். அவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்த ஒருவர், அவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள் என்று விசாரித்தார். அவர்கள் மிகவும் சந்தோஷமாகச் சேர்ந்து வாழ்வதை அறிந்து தேவனைத் துதித்தார். அவர் கேட்டார்; கர்த்தர் கொடுத்தார்.

ஆண்டவருக்கு எல்லாம் தெரியும்; பின்னர் நாம் ஏன் கேட்கவேண்டும் என்றும், கேட்பதெல்லாம் கிடைப்பதில்லை, ஆதலால், கேட்பதில் பயனில்லை என்றும் சொல்லி, ஜெபிக்காமலும், ஜெபத்தில் விசுவாசமில்லாமலும் இருப்பவர்களும் உண்டு. ‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்று இயேசு நமக்குக் கற்றுகொடுத்திருக்கிறார். மாத்திரமல்ல, தாமும் பிதாவை நோக்கி வேண்டிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

எங்களது குடும்ப ஜெபத்தில், சகல தேவைகளுக்காகவும், பிறருடைய தேவைகளுக்காகவும் அனுதினமும் வேண்டிக்கொள்வதுண்டு. அதனை எங்கள் பிள்ளைகள் சிறுகுழந்தைகளாக இருந்த காலத்திலிருந்து இவ்விதமாக நாங்கள் வேண்டிக்கொள்வதையும், பதில் கிடைக்கப்பெற்று நன்றி சொல்லுவதையும் கண்ட பிள்ளைகளுக்குள் தேவபயமும், ஜெபத்தில் விசுவாசமும் தானாகவே வேரூன்றின. அதை வேறாக சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை. தமது பெற்றோர் ஜெபிப்பதைக் காணும் பிள்ளைகள், தாங்களாகவே ஜெபிக்க ஆரம்பிப்பார்கள். ஆம், ஜெப ஜீவியமும், தேவநம்பிக்கையும் முதலில் நம் குடும்பங்களிலேயே ஆரம்பமாகின்றது. குடும்ப ஜெபத்தின் முக்கியத்துவம் இன்று குடும்பங்களில் அற்றுப்போய்க் கிடப்பது துக்கத்திற்குரியது. இன்றே நாம் குடும்ப ஜெபத்தை ஆரம்பிப்போமாக. முன்னர் குடும்ப ஜெபம் செய்து விட்டுவிட்டவர்கள் மீண்டும் தொடங்குவோமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, உம்மை நோக்கிக் கூப்பிட, உம்மை நோக்கி மன்றாட, உம்மை நோக்கி ஜெபிக்க என்னைப் பக்குவப்படுத்தும். ஆமென்.