ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 16 சனி
“… என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்” (ஏசா.51:7) என்ற வாக்கைப்போல அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் மூலமாக உணர்த்தப்படும் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கவும், சகோதரி சாந்தி பொன்னு அவர்களின் நல்ல சுகத்திற்காக, தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபிப்போம்.
பாவத்தின் கொடூரம்
தியானம்: ஆகஸ்டு 16 சனி; வாசிப்பு: யோனா 1:5-7
“…எழுந்திருந்து உன் தேவனை நோக்கி
வேண்டிக்கொள்…” (யோனா 1:6).
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிக்காக இடைநிலைக் குழுவினர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அக்குழுவிலே நானும் இடம்பெற்றிருந்தேன். ஒருநாள் என் கால்களில் பலத்த அடி விழ, திடுக்கிட்டு திரும்பினேன். கோபம் கொப்பளிக்க ஆசிரியை பெரிய தடியுடன் நின்றிருந்தார். “வரிசையைவிட்டு விலகக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். உன் ஒருத்தியின் தவறால் முழுக் குழுவும் தோல்வியை தழுவ நேரிடும்” என்றார் அவர். அவருடைய முகமும், அவர் சொன்ன வார்த்தைகளும் என் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அன்று நாங்கள்தான் வெற்றிக் கிண்ணத்தைச் சுதந்தரித்தோம். அதற்குக் காரணமான அந்த ஆசிரியைக்கு நன்றி கூற வேண்டும்.
பயணம் செய்த அத்தனைபேரும் கப்பல் கவிழ்ந்துவிடுமோ என தவித்து கதறியவேளையில், கப்பலின் கீழ்த்தட்டில் நித்திரை செய்கின்ற ஒருவனை மாலுமி கண்டான். யோனாவை எழுப்பிய மாலுமி, “எழுந்திரு, உன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்; ஒருவேளை அவராவது நம்மை நினைத்தருளுவார்” என்கிறான். இத்தனை ஆபத்துக்கும் காரணமானவன் தூங்குகிறான். இந்தக் காற்றையும் கடலையும் அடக்கவல்ல தேவனுடைய பிள்ளை தூங்குகிறான். அவனைத் தட்டியெழுப்பியது யார்? மெய்த்தேவனை அறியாதவன். சீட்டு தன் பெயருக்கு விழும்வரை ஆபத்துக்கு யார் காரணம் என்பது யோனாவுக்குத் தெரியாதா! அவன் ஒருவனின் தவறினால், கப்பலில் இருந்த அத்தனை பேருமே பாதிக்கப்பட்டார்கள். இதுதான் உண்மை.
பள்ளி ஆசிரியை சொன்னது இன்றும் ஞாபகத்தில் இருந்தாலும், வாழ்க்கை ஓட்டத்தில், இரட்சிப்பின் மகத்துவத்தை உணராத காலத்தில், என் ஒருத்தியின் தவறினால் பாதிக்கப்பட்டவர்களை இன்றும் நினைக்கும்போது மனவருத்தம்தான். நாம் மனந்திரும்பிய பின்பும் அந்த உணர்வின்றி வாழ முடியாதே. இன்று தேசத்தில், சபைகளில், குடும்பங்களில் கொந்தளிப்பு! இதற்கு நாம் காரணம் அல்ல என்று சொல்லமுடியுமா? என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் மனந் திரும்பினால் தேசத்துக்குச் சேமம் என்று கர்த்தர் சொன்னது சத்தியம். தேசத்தின் கொந்தளிப்புக்கு நாம்தான் காரணம் என்பது இதிலேயே விளங்குகிறது. ஆனால், நாமோ நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லாதவர்களைப்போல, எதுவும் தெரியாதவர்களைப்போல தூங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மை தட்டியெழுப்பவதற்கு ஒரு ஆள் தேவையா? ஒரு ஏவாளின் பாவம் முழு உலகையும் பாதித்ததே! பாவம் அத்தனை கொடுமையானது. தூக்கத்தை விட்டு இன்றே எழுந்திருப்போம். நமது பொறுப்பை உணர்ந்து மனந்திரும்புவோம்.
ஜெபம்: “பிதாவே, என் நிமித்தம் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இன்றே அதை உணர்த்தும். என்னை மன்னித்து, உமது வழியில் நடத்தும். ஆமென்.”