ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 செவ்வாய்
“… இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசா.52:12) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காத்தபடியால் அவருக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி ஜெபிப்போம்.
உபத்திரவத்தில் எலியா
தியானம்: செப்டம்பர் 30 செவ்வாய்; வாசிப்பு: 1இராஜாக்கள் 19:1-8
“…எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ
பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்”
(1இராஜாக்கள் 19:7).
உபத்திரவங்கள் வரும்போது நாம் சோர்ந்துபோவது சகஜம். ஆனால், அந்தச் சோர்வு நிரந்தரமாகிவிடக்கூடாது. அந்த நேரத்தில் நம்மை பெலப்படுத்த தேவனுடைய வார்த்தைகள் நமக்குண்டு. விசுவாச சகோதரர்களின் ஆலோசனைகள் உண்டு; ஜெபம் உண்டு. இவை எல்லாவற்றாலும் நாம் பெலனடைந்து மீண்டும் நமது விசுவாச ஓட்டத்தைத் தொடரவேண்டும். அதேவேளை சக விசுவாசிகள் யாராவது மனமுடைந்து சோர்வடைந்து இருந்தால் அவர்களைத் தேற்றுவதும், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுவதும்கூட மிகவும் அவசியமானதாகும். அதாவது நாம் பெலனடைவதும், பிறரைப் பெலப் படுத்துவதும் நமது கடமையாகும்.
யேசபேலின் கொலை மிரட்டலுக்குப் பயந்துவிட்ட எலியா, தான் சாக வேண்டுமென தேவனிடம் வேண்டி ஒரு சூரைச்செடியின் கீழ் படுத்து உறங்கினான். முற்றிலுமாய் சோர்வின் உச்சக்கட்டத்துக்குப் போய்விட்டான். இனி சாவுதான் முடிவு என தீர்மானமும் எடுத்துவிட்டான். ஆனால், தேவன் அவனை விட்டு விடவில்லை. இன்னமும் எவ்வளவோ தூரம் பிரயாணித்து எத்தனையோ காரியங்களைச் சாதிக்கவேண்டிய எலியா இடையில் சோர்ந்துபோய் நித்திரை பண்ணும்போது, தம் தூதனை அனுப்பி அவனுக்கு ஆகாரம் கொடுத்து அவனை உற்சாகப்படுத்தினார். அந்த உற்சாகத்தோடு அவன் மேலும் நாற்பது நாட்கள் இரவு பகலாய் நடந்தான். அத்துடன் அந்நாள்வரை தனித்து ஊழியம் செய்து வந்த எலியாவுக்கு ஒரு துணை ஊழியனாக எலிசாவைக் கொடுத்தார்.
நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம்? தேவனுக்காய் ஓடியோடி உழைத்து, தேவனோடுள்ள உறவையே மறந்துபோய் இருக்கிறோமா? இல்லாவிட்டால், செய்ததெல்லாம் வீண். இனி என்ன பயன்? எல்லாமே பிரச்சனைதான், என்று சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டோமா? அதுவுமில்லையென்றால், ஏதோ பூமி சுழலுகின்றது, நானும் சுழன்று கொண்டிருக்கிறேன் என்று எதுவுமே செய்யாமல் உலகம் போகின்ற போக்கில் இலக்கு இல்லாமல் நமது வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறதா? இந்த மனநிலை மாறவேண்டும். எந்தவிதமான சோர்வும் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக்கூடாது. ஒரு நோக்கத்தோடு நம்மை உருவாக்கிய தேவனிடத்தில் நம்மை அர்ப்பணித்து, முடிந்த பணிகளை அவருக்காய் செய்யத் தீர்மானிப்போம். காலங்கள் போனால் திரும்பாது. எனவே, கிருபையின் நாட்களைத் தள்ளாமல் கர்த்தருக்காய் பெரிய காரியங்களை சாதிக்க நம்மை அவருக்கென இன்றே அர்ப்பணிப்போமாக.
ஜெபம்: “பிதாவே, சோர்ந்து போயிருந்த எலியாவை உற்சாகப்படுத்தி எழுப்பி அனுப்பியது போல, என்னையும் பெலப்படுத்தி அனுப்பும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: செப்டம்பர் 29 திங்கள்
… உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். (1கொரி. 6:20)
ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 திங்கள்
“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் … சகலத் தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக். 24:47) என்ற ஆண்டவருடைய கட்டளைப்படி நடத்தப்பட்டு வரும் அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களுக்காக, அனுப்பப்பட்ட மிஷனெரிகளுக்காக, அவர்களது தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.
உபத்திரவத்தில் தேவபிள்ளைகள்
தியானம்: செப்டம்பர் 29 திங்கள்; வாசிப்பு: தானியேல் 3:20-30
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க
வல்லவராயிருக்கிறார்; …விடுவிக்காமற்போனாலும், …உம்முடைய
தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை…” (தானி. 3:17,18).
நாங்கள் யார் என்று கேட்டால், நாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று தைரியமாகச் சொல்லுவோம். உபத்திரவங்கள் வரும்போது எப்படி இருக்கிறோம் என்று கேட்டால், முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு, நாடியிலே கையை வைத்துக்கொண்டிருப்போம். உலகத்தையே தலையிலே தூக்கி வைத்திருக்கிறதுபோன்ற உருவம்தான் நினைவுக்கு வருகிறது.
இன்று வாசித்த பகுதியிலும் மூன்று தேவபிள்ளைகள் உபத்திரவத்தில் எவ்வளவு உறுதியாக இருந்தார்கள் என்று வாசித்தோம். உபத்திரவம் வரும் போது நாம் உறுதியாக இருக்கவேண்டும் என்று நாம் சிலவேளை சிந்திப்பது உண்டு. ஆனால், உபத்திரவங்களும், துன்பங்களும் வரும்போது ஓடி ஒளிகிறோம். இந்த தேவபிள்ளைகளோ, கண்ணுக்கு முன்னாலே உபத்திரவம் இருந்தபோதே உறுதியாக இருந்தார்கள். அவர்கள் தைரியமாகச் சொன்ன கூற்று என்னவெனில், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; …விடுவிக்காமற்போனாலும், நாங்கள் பொற்சிலையை வணங்கமாட்டோம்”. அதாவது, விடுவிக்காமற்போனாலும் அவருக்காக நாம் இந்த உபத்திரவங்களைச் சகிப்போமேயல்லாமல், அவருக்குக் கொடுக்கும் கனத்தை இச் சிலைகளுக்குக் கொடுக்க மாட்டோம் என்பதாகும். எவ்வளவு உறுதியான ஒரு தீர்மானம், விசுவாசம் பார்த்தீர்களா?
கடைசிக் காலத்தில் நின்றுகொண்டிருக்கும் தேவ பிள்ளைகளாகிய நமக்கும் இப்படிப்பட்ட ஒரு உறுதி தேவை. தேவனுக்காய் பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அந்த மூன்று தேவபிள்ளைகளின் உறுதிதான் ‘இஸ்ரவேலரின் தேவன் வல்லமையுள்ளவர்’ என்பதை அந்த ராஜாவையும், நாட்டு மக்களையும் அன்று காணச்செய்தது.
இன்று நாம் எடுக்கும் உறுதியான தீர்மானங்களும், படிகளும்தான் தேவனை அறியாதோர் தேவனை அறிந்துகொள்ள வழிவகுத்துக் கொடுக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது. தேவபிள்ளைகள் அக்கினிச் சூளையின் நடுவில் போடப்பட்டபோது அவர்களோடு தேவசமுகம் இருந்ததுபோல, நாம் உபத்திரவத்தின் மத்தியில் நடந்தாலும், நம்மோடும் அவர் சமுகம் நிச்சயமிருக்கும் என்ற உறுதி நம்மை உபத்திரவ நேரத்தில் பெலப்படுத்தட்டும். நம் மத்தியிலும் பல சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பலர் உருவாக்கப்படவேண்டும். அதற்காக இன்று நம்மை ஆண்டவர் கைகளில் ஒப்புக்கொடுக்க நாம் ஆயத்தமா? தேவன்தாமே நம்மைப் பெலப்படுத்துவாராக.
ஜெபம்: “சர்வ வல்லமையுள்ள தேவனே, உமக்காக உறுதியான சாட்சியாக என்றைக்கும் நிலைத்து நிற்க எனக்கு அருள் செய்வீராக. ஆமென்.”