ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 வியாழன்

“.. ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (ஆதி.2:18) என்ற வாக்குப்படியே ஆதியிலே குடும்பத்தை ஏற்படுத்தின தேவன் திருமணத்திற்கு காத்திருக்கும் 19 நபர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற துணையைக் காண்பித்து தேவைகளைச் சந்தித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.

உபத்திரவத்தால் பிரிக்கமுடியாது

தியானம்: செப்டம்பர் 18 வியாழன்; வாசிப்பு: ரோமர் 8:28-39

“உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்,
அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்…”
(ரோமர் 8:35).

“உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே”. இவ்வண்ணமாய் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்திலே குறிப்பிட்டுள்ளார். அதாவது, எந்நிலை வந்தாலும், எந்த உபத்திரவம் ஏற்பட்டாலும், நாம் எந்நிலைக்குத் தள்ளப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் நம்மிலே அன்புகூருகின்ற தேவனாலே நாம் ஜெயங்கொள்ளமுடியும் என்பதை நமக்கு ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார் பவுலடியார்.

உபத்திரவங்கள் வரும்போது தேவனைக் கிட்டிச்சேருவோரும் உண்டு; அதேவேளை அவரை விட்டுவிட்டு வழிவிலகுவோரும் உண்டு. நாம் தேவன்மீது வைத்திருக்கும் அசையாத விசுவாசமும், அவர்மீது கொண்டுள்ள ஆழமான அன்புமே, உபத்திரவங்களில் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது காத்துக்கொள்ளும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, பிதாவின் சித்தத்தைச் செய்வதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார். பிதாவின் சித்தத்தைப் பூரணமாக நிறைவேற்றுவதற்காக அவர் எத்தனையோ பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவித்தார். ஏசாயா தீர்க்கர் இயேசுவைக் குறித்துக் கூறும்போது, “..தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” எனக் குறிப்பிடுகிறார். தேவகுமாரனாகிய அவரே இத்தனை உபத்திரவத்தின் பாதையில் போனதுண்டானால் பாவிகளாகிய நாம் எம்மாத்திரம்? எந்த உபத்திரவமும் ஆண்டவரை அவரது தந்தையின் அன்பைவிட்டுப் பிரிக்கவில்லை. அதுபோலவே எந்த உபத்திரவமும் நம்மைக் கிறிஸ்துவின் அன்பைவிட்டுப் பிரிக்கக்கூடாது, பிரிக்கவும் முடியாது என்ற உறுதி பவுலுக்கு இருந்ததைப்போல நமக்கும் வர வேண்டும். ரோம.12:12 இல் பவுல் இவ்விதமாய் எழுதுகிறார்: “உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்”. உபத்திரவங்கள் நம்மை இன்னமும் தேவனுக்குரியவர்களாய் உருவாக்கும். எனவே அவற்றைப் பொறுமையோடு சகித்துக் கொள்ளப் பழகிக்கொள்ளுவோம்.

இதை வாசிக்கும் நம்மில் பலரும் பல உபத்திரவங்கள் வழியாகச் சென்று கொண்டிருக்கலாம். உபத்திரவங்களிலிருந்து எப்படி மீளுவது என்று போராடிக் கொண்டும் இருக்கலாம். கலங்காதிருங்கள்! இயேசுவையே நோக்கிப் பாருங்கள். உபத்திரவங்களை ஜெயித்த ஜீவனுள்ள தேவனையே நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களுக்குப் பெலனளிப்பார். அவரது அன்பைவிட்டு எந்த உபத்திரவமும் என்றுமே நம்மைப் பிரிக்காது காத்துக்கொள்வார்.

ஜெபம்: “பிதாவே, உபத்திரவங்களில் ஒடிந்துபோகாமல் வாழ என்னை உமது கைகளில் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.”