ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 ஞாயிறு
“கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (சங்.105:2) இவ்வாக்கைப்போலவே இந்த மனமகிழ்ச்சியின் நாளைத் தந்த தேவனை ஸ்தோத்திரித்து, கர்த்தர் செய்த அதிசயங்களையெல்லாம் எண்ணி எண்ணி ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்.
துன்பம் ஏன்?
தியானம்: செப்டம்பர் 21 ஞாயிறு; வாசிப்பு: 1பேதுரு 1:1-9
“…உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து
வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும்
மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேதுரு 1:7).
நன்றாகக் கொதித்த தண்ணீர் ஆறியதும் குடிக்கக்கூடிய நல்ல தண்ணீராவது எப்படி? அதிலுள்ள மாசுக்கள், கிருமிகள் யாவும் அகற்றப்படுவதாலே தானே. பொன், வெள்ளி, இவைகளை அக்கினியாலே சுட்டெரிப்பது ஏன்? சோதிக்கப்பட்டு, அசுத்தங்கள் களையப்பட்டு மிளிர்வதற்காகவேதானே. இப்படியிருக்க, பலவிதத்தில் மாசடைந்த நமது விசுவாசம் எப்படிப் போற்றத்தக்க விசுவாசமாகும். அழிந்துபோகும் பொன்னைப் புடமிடவும், அருந்தும் நீரைச் சுத்தப்படுத்தவும் நெருப்பு தேவையென்றால், அழியா விசுவாசத்தைத் தூய்மைப் படுத்துவதற்கு புடமிடுகின்ற துன்பம் தேவையல்லவா? விசுவாசத்தைப் பரீட்சித்து சுத்தப்படுத்த துன்பம் மிகவும் அவசியமானது.
“பாவமில்லாத குமாரன் தேவனுக்கு இருந்திருப்பினுங்கூட, துன்பம் அனுபவியாத குமாரன் இல்லை” என்ற சார்ளஸ் ஸ்பார்ஜனின் கூற்று மிகவும் உண்மையானதே. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடைய தகுதியைத் தேர்வு பரீட்சிப்பது போல, துன்பம்தான் ஒருவரது விசுவாசத்தைப் பரீட்சிக்கும் வினாத்தாள் ஆகும். புதிய விசுவாசிகள் தாங்கள் எவ்வித விசுவாச நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் பணிப் பொறுப்புக்களை எடுத்து, அதை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து, தோல்வி கண்டு, சீரழிந்துபோய் விசுவாச வாழ்க்கைக்கே முழுக்குப்போட்ட பல சம்பவங்கள் உண்டு.
பலவித துன்பங்களினூடாகச் சென்ற தாவீது, பாவம் செய்திருந்தாலுங்கூட அதிலிருந்து விடுதலைபெற்று, தேவனுடைய இருதயத்துக்கு சமீபமானவராகி, தன் அரசாட்சியை செம்மையாய் கவனித்து, அதைப் பொறுப்பாக ஒருவரிடம் ஒப்படைத்து, தேவனுக்கு நன்றிப்பாடல் பாடியவராக தன் ஓட்டத்தை முடித்தார். ஆனால், எந்தவித துன்பமும் இல்லாமல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, ஞானமும் செல்வமும் பெற்ற அவரது மகனான சாலொமோனோ, தேவாலயத்தைக் கட்டி னாலுங்கூட, தேவனைவிட்டு வழிவிலகிப் போய், அசுத்த தேவர்களுக்கெல்லாம் ஆலயங்கள் கட்டினான், புறஜாதியை சேர்ந்த மனைவியரையும் கொண்டு, பொறுப்பற்ற ஆட்சியையும் நடத்தி, இராஜ்ஜியம் பிளவுபடக் காரணமானார்.
இறுதியிலே கொலைவெறி மனநிலையுடன் மரணமடைந்தார் (1இராஜா. 11:40). சாலொமோனின் இருதயம் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாய் இருக்கவில்லை (1இராஜா.11:4). சோதிக்கப்படாத விசுவாசத்தால் என்ன பயன்? விசுவாசப் பரீட்சையிலே வெற்றி பெறத்தக்க அளவுக்கு விசுவாசப் பரீட்சையில் தேறியிருக்கிறோமா என்பதை ஆராய்ந்து, நம்மைத் தேவனுக்கு முன்பாகத் தாழ்த்துவோமா?
ஜெபம்: “பிதாவே, எனக்குத் தாழ்மையின் ஆவியைத் தாரும். உமக்காக உத்தமமாய்ப் பணிசெய்ய என்னை ஏவியருளும். ஆமென்.”
செல்வ வறுமையும், வறுமைச் செல்வமும்
தியானம்: செப்டம்பர் 21 ஞாயிறு; வாசிப்பு: யாக்கோபு 2:9-12
“சோதனையைச் சகிக்கிற மனுஷன் …உத்தமனென்று விளங்கின
பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்
தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக்.1:12).
வாடி வதங்கிக் காணப்படும் சில தாவரங்கள், மழை பொழியும்போது புத்துணர்ச்சி பெறும். வெயில் வரும்போது அவை மீண்டும் களைகட்டி வளரும். ஆனால் பூக்களின் அழகு எதுவரைக்கும் இருக்கும்? அது உதிர்ந்து போகும் வரைக்குந்தானே. சில பூக்கள் பருவகாலம் வரும்போது கொத்துக்கொத்தாய் பூத்துக்குலுங்கும். ஆனால், வெயில் காலத்திலோ பூ உதிர்ந்து மொட்டையாக, காண சகிக்காத தோற்றம் பெறுவதும் உண்டல்லவா? இப்பூக்களைப் போன்றதுதான் செல்வச் செழிப்பும். அது வளர்ச்சி தராது. துன்ப வெயிலில் வாடி வதங்கி விடும். இதுதான் செல்வத்தின் வறுமை. செல்வத்திலே செழித்து வளரும்படி வாஞ்சைகொண்டு தேவனுடைய வழிகளைவிட்டு விலகி, போதை வஸ்து கடத்தல்களாலும், விபசாரங்களாலும், பல்வேறு மோசடிகளாலும் திடீர் பணம் சம்பாதித்து பூத்துக் குலுங்குவதும் இதுபோன்றதுதான். அவை பார்வைக்கு அழகாக இருக்கும். ஆனால், அது எவ்வித வளர்ச்சியையும் தராது. துன்ப வெயிலில் அவை வாடி வதங்கிப்போகும். மறுபுறத்திலே, வறுமையிலும் தாழ்மையிலும் உழல்வோர் தாவரங்களைப் போன்றவர்கள். தாவரங்கள் வளர்வதைப் போல தேவன் அவர்களை உயர்த்துவார். அதுதான் வறுமையின் செல்வம்.
பண பலத்தை வெளிப்படுத்தும் வாழ்வுமுறையை முன்னுரிமைப்படுத்தும் இவ்வுலகின்போக்கு நாம் அறியாததல்ல. கிறிஸ்தவ உலகிலுங்கூட வறுமையில் வாழ்ந்தாலும், பண பலத்தை வெளிப்படுத்தி பகட்டு வாழ்வாகப் பூத்துக் குலுங்கும் விசுவாசிகளும் உண்டு. உலகின் போக்குக்கு இசைந்துபோய், அதற்கேற்ற வேஷம் தரித்து, மரமில்லாமல், வளர்ச்சி இல்லாமல் பூக்க நினைக்கும் விசுவாசிகளை என்னவென்பது? கடன் வாங்கி கேமரா, கையடக்கத் தொலைபேசி வாங்குவதும், ஒய்யார வாழ்வு வாழ்வதும், செலவுகள் செய்வதும் பின்பு கடனாளியாகி வாழ்வெல்லாம் கடனாளியாகவே கழிப்போர் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். தேவனுக்குள் பணக்காரர்களாக வளர்வதையே தேவன் வாஞ்சிக்கிறார். அவர்கள் “இறுமாப்பான சிந்தை இல்லாமலும், ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும் தேவன்மீது நம்பிக்கை கொண்டோராயும், நன்மை செய்வோராயும், நற்கிரியைகளிலே ஐசுவரியராயும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களாயும், உதார குணமுள்ளவர்களாயும், நித்திய ஜீவனை பற்றிக் கொள்ளும்படி நல்ல ஆதாயம் தேடுவோராயும்” (1தீமோ.6:17-19) இருப்பார்கள். அவர்கள் ஜீவ கிரீடத்தைப் பெறுவார்கள்.
இப்போ நாம் யார்? நமது நிலைமை என்ன? நாம் பணக்கார ஏழைகளா? ஏழைப் பணக்காரரா?
ஜெபம்: “தேவனே, வறுமை ஊடாக வாழ்ந்தாலும் உமக்குள் செழிப்படைந்து வளரும் உயர்வை வாஞ்சிக்க என்னை நீர் தாமே வழிநடத்தும். ஆமென்.”