ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 வெள்ளி

2014ஆம் ஆண்டின் 10 மாதங்களை கர்த்தருடைய கிருபையால் கடந்துவர கிருபை செய்த தேவனை நன்றி நிறைந்த இதயத்தோடு ஸ்தோத்திரிப்போம். ஒவ்வொரு நாளும் நித்திய ஜீவ வார்த்தைகளாலே நம்மைப் போஷித்து பிழைப்பூட்டின கர்த்தருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஜெபிப்போம்.

நம்பக்கூடிய ஒருவர்!

தியானம்: அக்டோபர் 31 வெள்ளி; வாசிப்பு: 2சாமுவேல்13:1-6, 28

“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன்
நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன்
பாக்கியவான்” (எரேமியா 17:7).

“என் தவறான நடத்தையால் சில குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளேன். அவர்களை உயிரோடே கொன்றிருக்கிறேன். அன்று நல்லா லோசனை தருவதற்கு எனக்கு யாரும் இருக்கவில்லை” என்று தன் எழுபதாம் வயதில் ஒரு முதியவர் கலங்கியதைக் கண்டேன். “ஆனாலும், தேவன் என் மீதும் இரக்கமாயிருந்தார். என் கண்ணீரைக் கண்டு, என்னால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆசீர்வதித்தார்” என்றார் நன்றியுடன்.

அழிந்து போகவோ, பிறரை அழிக்கவோ, அழிவுக்குள்ளாக்கவோ நமது வாழ்வு இல்லை. தாவீதின் மகன் அம்னோனுக்கு ஆலோசனைக்கூற ஒரு நண்பன் இருந்தான். ஆனால் நடந்தது என்ன? அம்னோன், தாவீதின் மகன் அப்சலோமின் மகள் தாமார்மீது மோகங்கொண்டான். அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய அவனுக்கு மனதில்லாதிருந்தது நல்ல விஷயம். ஆனால், இவன் தன் மனப்போராட்டத்தைத் தப்பான ஒரு நண்பனிடம் பகிர்ந்துகொண்டது தப்பாகிவிட்டது. யோனதாப், அம்னோனின் தப்பான ஆசைக்கு உரமூட்டிவிட்டுத் தப்பித்துக்கொண்டான். அதில் விழுந்த அம்னோன் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டு அழிந்துபோனான்.

தேவபிள்ளையே, கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இவ்விதமாக கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றவே அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால், அந்த பாரஞ்சுமத்தலே அடுத்தவனுக்குச் சுமையாகிவிட நாம் காரணராகக்கூடாது. இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் யாரோ தேவைப்படுகிறார்கள். அதிலும் இன்றைய வசதி வாய்ப்புகள் தடையின்றி மனுஷ உதவியை நாட வழிவகுத்திருக்கிறது. அவசரத்தில் யாரிடம் உதவிக்காகப் போகிறோம் என்றுகூட சிந்திப்பதில்லை. ஆவிக்குள்ளாக நடத்துவதாகச் சொல்லி ஏமாற்றவும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இன்னொருவரிடம்; ஆறுதலைத் தேடும்போது, தன்னில்தானே நிறையவே குறைகளுள்ள ஒருவரிடமே நாம் நிறைவைத் தேடுகிறோம் என்பதுதான் உண்மை. “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” (சங்146:3). எவரும் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒருவர் நமக்கிருக்கிறார்.

நமது பாரங்களின் சுமை எவ்வளவு என்பதை அறியவோ சுமக்கவோ அவரே தகுதிவாய்ந்தவர். ஏனெனில் அவர் நமக்காக அடிக்கப்பட்டவர். ஆலோசனையோ ஆறுதலோ தேவையானால் முதலில் சிலுவையை நோக்கிப் பார்ப்போமாக. அங்கிருந்து நிச்சயம் நமக்குச் சரியானதொரு வழிநடத்துதல் கிடைக்கும்.

ஜெபம்: “பிதாவே, எந்த சூழ்நிலையிலும் உம்மை நோக்கவும், பிறரையும் சிலுவையை நோக்கி வழிநடத்தவும் நீர் என்னைக் கிருபையாய் நடத்தும். ஆமென்”

ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 வியாழன்

“.. உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (ஏசா.30:18) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 12 குடும்பங்களில் கர்த்தர் அவர்களுக்கு விசுவாசத்தைப் பெருகச்செய்து வேண்டிய நன்மைகளால் அவர்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

கேட்பதா? சுமப்பதா?

தியானம்: அக்டோபர் 30 வியாழன்; வாசிப்பு: கலாத்தியர் 6:1-5

“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே
கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்”
(கலாத்தியர் 6:2).

ஒருவர் பாரத்தைக்குறித்துக் கேட்க யாரும் மறுப்பதில்லை; ஆனால், அதை சுமக்கிறவர்கள் எத்தனைபேர்? தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ள இந் நாட்களில் அடுத்தவன் பாரத்தைக்குறித்து வெகுவேகமாக ஏராளமானபேர் அறிந்துவிடுகிறார்கள். ஆனால், எத்தனைபேர் உண்மையான உள்ளத்தோடு கடைசிவரைக்கும் அவர்களுடன் அந்தப் பாரத்தைச் சுமந்து, இடைவிடாத ஜெபத்தில் தாங்கி, அவர்களை விசாரித்து, அவர்களுடைய குறைகளில் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள்?

கிறிஸ்துவுக்குள்ளான விடுதலை பெற்ற எவனும் தான் சுயாதீனன், எவருடைய உதவியும் தனக்கு அவசியமில்லை என்று வாழமுடியாது. அதே சமயம், தேவையிலுள்ளவனுக்கு உதவி செய்வதற்கு பின்நிற்கவும் முடியாது. தேவபிள்ளைகள் ஒன்றிணைந்து பணிபுரியும்போதுதான் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை வளருகிறது. அதில் ஒரு அவயவம் புண்பட்டாலும், புண்பட்டவனை மற்றவர்கள் மேலும் குற்றப்படுத்தி, தூஷித்துத் தள்ளிவைத்தாலும், கிறிஸ்துவின் சரீரமே காயப்படுகிறது. கலாத்திய சபையிலிருந்த யூத கிறிஸ்தவர்கள், யூத சடங்காசாரங்களை மையப்படுத்தி புறவின கிறிஸ்தவர்களை அப்படியேதான் நடத்தினார்கள். அதேசமயம், குற்றத்தில் அகப்படுகிற சகோதரனுக்கு உதவி செய்யும்போது, அவனைத் தூக்கிவிடுகிறதற்குப் பதில், இவனும் அவனுடன் சேர்ந்து விழுந்துவிடக்கூடிய அபாயமும் உண்டு. ஆகவே, குற்றப்படுத்தினாலும், நாமே விழுந்துவிட்டாலும் அது கிறிஸ்துவையே காயப்படுத்துகிறது என்பதை பவுல் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தேவபிள்ளையே, நாம் தனித்தவரோ, தனித்து இயங்குபவரோ அல்ல. நமக்காக ஜெபிக்கவும் நம்மைத் தாங்கவும் யாரோ தேவை. அதேபோல, அடுத்தவருக்கும் நாம் தேவை. வெறுமனே பிரச்சனைகளைக்கேட்டு அதனை அடுத்தவருக்கு கடத்துவதிலும், ஜெபிப்பதிலும் மாத்திரம் நிறைவுகாணாமல், புறப்பட்டுப்போய் தேவையிலுள்ளவர்களை ஆற்றித்தேற்றி ஆறுதல்படுத்தவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். கிறிஸ்து பரலோகில் இருந்தவண்ணமே நம்மை இரட்சிக்கவில்லை. அவர் நம்மைத் தேடி வந்தார். ஜெபஊழியம் மிக கட்டாயமானது. ஆனால் அதேயளவு நாம் பிறரைச் சந்தித்து அரவணைத்து ஆறுதல்படுத்தி உற்சாகப்படுத்துவதும் மிகவும் அவசியம். ஜெபிக்கும்போது தாங்குகிறோம்; நேரில் விசாரிக்கும்போது பிறர் பாரத்தில் பங்கெடுக்கிறோம். தூக்கியெடுக்கவேண்டிய நாம், அவர்களுடன் விழுந்துவிடாதபடிக்கு ஜாக்கிரதையாக இருப்போமாக. கிறிஸ்துவின் சரீரம் நம்மால் துன்பப்படக்கூடாது.

ஜெபம்: “என் பாரங்களைச் சுமந்து தீர்த்த கர்த்தாவே, பிறரின் பாரங்களை உண்மையாகவே சுமந்து ஆறுதல்படுத்த என்னை வழிநடத்தும். ஆமென்”.