ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 வெள்ளி

“புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள்” (அப்.13:48) என்ற வாக்குப்படியே 2015ஆம் வருட காலண்டர் வசனங்கள் மூலமாக கர்த்தர் நாமம் மகிமைப்பட, அச்சுப்பணிகளுக்காக கருத்தாய் ஜெபிப்போம்.

உள்ளத்தின் வெற்றிடம்

தியானம்: அக்டோபர் 3 வெள்ளி; வாசிப்பு: ஆதியாகமம் 1:26-31

“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்”
(ஆதியாகமம் 1:27).

‘என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை; எனக்கு மதிப்பே இல்லை’ என்றெல்லாம் வாழ்வில் ஒரு தடவையாவது மனமடிவுக்குள்ளாகாத எவருமே இருக்கமுடியாது எனலாம். அதேசமயம், வாழ்வில் நெருக்கங்கள் ஏற்படும் போது, ‘நான் எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்?’ என்ற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. ஒரு ரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு இராணுவ வீரர், இந்தியாவின் எல்லையில் தன் உயிரையே பணயம் வைத்துப் போராடுபவர், ஒரு பிள்ளைக்குத் தந்தை. அவர் இதே கேள்விகளைக் கேட்டார். மனுஷனுடைய படைப்பு, ஒரு கருவிலிருந்து எப்படி மனிதன் உருவாகிறான், அவனுடைய உருவை கருவிலே முதலில் காண்கிறது யார் என்ற சத்தியங்களைச் சொல்லக் கேட்ட அவர், “நான் இவ்வளவு ஆச்சரியமாகப் படைக்கப்பட்டேனா? தமது சாயலில் தமக்காக என்னைப் படைத்த அந்தக் கடவுள் யார்?” என்று அவர் கேட்ட கேள்வி இன்னமும் எனது காதுகளில் ஒலிக்கிறது.

மனுஷனுடைய மனதின் ஆழத்தில் ஒரு வெற்றிடம், ஒரு ஏக்கம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சிலசமயம் அதை நாம் உணருவதில்லை. பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் நம்மை ஏன் கடவுள் வைத்திருக்கிறார் என்று வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது நமக்கு கேட்கத் தோன்றும். அடிக்கடி உடைவுக்குள்ளாகும் உலக உறவுகளின் மத்தியில், பாசம் அன்பு சமாதானத்துக்காக உள்ளம் அலைமோதுகிறது. இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனையோ பேர் அப்படிப்பட்ட மனநிலையிலே இருக்கக் கூடும். பலவேளைகளிலும் மனதின் ஆழத்தில் இந்த எண்ணங்களை அமுக்கிப் போடுகிறோம். நமக்குள் இருக்கும் வெறுமை என்ன என்பதை உணராமல், அற்ப உலக சந்தோஷங்களால் அதை நிரப்பப் பார்க்கிறோம். நாமே உறவுகளைத் தேடி உலகில் அலைந்து தப்பான வழிகளில் விழுந்துபோகிறோம்.

ஆனால், உண்மை நிலை என்ன? தேவன் தமது சாயலில், தமக்கென்று, தம்முடைய மகிழ்ச்சிக்காக கிறிஸ்துவுக்குள் நம்மைப் படைத்தார். அதனால், அவர் பேரில் ஒரு வாஞ்சை பற்றுதல் நமக்குள் தானாகவே ஊற்றெடுக்கிறது. இதுதான் சத்தியம். பல நூற்றாண்டுகளின் முன் வாழ்ந்த ஒரு அடியான், இந்த தேடுதலின் முடிவில், “கர்த்தாவே நீர் என்னை உமக்காகவே படைத்தீர், எனது இருதயம் உம்மில் இளைப்பாறுதலைக் காணும்வரை ஒருபோதும் இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ளாது” என்றதொரு ஜெபத்தை எழுதிவைத்தார். இதுதான் உண்மை. நமது உள்ளத்தில் உள்ள வெறுமை, ஏக்கம், யாவும், நாம் தேவனில் இளைப்பாறும்வரை நிரம்பாது. அது நிரம்பும் போது, உலக உறவுகள் தானாகவே சரியாகும்.

ஜெபம்: “பிதாவே, எனக்குள் உள்ள வாஞ்சையை உணராது வாழ்ந்ததை மன்னித்து, உம்மில் இளைப்பாறுதல் பெற இன்றே என்னை நிரப்பும். ஆமென்.”