ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 ஞாயிறு

“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச.4:3) இந்தநாள் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் தேவனுடைய பரிபூரண சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு நம்மை அர்ப்பணித்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரை சேவித்திட ஜெபிப்போம்.

கிருபாதார பலி

தியானம்: அக்டோபர் 5 ஞாயிறு; வாசிப்பு: 1யோவான் 4:7-10

“…நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதார
பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே
அன்பு உண்டாயிருக்கிறது” (1யோவான் 4:10).

ஒரு கார்ட்டூனில், “கடற்கணவாய் போன்றதொரு பிரம்மாண்டமான உருவம் தன் வெளி நீண்ட அவயவங்களை அசைத்து அசைத்து கோட்டை வாசலை அடைத்தபடி யாவரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. கோட்டைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ராஜகுமாரத்தியை மீட்கவேண்டுமானால் இந்த மிருகத்திற்கு மனித இரை வேண்டுமாம். இந்த மிருகத்திற்குத் தன்னை இரையாக்க யார்தான் முன்வருவார்? ஆனால், மனித இரத்தத்தைக் கண்டவுடன் இந்த மிருகம் இறந்துவிடும் என்ற இரகசியம் யாருக்கும் தெரியாதாம். தன்னுயிரைக் கொடுத்தாவது ராஜகுமாரத்தியை மீட்க வந்தான் ஒரு ராஜகுமாரன். எதேச்சையாக மிருகத்தின் ஒரு நீண்ட அவயவம் அவனைக் காயப்படுத்த இரத்தம் கொட்டுகிறது. அதைக்கண்ட அந்த இராட்சத மிருகம் துடிதுடித்து மாண்டதாம். ராஜகுமாரன் ராஜகுமாரத்தியை மணந்து, இருவரும் காலமெல்லாம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.” இது சிறுபிள்ளைகளின் வெறும் கற்பனைக் கார்ட்டூன்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சில காரியங்கள் மனதில் தோன்றின.

மனிதனைக் கவர்ந்திழுக்கும் பாவத்தின் கொடூரம் மகா பயங்கரம். அது தேவனைவிட்டு நம்மை முற்றிலும் பிரித்துப்போடுகிறது. தேவகோபம் பற்றி எரிய பாவமே காரணமாயிற்று. தேவனின் இந்த நியாயமான கோபத்தை தணிப்பது யார்? பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைச் சந்தித்து, பரிசுத்த இரத்தம் சிந்தி, மரணத்தின் கூரை ஒடித்து, அதற்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதனை விடுவிக்கும்படி தமது ஜீவனைக் கொடுக்கத் தாமாகவே முன்வந்தது யார்? இயேசு சிலுவையில் எதைச் செய்துமுடித்தார் என்ற இறையியலின் மூலாதாரமே “கிருபாதார பலி” ஆகும். மனித பாவத்தினால் பரிசுத்த தேவனுக்கு உண்டான நீதியான கோபத்தை நிவிர்த்தியாக்க கிறிஸ்து சிலுவை மரணத்தைத் தாமே ஏற்றார். இதற்குப் பதிலாக மனிதன் அவருக்கு எதைக் கொடுக்கமுடியும்? பாவத்தின் கொடூரத்தால் பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்த நம்மை, இக் கிருபாதார பலியே மறுபடியும் அவருடன் ஒப்பரவாக்கிற்று.

ஆனால், எந்த நிலையில் இயேசு இதனை நிறைவேற்றினார் என்பதைச் சிந்திக்கவேண்டும். மக்களின் புறக்கணிப்பு, நண்பனின் துரோகம், நம்பியிருந்தவனின் மறுதலிப்பு, கசையடி, பரிகாசம், முள் முடி, இத்தனைக்கும் மத்தியிலுமே இயேசு தம்மைக் கிருபாதார பலியாக ஒப்புவித்தார். இதுவே எதனையும் எதிர்பாராத ‘அகாபே’ அன்பு. நம்மில் இத்தனை அன்பு வைத்த தேவனுக்கு நாம் பதில் செய்யமுடியாவிட்டாலும், அவருடைய பிள்ளைகளாகிய நாம், அவர் நம்மில் வைத்த அன்பின் ஒரு துளியையாவது பிறரில் காட்டுவோமானால் அதுவே பெரிய காரியம்.

ஜெபம்: “பிதாவே, பாவியாய் துரோகியாய் இருக்கும்போதே என்னை நேசித்தீர், நானும் பிறரில் உண்மையாய் அன்புகூர என்னை வழிநடத்தும். ஆமென்.”