ஜெபக்குறிப்பு: ஜூலை 31 வியாழன்
“இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும் சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக” (கலா.6:17) என்ற வாக்குப்படியே அவரது பிரமாணத்தின்படி நடந்து, அவரது சித்தத்தின்படி செய்கிறவர்களாய் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
பலுகிப் பெருகக்கடவது
தியானம்: ஜூலை 31 வியாழன்; வாசிப்பு: ஆதியாகமம் 8:15-19
“… அவைகள்பூமியிலே திரளாய் வர்த்தித்து,
பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்”
(ஆதியாகமம் 8:17).
தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பேழையைவிட்டு வெளியேறிய நோவாவுக்குக் கர்த்தர் புதிய வாழ்வையும் வாக்குத்தத்தத்தையும் கொடுத்தார். இந்தப் பூமியிலே திரளாய் பலுகிப் பெருகுங்கள் என்ற கட்டளை மறுபடியும் மனிதனுக்குக் கொடுக்கப்படுகிறது. முதலில் இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றது ஆதாம், இப்போது அதே ஆசீர்வாதத்தை நோவா தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறான். நோவா உயர்ந்த உன்னத நோக்கத்திற்காக தேவனால் காப்பாற்றப்பட்டவன். அந்த உன்னதமான வாழ்வை வாழ்ந்து, தேவ சித்தத்தை நிறைவேற்றுவதே நோவாவின் பணியாக இருந்தது.
நோவா எப்படி அழிந்து போகாமல் காப்பாற்றப்பட்டானோ, அவ்வாறே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளைகளும் பாவம் என்ற பெருவெள்ளத்தில் இருந்து தேவனால் இன்று காப்பாற்றப்படுகின்றனர். நோவாவைப்போல நாமும் தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து, அவரது சித்தத்தை நிறைவேற்றும் பணியைச் செய்ய வேண்டுமென்பதே தேவன் நம்மில் வைத்திருக்கும் நோக்கமாகும். நாம் ஆவிக்குரிய புதியதொரு வாழ்க்கையை வாழவேண்டும், தம்மையே ஆராதித்து, தமக்கே சாட்சியாக வாழவேண்டுமென்பதே தேவன் நம்மைக் குறித்து வைத்திருக்கும் சித்தம். அன்று தேவனே நோவாவைத் தெரிந்துகொண்டார். இன்று நம்மையும் தேவனே கிருபையாய்த் தெரிந்தெடுத்து இரட்சித்திருக்கிறார். இதனையே, “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்… நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.” என்று இயேசு கூறினார் (யோவான் 15:16).
அருமையானவர்களே! தேவன் நம் ஒவ்வொருவரையும் பாவம் என்ற பெரு வெள்ளத்திலிருந்து தூக்கியெடுத்து காப்பாற்றியுள்ளார். நமக்குக் கொடுக்கப்பட்ட இரட்சிப்பு ஒரு நோக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது. நான் உங்களைத் தெரிந்துகொண்டது கனி கொடுப்பதற்கும், அக் கனிகளில் நிலைத்திருப்பதற்கும் என்று ஆண்டவர் கூறியுள்ளார். ஆகவே, தேவனின் இந்தக் கிருபையைத் துச்சமாக எண்ணாமல், அவர் நம்மை இரட்சித்த நோக்கத்தை நிறைவேற்ற இன்றே நம்மை ஒப்புவிப்போமாக. அன்று பூமியை நிரப்பும்படி நோவாவை ஆசீர்வதித்த தேவன், இன்று தமது ராஜ்யத்தைக் கட்டியெழுப்பும்படிக்கும் அதை மக்களால் நிரப்பும்படிக்கும் நம்மை ஆசீர்வதிக்கிறார். அவருடைய வாக்குறுதிகளும், பிரசன்னமும் நமக்கு என்றும் உண்டு. ஆகவே, தைரியமாக முன்செல்லுவோமாக. அவர் நம்மில் கொண்டுள்ள சித்தத்தை நிறைவேற்றுவோமாக.
ஜெபம்: “பிதாவே, நீர் என்னில் கொண்டிருக்கும் சித்தத்தை உணர்ந்து, உமக்கு மகிமையுண்டாகும்படி ஜீவிக்க என்னையே அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”
வாக்குத்தத்தம்: ஜூலை 30 புதன்
.. நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப். 20:24)
ஜெபக்குறிப்பு: ஜூலை 30 புதன்
பலவிதமான குடும்ப சூழ்நிலையின் நிமித்தம் முதியோர் இல்லங்களில் இருக்கும் பெற்றோர்களின் சமாதானத்திற்காகவும் அவர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அன்பான சூழ்நிலைகளால் பராமரிக்கப்பட, அவர்களது சுகபெலனுக்காக தேவ அன்பினால் நிரப்பப்பட, அவர்களது தேவைகளுக்காக ஜெபிப்போம்.
பலிபீடம்
தியானம்: ஜூலை 30 புதன்; வாசிப்பு: ஆதியாகமம் 8:18-22
“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி…
பலியிட்டான்” (ஆதியாகமம் 8:20).
பலிபீடம் என்பது, பலி செலுத்தும் இடம். இது தேவனைச் சந்திக்கும் இடமாகவும் கருதப்பட்டது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் செலுத்தப்பட்ட பலிகள் பாவத்தை முற்றிலும் கழுவி சுத்திகரிப்பதாக இருக்கவில்லை. அவைகள் கிறிஸ்துவின் பலியை முன்னடையாளமாகக் கொணடிருந்தன (எபி.10:10-12). நோவா தன் குடும்பத்தோடு, வெள்ளத்தால் சுத்திகரிக்கப்பட்ட புதிய பூமிக்குள் காலடி எடுத்துவைத்தபோது, இனி என்னவாகுமோ, எப்படி வாழப்போகிறோமோ என்ற சிந்தனைகள் எழாமல் இருந்திருக்க முடியாது. ஆனால், அவனது முதல் சிந்தனை தேவனைப் பற்றியதாகவே இருந்தது. தன்னையும் குடும்பத்தையும், தேவன் படைத்த சகல ஜீவராசிகளினதும் வித்துக்களையும் காப்பாற்றிய தேவனுக்கு நன்றி செலுத்துகின்ற ஒரே எண்ணமே நோவாவை நிறைத்திருந்தது. அவன் அப்படியே செய்தான். கர்த்தரும் அதில் மகிழ்ந்தார்.
ஆம், தன்னைப் பாதுகாத்து, புதிய வாழ்வை அருளிய தேவனை ஆராதிப்பதையே முதலாவதாகத் தெரிந்துகொண்டான் நோவா. அந்தப்படியே, தேவனுக்குப் பலிபீடம் கட்டி தகனபலியைச் செலுத்தினான். முதலாவது தேவனுடைய காரியங்களைக் குறித்து நோவா கரிசனைப்பட்டதால், தேவனும் நோவாவுக்கு வேண்டிய ஆகாரத்தையும், பாதுகாப்பையும், வாக்குத்தத்தங்களையும் அருளினார். “முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு கூறியதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்தி கொள்வோம்.
அருமையானவர்களே! நமது வாழ்விலும் நோவாவுக்கு ஏற்பட்டதுபோல புதிய அனுபவங்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எதற்கு முதலிடம் கொடுப்போம்? நம் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் தேவை என்று நமது பரமபிதா அறிந்திருக்கிறார் (மத்.6:32) என்ற விசுவாசமும் நம்பிக்கையும் நமக்கு இருந்தால், அந்தப் பரமபிதாவைத் தேடுவதையே நமது முதலாவது காரியமாகக் கொள்வோம். அந்த விசுவாசம் நம்மிடம் உண்டா? எந்த வேளையிலும் கர்த்தருக்கு நன்றி பலியைச் செலுத்தி ஆராதிக்க நாம் கற்றுக்கொள்வது மிக அவசியம். ஏனெனில், நாம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்வது தேவனுடைய சுத்த கிருபை. இன்று பலிபீடம் கட்டி மிருகங்களைப் பலிகொடுப்பது அல்ல; இன்று நமது இருதயமே பலிமேடை. நம்மையே அதின்மேல் கிடத்தி, ஆண்டவரே, ஏற்றுக் கொள்ளும் என்று நம்மையே ஜீவபலியாக அர்ப்பணிப்போமாக. அதன் பின்னர், சகலத்தையும் கர்த்தரே பொறுப்பெடுத்து வழிநடத்துவார்.
ஜெபம்: “பிதாவே, என் வாழ்வில் உமக்கே முதலிடம் கொடுத்து, உம்மையே ஆராதிக்க என்னை உமக்கே தருகிறேன். ஏற்றருளும் ஆமென்.”