ஜெபக்குறிப்பு: ஜூலை 14 திங்கள்

சுவிசேஷத்திற்கு மிகவும் வறட்சியான பெரம்பலூர் மாவட்டத்தில் சபை வளர்ச்சிக்கு தடைசெய்கிற இயக்கங்கள் மனிதர்களை கர்த்தர் சந்திக்கவும், ஆலயமற்ற அனைத்து இடங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டு அனுதினமும் சபைக்கு வருகிற மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தக்கதாக கர்த்தர் கிரியை செய்ய ஜெபிப்போம்.

மெத்தூசலா

தியானம்: ஜூலை 14 திங்கள்; வாசிப்பு: ஆதியாகமம் 5:21-27

“ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம்
தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும்,
குமாரத்திகளையும் பெற்றான்.” (ஆதியாகமம் 5:22)

ஆதாம், சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா இந்த பத்து தலைமுறையில் அதிக நாட்கள் வாழ்ந்தவன் மெத்தூசலா ஆகும். இவன் 969 வருடங்கள் உயிர் வாழ்ந்தான். வேதாகமம், ஒரு மனிதனுடைய நீண்ட ஆயுளைக் குறித்து இவ்வாறாகக் கூறுகின்றது. “என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்” (நீதி.4:10). “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” (நீதி.10:27). “.. பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக…” (எபே.6:2,3). மெத்தூசலாவில் இந்த நற்குணங்கள் யாவும் இருந்திருக்க வேண்டும்.

விரைவாக மரிக்கவேண்டுமென்று யார் விரும்புவார்? ஆனால், நீடித்த நாட்கள் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவோ மனமில்லை. பாவம் மனிதனுக்கு மரணத்தைக் கொண்டு வந்தது. அன்றாட வாழ்விலும் அது சரீரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிறது. இன்று பலவிதமான நோய்களுக்குக் காரணம் என்ன? தேவனுடைய வார்த்தைக்குச் செவி கொடுக்காமல் மனிதன் தன் சுயவிருப்பப்படி பாவ வாழ்க்கையில் வாழ்வதேயாகும். இன்று மனிதனைக் கொன்றுவிடுகின்ற நோய்கள் எத்தனை? இருதயத்தில் வஞ்சம் கசப்பு வைராக்கியம் கோபம் இருப்பதால் மனிதன் நிம்மதியாக வாழவோ, தூங்கவோ, உண்ணவோ முடியாமல் தவிக்கிறான். இதனால் குடற்புண், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு என்று பலவித நோய்களுக்கு ஆளாகிறான். இது மனிதனின் ஆயுசு நாட்களைக் குறைத்துவிடுகின்றது.

அருமையானவர்களே! இன்று நம்முடைய ஆயுசு நாட்களைக் குறித்துச் சிந்திப்போம். தேவன் தாம் கூறிய வார்த்தைகளில் என்றும் உண்மையுள்ளவராகவே இருக்கின்றார். ஆகவே, அவருடைய வார்த்தையின்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோமானால், நம்முடைய ஆயுசு நாட்களை அவர் அதிகமாக்குவார். நாம் இன்று தேவனின் சத்தத்தைக் கேட்டு, அவருக்கு பயந்து ஜீவிக்கிறோமா? உண்மையாகவே கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் என்றால், நமது ஆயுசு நாட்களைக் கர்த்தர் பெருகப்பண்ணுவார். (அதற்காக குறைந்த ஆயுசிலே மரிப்பவர்கள் யாரையும் குறைவாக எடைபோடும் பாவம் நமக்கு வேண்டாம்.) நமது வயதான தகப்பனின் வார்த்தைக்குச் செவிகொடுக்கிறோமா? வயதான தாயை மதித்து நடக்கிறோமா? கர்த்தருடைய துதியைச் சொல்லவும், அவருக்கே சாட்சியாக வாழவும், பிறருக்கும் ஒரு பயனுள்ள வாழ்வு வாழவும் நாம் நீடித்த காலம் வாழவேண்டாமா! சிந்திப்போமாக.

ஜெபம்: “பிதாவே, நீர் தந்த நீண்ட ஆயுசை என் சுய ஆசைகளால் இழந்து விடாமல், உமக்கென்று நீண்ட காலம் வாழ கிருபை தாரும் ஆமென்.”