ஜெபக்குறிப்பு: ஜுன் 30 திங்கள்

“.. தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” (நீதி.30:5) என்ற வாக்குப்படி கர்த்தரையே தஞ்சமாக அண்டிக்கொண்ட நமக்கு கர்த்தர் கேடகமாக பலத்த துருகமாக இருந்து, எல்லாச் சத்துருக்களின் கைகளிலிருந்தும் நம்மை விடுவித்து பாதுகாத்தபடியால் நன்றி சொல்லி ஜெபிப்போம்.

மனரம்மியமான வாழ்க்கை

தியானம்: ஜுன் 30 திங்கள்; வாசிப்பு: பிலிப்பியர் 4:10-14

“நான் எந்த நிலையிலிருந்தாலும் மனரம்மியமாய்
இருக்கக்கற்றுக்கொண்டேன்.”
(பிலிப்பியர் 4:11)

தான் எந்த நிலையில் இருந்தாலும், தனக்கிருப்பது போதும் என்ற மனநிறைவோடு ஒருவன் வாழுவானானால் அதனை ‘மனரம்மியமான வாழ்வு’ என்று சொல்லலாம். இந்த மனநிறைவை, சாதகமான வெளிப்புறச் சூழ்நிலையில் வாழுவதை வைத்து மதிப்பிடமுடியாது. மனரம்மியமான வாழ்க்கை என்பது வெளிப்புறச் சூழ்நிலைகளினால் ஆளப்படுகிறதில்லை. அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையில் இதை நாம் கற்றுக்கொள்ளலாம்.

பவுல், சவுலாக இருந்தபோது எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தோடு பெருமைக்குரியவராக வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த நாட்களில், ‘நான் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன்’ என்று அவர் சொல்லவில்லை. இயேசுகிறிஸ்துவுக்காகப் பவுல் வாழ ஆரம்பித்ததும், தனக்குரிய சகல பெருமைகளையும் இழக்க நேரிட்டது. பல பிரயாணங்களை மேற்கொள்ள நேரிட்டது. செல்வச் செழிப்பிலே வாழ்ந்தவர் இப்போது தனது தேவைக்காகக் கூடாரம் செய்யும் தொழில்செய்ய நேரிட்டது. மறுபுறத்தில், அவரைக் கொலை செய்ய வகை தேடுமளவுக்குப் பல எதிரிகள் எழுந்தனர். சுவிசேஷத்தினிமித்தம் பல உபத்திரவங்களை சந்திக்க நேர்ந்தது. அநேகந்தரம் அடிபட்டார், காவலில் வைக்கப்பட்டார், மரண அவதியில் அகப்பட்டார், யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டார், மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டார், கல்லெறியுண்டார் (2கொரி.11:23-27). இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவன், ‘நான் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன்’ என்று மனப்பூர்வமாகச் சொன்னால், அவன்தான் மனநிறைவுடன் வாழுகிறவன்.

மனரம்மியமான வாழ்க்கை என்பது சூழ்நிலையைச் சார்ந்தது அல்ல. பரிசுத்தாவியானவரால் ஆட்கொள்ளப்படுவதற்குத் தன்னை அர்ப்பணித்த பவுல், வெளிப்புற சூழ்நிலைகள் தனது உள்ளான வாழ்வைச் சிதைத்துவிடாதபடி பார்த்துக்கொண்டார். எதிலுமே திருப்தியற்ற மனநிலைமை, பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்தன்மை, தான் விரும்புகிறபடியே எல்லாம் நிறைவாய் இருக்க வேண்டும் என்ற விருப்பம், எதிலும் குறைபிடிக்கும் மனப்பாங்கு, மனரம்மியமான வாழ்வுக்கு இவைதான் எதிரிகள். நாம் ஆண்டவருடைய பிள்ளைகள். அவருக்குரிய அனைத்துமே நமக்குரியவை. அப்படிப்பட்ட ஆண்டவருக்காக ஒரு சிறிதளவேனும் பாடு அனுபவிக்க நமக்கு தருணம் கிடைக்குமானால் அதைப் போன்றதொரு மகிழ்ச்சி வேறென்ன இருக்கமுடியும்! வெளிப்புற சூழ்நிலைகள் இன்று வரும்; நாளை மாறிவிடும். ஆனால், உள்ளான வாழ்வில் இயேசுவை தரித்துக் கொண்டு மனரம்மியமாக வாழுவதே மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.

ஜெபம்: “பிதாவே, எப்போதும், எந்த நிலையிலும் மனரம்மியமாக வாழும்படிக்கு பரிசுத்தாவியானவரால் என்னை நிறைத்து, வழிநடத்தியருளும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: ஜுன் 29 ஞாயிறு

“.. கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்று சொல்லி, அதை மகிமையாக எண்ணவும்..” (ஏசா.58:13) இந்த நாளிலே கர்த்தரை ஆராதிக்க சுதந்தரமற்ற நாடுகளையும் வடஇந்திய மாநிலங்களையும் நினைத்து, எங்கும் பிதாவை தொழுதுகொள்ளும் கிருபையை கர்த்தர் தந்திட ஜெபிப்போம்.

ருசித்துப் பாருங்கள்!

தியானம்: ஜுன் 29 ஞாயிறு; வாசிப்பு: சங்கீதம் 32:1-22

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.”
(சங்கீதம் 34:8)

மேலை நாடுகளில் அநேக சபைகளிலே பல நாட்டவர்கள் ஆராதனையில் கலந்துகொள்வது வழக்கம். அப்படிப்பட்ட சபை கூடுகையில் ஒரு நாளில் ஒரு நாட்டின் உணவு வகைகளைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்வதுண்டு. இப்படியாக அவர்கள் பகிர்ந்துகொள்ளும்போது. “நமது நாட்டின் உணவை உட்கொண்டு பாருங்கள். அது எத்தனை “ருசியானது”” என்று கூறிக்கொள்வார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நாட்டின் உணவு ருசியாகவே இருக்கும். தாவீதுக்கோ, தன்னை நடத்தின கர்த்தர் “ருசியாகக்” காணப்பட்டார். எனவேதான், தான் ருசித்த கர்த்தரை மற்றவர்களும் ருசிபார்க்க வேண்டும் என “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” என்று அழைப்புவிடுத்தார்.

தாவீது கர்த்தரை ருசிபார்த்தது எப்படி? தாவீதின் வாழ்க்கை பல பாடுகள் நிறைந்தது. ராஜாவாக அபிஷேகம் பெற்றதிலிருந்து பிறரின் பொறாமை, எரிச்சல், கோபத்திற்கு ஆளானார். பல தடவைகள் உயிர்தப்ப ஓடவேண்டியிருந்தது. எதிராளிகளோடு போராட நேர்ந்தது. உண்ண உணவு இன்றித் தவித்த வேளைகள் இருந்தன. குகைகளிலும், எதிரியின் நாடுகளிலும் ஒளிந்து வாழ நேர்ந்தது. பல இழப்புகளைச் சந்தித்தார். தன் சொந்தக் குடும்பத்தினராலும், தன் மகனாலும்கூட பகைக்கப்பட்டார். இன்னும் அநேக துயரமான பாதைகளுக் கூடாகக் கடந்துசென்றார் தாவீது. அப்போதெல்லாம் கர்த்தரைத்தவிர அவரோடு யாரும் இருக்கவில்லை. தாவீது தான் சந்தித்த எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தரையே நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர் அவரை இக்கட்டுகள் அனைத்திலுமிருந்து விடுவித்தார். கர்த்தரின் அன்பு, தயவு, இரக்கம், மன்னிப்பு போன்ற கர்த்தரின் சுபாவத்தை தன் வாழ்க்கையில் அனுபவித்தவர் தாவீது. இவ்விதமாக தன் வாழ்வில் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் கர்த்தருடைய அன்பை ருசி பார்த்தவர்தான் தாவீது.

தாவீது அனுபவித்ததுபோல இல்லாவிட்டாலும், இன்று நமது வாழ்வில் பல்வேறுபட்ட பாடுகளும் நெருக்கங்களும் இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட வேளைகள்தான் தேவஅன்பை ருசி பார்க்கின்ற நேரம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் கர்த்தரையே நோக்கிக் கூப்பிடப் பழகிக்கொள்வோம். தாவீதின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் நமது ஜெபத்துக்கும் பதிலளிப்பார். அவர் பதிலளிக்கும்போது கர்த்தருடைய அன்பின் ருசியை நாமும் ருசிக்கலாம்.

ஜெபம்: “பிதாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிடுவேன். உமது அன்பை ருசிக்கும்படி இக்கட்டிலும் நீரே என்னை நடத்தும். ஆமென்.”