ஜெபக்குறிப்பு: ஜுன் 3 செவ்வாய்
“.. அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்” (எரேமி.33:26) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 10 குடும்பங்களுக்கு கர்த்தர் இரங்கி அவர்கள் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடு காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.
திடன் கொள்!
தியானம்: ஜுன் 3 செவ்வாய்; வாசிப்பு: சங்கீதம் 31:1-24
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும்
திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை
ஸ்திரப்படுத்துவார்.” (சங்கீதம் 31:24)
உடைந்துபோன பாத்திரத்தை யார்தான் உபயோகிப்பார்கள்? அது அழகு குலைந்து, உபயோகம் அற்றதாகிவிடும். மனித வாழ்க்கைகூட ஒரு உடைந்துபோன வாழ்க்கையாகிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. வேதனையான சூழ்நிலைகள், வியாதிகள், தோல்விகள், உயிர் ஆபத்துக்கள் என்று ஒருபுறம்; பெற்றோர், பிள்ளைகள், இனத்தவர்கள், சிநேகிதர்கள், சக ஊழியர்களினால் ஏற்படும் வேதனைகள், எதிர்ப்புகள், தனிமைப்படுத்தப்படுதல் என்பன இன்னொரு பக்கமாக நம்மை உடைத்துப் போடுகின்றன.
இப்படிப்பட்ட உடைந்துபோன அனுபவத்தின் வழியாகக் கடந்துசென்றவர்களில் தாவீதுராஜாவும் ஒருவர். பல இன்னல்களுக்கூடாகச் சென்ற இவர், எதிராளிகளிடமிருந்து தன்னைத் தப்புவிப்பதற்காகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகன் அப்சலோமிடமிருந்தும் தன்னைக் காப்பாற்றவேண்டி ஏற்பட்ட போதும் மலைகளிலும் குகைகளுக்குள்ளும் ஓடி ஒளிந்து வாழ்ந்தார். இப்படியான சூழ்நிலைகளுக்கூடாகச் சென்ற தாவீது, தான் எழுதிய சங்கீதம் ஒன்றில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்று பாடி வைத்துள்ளார் (சங்கீதம் 31:12). ஆனாலும், தாவீது தன் வாழ்வை உடைந்த பாத்திரமாகவே முடித்தாரா? இல்லை. எப்படி? அவர் தன் தேவனாகிய கர்த்தரை நம்பியிருந்தார். தன் வாழ்க்கையின் சூழ்நிலைகளால் அவ்வப்போது மனக் கிலேசத்தில் தேவனை நோக்கிக் கதறினாலும், தன் தேவன் தன்னைக் கைவிட மாட்டார்; உடைந்துபோன பாத்திரம்போலிருக்கும் தன் வாழ்வைத் திரும்பவும் உருவாக்கி, அழகு படுத்தி, உபயோகிப்பார் என்ற விசுவாசத்தோடு தேவனை நோக்கிக் கூப்பிட்டார். தேவன் மறுஉத்தரவு அருளிச்செய்தார். திரும்பவும் தாவீதை ராஜா ஸ்தானத்தில் அமர்த்தி, தமது நாமத்தைக் கர்த்தர் மகிமைப்படுத்தினார்.
“வேதனை மிகுதியால், ‘உடைந்துபோன பாத்திரம்போல’ ஆனேனே; இனி வாழ்ந்து என்ன பயன்” என்று போராடும் தேவபிள்ளையே, “என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு. அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் கர்த்தரைத் துதிப்பேன்” என்று தாவீது தன்னைத் திடப்படுத்தியதைப்போல நாமும் தேவனுக்குள் நம்மை திடப்படுத்தலாமே! அன்று தாவீதின் வாழ்வை “நிரம்பி வழியும்” பாத்திரமாகத் திரும்பவும் மாற்றிய தேவன், நமது வாழ்வையும் திரும்பவும் உருவாக்கி, அழகாக்கி, தமக்கென்று உபயோகிக்க அவர் என்றும் வல்லமை பொருந்தியவராயிருக்கிறார். ஆகவே, கலக்கத்தைத் தள்ளிவிட்டு, திடன் கொண்டு, தேவனுக்குள் ஸ்திரப்படுவோமாக.
ஜெபம்: “கர்த்தாவே! அன்று தாவீதின் வாழ்வை திரும்ப உருவாக்கி, அழகு படுத்தியவரே, உடைந்துபோன எனது வாழ்வையும் புதுப்பித்தருளும். ஆமென்.”