ஜெபக்குறிப்பு: ஜுன் 17 செவ்வாய்

“பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசா.11:9) இவ்வாக்குப்படி சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சத்தீஸ் இனமக்களுக்கு அவர்கள் மொழியிலே வசனத்தைப் போதிக்க மிஷனெரிகள் ஊழியர்கள் எழும்பத்தக்கதாக ஜெபம் செய்வோம்.

தேவசத்தம் கேட்க!

தியானம்: ஜுன் 17 செவ்வாய்; வாசிப்பு: மத்தேயு 6:6-7

“…உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து,
உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற
உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6).

ஆயிரம்பேர் அடங்கிய கூட்டத்தில் தேவசெய்தியைப் பகிர்ந்துகொண்டிருந்தார் ஒரு பிரசங்கியார். ஆனால், கூடியிருந்தவர்களில் அநேகர் அந்த செய்தியைக் கேட்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் மிகவும் துக்கமடைந்தார் அவர். சந்தடிகள் மத்தியில் ஒருவர் பேசுவதை எப்படிக் கேட்கமுடியும்? இந்த நவீன உலகில் தொலைக்காட்சி, கணனி, தொலைபேசி போன்ற நவீனகால சாதனங்களின் வாயிலாக எந்தவேளையிலும், எவ்விடத்திலும் தேவசெய்தியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு பல உண்டு. இது நல்லது. இதனால் நமது அன்றாட தியானத்தை நாம் எவ்விடத்திலுமிருந்தும் செய்துகொள்ளமுடியும் என்று கூறிக் கொள்கிறவர்கள் உண்டு. ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எத்தனையோ வகையான உலக சத்தங்கள் அவர்கள் சிந்தனையைத் திசை திருப்புகின்றது என்பதைச் சிந்திப்பதில்லை. அப்படியானால் தேவசத்தத்தைத் தெளிவாகக் கேட்பது எப்படி? ஆகவே, தனிமையான, அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வதே மிகவும் நல்லது. ஜெபத்தைக் குறித்து ஆண்டவர் கூறியதிலிருந்து இதை நாம் கற்றுக்கொள்கிறோம்.

மாயக்காரரைப்போல ஜெபிக்கவேண்டாம் என்று ஆண்டவர் கூறியபோது குறிப்பாக, “அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாகப் பதில் கொடுப்பார்” என்று கூறினார்.  தனிமையான, அமைதியான ஒருநிலையில் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது, தேவனுடைய பதிலை நாம் ‘தெளிவாகப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்பதை இது நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

இன்று நாம் எத்தனை தேவசெய்திகளைக் கேட்கிறோம்; எத்தனை வேதப் படிப்புகளுக்குப் போகிறோம். எத்தனையோ பேர் நமக்காக ஜெபிக்கிறார்கள். ஆனால், தேவனுடைய சித்தம் என்ன, அவருடைய வழி என்னவென்று அறிய முடியாமல் நம்மில் பலர் குழம்பிப் போயிருக்கிறோம். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். நமக்கு அன்பானவர்களுடன் பேசும்போது வேறு யாராவது இடை யூறு செய்தால் அதை விரும்புவோமா? அதுபோலவே, ஆண்டவர் பேசுவதைக் கேட்க வேண்டுமானால், நமது மனதைத் திறந்து நாம் அவருடன் பேசவேண்டுமானால் ஆண்டவரோடு நாம் தனித்திருக்கப் பழகவேண்டும். அமைதியான ஒரு சூழ்நிலை, ஆண்டவரோடு தனிமையாயிருத்தல், ஜெபம், வேதவசன தியானம் என்று தினமும் செய்யும்போது தேவன் நம்முடன் பேசுவதையும் நாம் உணரக்கூடும். அவருடைய சித்தத்தை அறியக்கூடிய கிருபையும் கிட்டும்.

ஜெபம்: “கர்த்தாவே, தினமும் அமைதியான ஓர் இடத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிட, உம்முடன் உறவாட உதவி செய்தருளும். ஆமென்.