ஜெபக்குறிப்பு: ஜுன் 9 திங்கள்
இவ்வாண்டிலும் சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியப் பணிகளிலே ஆதரவாளர் திட்டத்தில் புதிய மக்கள் இணைந்து ஊழியத்தைத் தாங்கவும், புதிய பிரதிநிதிகள் கிடைக்கப்பெற்று பிரதிநிதி ஊழியங்கள் தடையின்றி ஆசீர்வாதமாக நடத்தப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.
கதவு அடைபடும் முன்…
தியானம்: ஜுன் 9 திங்கள்; வாசிப்பு: மத்தேயு 25:1-13
“…அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.”
(ஆதியாகமம் 7:16)
“இருள் சூழும் காலம் இனி வருதே, அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும். திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?” ஆழமான எச்சரிப்போடுகூடிய அருமையான பாடல் வரிகள் இவை. இப்பாடல், பரிசுத்த வேதாகமத்தில் கதவுகள் அடைக்கப்பட்ட இரு சம்பவங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றது.
முதலாவது, நோவாவின் சம்பவம். பூமியிலே மனிதனின் அக்கிரமம் நிறைந்திருப்பதைக் கண்ட தேவன், மனிதனைச் சிருஷ்டித்ததற்காக மனமுடைந்தார். இதனால் பூமியை மழையினால் அழிக்க நினைத்தார். தாம் நினைத்ததை செயற்படுத்துமுன் தனக்குமுன் நீதிமானாக இருந்த நோவாவுக்குத் தயவு காட்டினார். ஒரு பேழையை உண்டுபண்ணும்படி நோவாவிடம் கூறினார். நோவா விசுவாசத்தோடு பேழையை உண்டுபண்ணியதும், நோவாவையும், அவனது குடும்பத்தையும், தாம் சிருஷ்டித்த மிருகஜீவன்கள் அனைத்திலும் ஜோடிகளாக பேழைக்குள் அழைத்து, பேழையின் “கதவைப் பூட்டினார்” (ஆதி.7:16). பின்னர் நாற்பது நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையிலே பேழைக்கு வெளியே இருந்த அனைத்தும் அழிந்துபோனது.
அடுத்தது, இயேசு கூறிய பத்துக் கன்னிகைகளின் உவமை! இந்த உவமையில் மணவாளனுக்காக ஆயத்தத்தோடு காத்திருந்த புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளும் மணவாளனுடன் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தனர். அதன் பின்னர் கதவு அடைக்கப்பட்டது. ஆயத்தமில்லாதவர்களால் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை. கதவைத் தட்டியும், அடைக்கப்பட்ட கதவு அவர்களுக்காகத் திறக்கப்படவில்லை.
கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்குகின்ற நாம் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை இந்த உவமை கற்றுத்தருகிறது. நோவாவின் சம்பவமோ, கிறிஸ்துவுக்குள் நாம் வாழும் வாழ்வைக் குறித்து எச்சரிக்கிறது. கிறிஸ்து என்ற பேழையை நாம் உதாசீனம் செய்து விட்டு, கிருபையின் நாட்கள் அடைபடும்போது கதறி அழுதும் பலன் கிடைக்கப்போவதில்லை. இது இருள் சூழ்ந்த காலம். தேவனின் கிருபையால் இயேசுகிறிஸ்துவுக்கூடாக இவ்வுலக மக்கள் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ள பரலோக கதவு நிச்சயம் ஒருநாள் அடைக்கப்படும். அதற்கு முன்னர் நாம் செய்யவேண்டியது என்ன? நமது பாவங்களையும் பாரங்களையும் விட்டுவிட்டு நமக்கு அருளப்பட்டுள்ள இந்த கிருபையின் காலத்தைப் பயன்படுத்தி, தேவனண்டை சேருவோமாக.
ஜெபம்: தேவனே, திறவுண்ட வாசல் அடைபடுமுன், நொறுங்குண்ட மனதாய் வருகிறேன் ஐயா, என்னை ஏற்று என்றும் வழிநடத்தியருளும். ஆமென்.