ஜெபக்குறிப்பு: ஜுன் 23 திங்கள்
“… உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:10) என்ற வாக்குப்படி சத்தியவசன பங்காளர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து நடத்தும்படியாக ஜெபிப்போம்.
இளைத்துப் போனாயோ?
தியானம்: ஜுன் 23 திங்கள்; வாசிப்பு: ஆதியாகமம் 24:1-9
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை
இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ
ஜீவவிருட்சம் போல் இருக்கும்.” (நீதிமொழிகள் 13:12)
நம் எல்லோருக்குமே அநேக தேவைகள் உண்டு. அதிலும் அவசியமான தேவை உடனடியாக சந்திக்கப்படாத நேரத்தில் நாம் சோர்வடைந்து இளைத்துப் போய்விடுகிறோம். இப்படியான தேவைகளில் ஒன்று “வாழ்க்கைத் துணை.”
வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுப்பது என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டமாகும். ஏனெனில், இது ஒரு புதிய குடும்ப உறவைக் கட்டியெழுப்புகின்ற ஒரு முக்கிய ஆரம்பமாகும். இப்படிப்பட்ட ஒரு உறவின் ஆரம்பம் தேவனால், அவருக்குச் சித்தமானபடி அமையவேண்டும் என்பது தேவ பிள்ளைகளின் வாஞ்சை. மட்டுமல்ல, இது தேவநியதியும்கூட. எனவேதான் ஆபிரகாம்கூட தன் குமாரனான ஈசாக்குக்கு ஒரு பெண்ணைத் தேடும்போது தன் ஊழியக்காரனிடம், தன் ஜனத்தாரிடத்தில்போய் ஈசாக்குக்குப் பெண் தெரிந்து கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டான். அந்த ஊழியக்காரனும் ஆபிரகாமின் சொற்படி அவனுடைய ஜனத்தாரண்டைபோய், ஈசாக்குக்கு ஏற்ற பெண்ணாக ரெபெக்காளைத் தெரிந்துகொண்டு வந்தான். அந்தப் பெண்ணை ஈசாக்கும் ஏற்றுக்கொண்டான். ஆபிரகாமைப்போன்ற பெற்றோர் மட்டுமல்ல, ஈசாக்கைப் போல தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளும், தேவனே ஏற்றதுணையைக் காண்பிக்க வேண்டுமென்று காத்திருக்கிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
ஒருதாய், “நான் எத்தனை வருடங்களாக என் மகளுக்கு ஏற்ற துணையைத் தேவன் தரவேண்டுமென ஜெபித்து முயற்சி எடுக்கிறேன். இன்னும் பதில் இல்லை. இதனால் நானும், என் மகளும்கூட மனம் சோர்ந்துவிட்டோம்” என்றனர். அதிகநாள் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் என்பது உண்மைதான். ஆனால், தேவவசனம் கூறுவது என்ன? “விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்” என்பதாகும். ஆபிரகாமின் தேவன் பொய் சொல்வாரா?
ஜீவவிருட்சம் ஆசீர்வாதமானது; நீடித்து நிலைத்திருப்பது; இப்படிப்பட்ட விருட்சத்தைப்போன்ற குடும்ப உறவை தேவன் தர வேண்டும் என்று காத்திருக்கும்போது, “உனக்கு இன்னும் கிடைக்கவில்லையே, நீ தேவனுக்குப் பிரியமான பிள்ளை இல்லையே” என்று சோர்வைக் கொண்டுவருவது சத்துருவான சாத்தானின் செயலே. இதற்கு இடங்கொடுக்காமல் ஜெபத்திலும் விசுவாசத்திலும் உறுதியாய் நிலைத்திருங்கள். அன்று ஆபிரகாமின் வாஞ்சையைத் தீர்த்த தேவன் உங்கள் ஜெபத்துக்கும் நிச்சயம் பதில் தருவார். தேவன் பதிலளிக்கும்போது அதை மறுப்பவர் யார்?
ஜெபம்: “கர்த்தாவே, ஏற்ற வேளையில் என் ஜெபத்துக்குப் பதில் தருவீர் என்ற விசுவாசத்தோடு நான் தொடர்ந்தும் உமக்கே காத்திருப்பேன். ஆமென்.”