ஜெபக்குறிப்பு: ஜுன் 7 சனி
“.. இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்” (உபா.11:32) இவ்வாக்குப்படி சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சத்தியங்களை போதித்துவரும் செய்தியாளர்கள் யாவரின் நல்ல சுகம், ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
முதிர்வயதிலும்…
தியானம்: ஜுன் 7 சனி; வாசிப்பு: லூக்கா 2:36-38
“அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும்
பசுமையுமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 92:15)
எனது தாயார் மிகவும் சுறுசுறுப்பான ஒரு ஆசிரியர். ஆனால், முதிர்வயதானதும் நோயின் காரணமாகவும், வயோதிப நிலையின் காரணமாகவும் முன்பு போல் அவரால் சுறுசுறுப்பாக இருக்கமுடியவில்லை. இந்த நிலையிலே, “நான் இருந்து என்ன பிரயோஜனம்? நான் யாருக்கும் உதவியாக இருக்கமுடியாதிருக்கிறதே” என்று மனமுடைந்து பேசுவார்கள். இப்படி இருந்தபோது ஒருநாள் வேதத்தில் அன்னாள் என்ற தீர்க்கதரிசியைக் குறித்து வாசித்துவிட்டு, முன்பு போல் வெளியிலே சென்று மற்றவர்களுக்கு உதவியாக இருக்கமுடியாவிட்டாலும், அன்னாளைப்போல வீட்டிலிருந்து எல்லோருக்காகவும் ஜெபிப்பேன் என்று கூறி அப்படியே செய்துவந்தார்கள். இப்படியே தன்னுடைய கடைசி நாட்களைக் கனி நிறைந்த சந்தோஷ நாட்களாக மாற்றிக்கொண்டார்கள்.
இந்த அன்னாள் ஒரு பெண் தீர்க்கதரிசி. இவர் திருமணமாகி ஏழு வருடம் மாத்திரமே புருஷனோடு வாழ்ந்த ஒரு விதவை. தன் கணவன் இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளாமல், ஆலயத்திலே இரவும் பகலும் உபவாசமிருந்து ஜெபித்து ஆராதனை செய்துவந்தார். அவருடைய வயது இப்போது எண்பத்து நான்கு. இவர், கிறிஸ்துவின் வருகையைக் காண்பதற்கு ஆவலோடு காத்திருந்தார். அப்படியே அதைக்கண்டுகொண்டார். மாத்திரமல்ல, அநேகருக்கு ஆசீர்வாதமாகவுமிருந்தார்கள். அன்னாள் முதிர்வயதிலும் கனிகொடுத்து புஷ்டியும் பசுமையுமாய் வாழ்ந்தார் என்பதில் ஐயமே இல்லை.
கனிகொடுத்தல் என்பது, பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதாகும். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் என்று வேதத்தில் வாசிக்கிறோம். சரீரத்தில் பெலன் இருக்கும்போது, குடும்பத்தினருக்கும், பிறருக்கும் பயனுள்ள ஆசீர்வாதமான வாழ்வு வாழ்ந்துவிட்டு, சரீரம் பலமற்று, முதிர் வயதை எய்துவிட்ட நிலையில், ‘எவருக்கும் உதவியற்றிருக்கிறேனே. இனி என்னால் என்ன பயன்’ என்று வீணாகக் குழப்பமடைவது ஏன்? இன்று பல முதியோர், பல கேள்விகளுடனும், ஏக்கம், வேதனை, தனிமை போன்ற உணர்வுகளோடும் மனமுடைந்து வயோதிப நிலையங்களிலும், வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். வயோதிப நிலையிலிருந்து இந்தத் தியானத்தைப் படிக்கிறீர்களா? ஏன் வீண் கலக்கம்? அன்றும் இன்றும் கனிகொடுத்து, புஷ்டியும் பசுமையுமாய் வாழ தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆக அன்னாளைப்போல இன்றே ஜெபிக்க ஆரம்பியுங்கள். வாழ்நாள் இறுதிவரை செழிப்பும் புஷ்டியுமாய் கனிகொடுப்பீர்கள். கர்த்தருக்கே எல்லாக் கனமும் மகிமையும் உண்டாகட்டும்.
ஜெபம்: பிதாவே, வயதான நிலையிலும் என் இயலாமையிலும் பிறருக்குப் பிரயோஜனமாக வாழ ஜெப ஆவியை என்னில் ஊற்றியருளும். ஆமென்.