ஜெபக்குறிப்பு: ஜூலை 1 செவ்வாய்
“.. கர்த்தாவே வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்” (ஆபகூ.3:2) என்ற ஜெபத்தைப் போல இந்நாட்களிலே கர்த்தர் தம்முடைய கிரியையை உயிர்ப்பித்து நம் மத்தியிலே அதை விளங்கப்பண்ணும்படியாக ஜெபிப்போம்.
ஆதாம்
தியானம்: ஜூலை 1 செவ்வாய்; வாசிப்பு: 1யோவான் 1:5-10
“நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என்
அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?”
(யோபு 31:33).
வேதாகம பாத்திரங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகுந்த எச்சரிப்பைக் கொடுக்கின்றன. அந்த வகையில் முதல் மனுஷனாகிய ஆதாமைக் குறித்து இன்று தியானிப்போம்.
“பாவத்தை ஒளித்துவைத்தவன்” என்று ஆதாமைக் குறித்து யோபு பக்தன் குறிப்பிடுகிறார். ஆதாம் பாவத்தை எப்படி ஒளித்துவைத்தான்? தேவனுக்கு முன்பாக மனிதன் பாவத்தை ஒளித்துவைக்க முடியுமா? இல்லவே இல்லை. அப்படியானால், ஆதாம் செய்தது என்ன? தேவன் புசிக்கவேண்டாம் என்று கூறி விலக்கிய கனியை ஆதாம் புசித்தான். ஆனால், அவனைக் குறித்து, “மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்” (1தீமோ.2:14) என்று எழுதப்பட்டுள்ளது. இங்கே ஆதாம் “வஞ்சிக்கப்படவில்லை” என்று கூறப்பட்டாலும், யோபு, ஆதாம் தன் மீறுதலை மூடி, தன் அக்கிரமத்தைத் தன் மடியிலே ஒளித்துவைத்ததாகக் குறிப்பிடுகிறார். ஆக, ஆதாம் ஒளித்து வைத்தது எப்படி? ஆதாம், தன்னைத் தேடி வந்த தேவனிடத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் அதனை மூடி மறைத்து, பழியை பிறர்மீது சுமத்தினான். “நீர் எனக்குத் தந்த” என்று தேவன்மீதே குற்றத்தைச் சுமத்தினான் ஆதாம். “அவள் தந்தாள்” என்று தன் மனைவியின்மேல் பழியைச் சுமத்தினான். பாவத்தை ஏற்றுக்கொண்டு மனந்திரும்ப அருமையான சந்தர்ப்பம் கிடைத்தபோதும், அதனைத் தவறாக பயன்படுத்தித் தப்பிக்கொள்ள, பாவத்தை மூடி மறைத்தான். ஆனால், அதன் பலன் சாபமும் வேதனையும்தான்.
அருமையான சகோதரனே, சகோதரியே, ஆதாம் பாவத்தில் விழுந்து விட்டதைத் தெரிந்துகொண்டும், தேவன் ஆதாமைத் தேடி வந்தாரல்லவா! அவரே இன்று நமது தேவனுமாயிருக்கிறார். அன்று ஆதாமைத் தேடி வந்தவர் இன்று பாவத்தில் விழுந்துகிடக்கிற நம்மையும் தேடி வந்திருக்கின்றார். அன்று ஆதாமைத் தேடி வந்த தேவன், அவனை ஏதேனிலே சந்தித்தார். இன்று நம்மைத் தேடி வந்த தேவன், கல்வாரியில் நம்மைச் சந்திக்கிறார். கிறிஸ்துவின் இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டிருக்கிறது. அன்று ஆதாமுக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தாததால் அவன் வேதனை அனுபவிக்க நேர்ந்தது. அது நமது வாழ்க்கைக்கு எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளது. இன்று தேவன் நமக்குத் தந்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோமாக. நமது பாவத்தை அறிக்கை செய்வோமாக. தேவனிடத்தில் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வோமாக. “பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி 28:13).
ஜெபம்: “தேவனே, நான் என் பாவத்தை மறைக்காமல் அதனை அறிக்கை செய்கின்றேன். என்னை மன்னித்து உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும். ஆமென்.”
தேவனுடைய பரிபூரண சித்தம்!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2014)
– Dr.உட்ரோ குரோல்
“அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில்… சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார்… ”
(1 சாமு. 9:26, 10:1).
இஸ்ரவேல் தேசத்தில் சாமுவேல் தீர்க்கதரிசி, அநேக ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்து முதிர் வயதுள்ளவரானார். அவரது மரணத்துக்குப்பின் இஸ்ரவேலை நடத்திச் செல்வது யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. சாமுவேலின் குமாரர்களான யோவேலும் அபியாவும் அவருக்கு முன் இருந்த ஏலியின் குமாரர்களைப் போல, நியாயாதிபதிகளுக்கான தகுதியை இழந்துவிட்டனர். “ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்” (1சாமு.8:3). சாமுவேல் இறந்தபின் தங்களுக்கு ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்காவிட்டால், நியாயாதிபதிகளின் காலத்தைப் போல அராஜகம் தலைதூக்கும்; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான் (நியா.17:6) என்ற நிலை மீண்டும் திரும்பும் என இஸ்ரவேலர் அஞ்சினர்.
இவை தவிர, ஆதி காலத்து கிழக்கத்திய நாடுகளைப் போல, அரசின் ஆடம்பரங்களையும் சடங்குகளையும், அனுபவிக்க இஸ்ரவேலருக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. சொந்த நாடு இன்றி, நாடோடிகளைப் போல அலைந்து திரிந்த காலத்திலே அவர்கள் மற்ற நாடுகளைப் பற்றி கவலையின்றி இருந்தனர். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறியபின், தங்களைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அரசன் இருக்கும்பொழுது, தங்களுக்கும் ஓர் அரசன் தேவை என்று விரும்பினர்.
தேவன் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தின்படி, பென்யமீன் கோத்திரத்தில் செல்வந்தனும், செல்வாக்கும் மிக்க கீசின் மகனான சவுலை அவர்களுக்கு அரசன் ஆக்கினார். சவுல் அரசனானது, மற்றவர்களுக்கு ஒரு தற்செயல் நிகழ்வாகத் தோன்றலாம். காணாமற் போன கழுதையைத் தேட தன்னுடைய தகப்பனால் அனுப்பப்பட்ட சவுல், அதைக் கண்டுபிடிப்பதற்கு சாமுவேல் தீர்க்கதரிசியின் உதவியை நாடினார். இஸ்ரவேலுக்குத் தலைவனாகத் தம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட பென்யமீன் நாட்டானாகிய சவுல் வருவான் என்று சாமுவேலுக்கு முன்தினம் கர்த்தர் வெளிப்படுத்தியிருந்தார். சவுல் அங்கு சென்று சேர்ந்தபொழுது, அவனுடைய அடையாளத்தைப் பற்றிய அச்சம் சாமுவேலின் எண்ணத்தில் தோன்றியது. இயற்கையான அருளையும் திறமைகளையும் பெற்றிருந்த சவுல், மற்ற யூதர்களைவிட உயரமுள்ளவனாயிருந்தான். இவைகளைவிட, தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் அவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெரிந்தெடுப்பாயிருந்தான். நன்மைக்கோ, தீமைக்கோ இஸ்ரவேலின் விருப்பத்துக்கு இணங்க யெகோவா சவுலை அவர்களுக்கு அரசனாகத் தேர்வுசெய்து கொடுத்தார்.
சாமுவேல் சவுலைக் கண்டபோது கர்த்தர் அவனிடத்தில்: “இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே;” என்றார். சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜன சாலைக்குள் அழைத்துக் கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராயிருந்தார்கள். பின்பு சாமுவேல் சமையல்காரனிடம் தான் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த பலியின் சிறந்த பகுதியைக் கொண்டுவந்து சவுலின் முன் வைக்கச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் அரிய காரியத்தையும் சொன்னார். தன்னோடு இரவு தங்கும்படியாக சவுலுக்கு அழைப்பு விடுத்தார். அதிக நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந் தனர். “அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில்… சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார்… ” (1 சாமு. 9:26, 10:1) என்றான்.
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் வாழ்வது ஒரு தற்காலிக ஆசீர்வாதத்தையே தரும். பழைய ஏற்பாட்டு வரலாற்றில் சவுலை ஒரு துர்பாக்கியசாலியாகவே நம்மால் காணமுடிகிறது. மக்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க, தேவனுடைய தெரிந்தெடுப்பாக இருந்தாலும், அதிகாரம் இழந்தவராய், இராஜாங்கமும் பறிக்கப்பட்டு உளவியல் ரீதியாக சீரழிந்த நிலையையே காண்கிறோம். நிராகரிப்பு, தோல்வி மற்றும் தற்கொலை ஆகியவையே சவுலின் தவிர்க்கமுடியாத முடிவாயிற்று.
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் யூதர்களுடைய இராஜாவாக சவுலைக் கண்ட சாமுவேலிடம், கர்த்தர் அவனிடத்தில்: “இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே;” என்று சொன்னார் (1 சாமு. 9:17). பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் யூதர்களுடைய இராஜாவைக் கண்டு பிலாத்து, யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான் (யோவான் 19:5). சவுல் சவுந்தரியமுள்ளவனாயிருந்தபடியால், அவனுடைய ஆட்சியை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். இஸ்ரவேலின் எதிரிகளை எதிர்த்து போர்களை வெற்றியுடன் முன் நடத்துவான் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவின் ஆட்சியையோ இஸ்ரவேல் மக்கள் உடனடியாக நிராகரித்துவிட்டனர். ஏனெனில் “அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை”. இஸ்ரவேலின் எதிரிகளுக்கு விரோதமாய் படையெடுத்து தம் மக்களை முன் நடத்திச் செல்லவும் இயேசு திட்டமிடவுமில்லை. சவுல் இஸ்ரவேலரின் தெரிந்தெடுப்பு; இயேசு கிறிஸ்து தேவனுடைய தெரிந்தெடுப்பு. தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் நாம் வாழ்வதைவிட, அவருடைய பரிபூரண சித்தத்தில் வாழ்வதே சாலச் சிறந்ததாகும்.
அதிகாலைப் பாடல்:
நிந்தைகளையும் அவமானத்தையும்
எனக்காக சிலுவையில் சுமந்தாரே.
தம்முயிர் தந்து எனக்கு மன்னிப்பை
அளித்த இரட்சகர் இயேசுவுக்கு
என்றும் பாடுவேன் அல்லேலூயா!
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(2) சீன மொழிபெயர்ப்பு
1809ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் பூர்த்தி யடைந்தன. அதை புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவதற்குத் தேவையான சீன அச்சு எழுத்துக்களை மொரிசன் மரப்பலகையில் செய்தார். 1810 ஆம் ஆண்டு அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் சீன மொழியில் வெளியிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களது வேதநூல் என்பதை அரசு அதிகாரிகள் அறியாதிருப்பதற்காக, வேறு அட்டைகளுடன் பிரசுரிக்கப்பட்டு புத்தக வியாபாரிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.
அவர்கள் அவற்றை விற்று அதிக பணம் சம்பாதித்து வந்தனர். அவ் வருடம் 6 மாதங்களின் பின் மொரிசன் வழக்கம் போல மெக்கவ்விற்குச் சென்றார். அச்சமயம் தான் மரப்பலகையில் செய்த சீன அச்செழுத்துக்கள் அரசு அதிகாரிகளின் கண்களில் தென்படாமலிருப்பதற்காக அவற்றை ஓரிடத்தில் புதைத்து விட்டுச் சென்றார்.
ஆனால் 6 மாதங்களின் பின் மறுபடியுமாக கன்டன் நகருக்கு வந்து அவற்றைத் தோண்டியெடுத்த போது அவை அனைத்தும் கறையான்களுக்கு உணவாகியிருப்பது தெரிய வந்தது. வருடத்தில் 6 மாதங்கள் மனைவியின் பிரிவு, அவரது தேக ஆரோக்கியத்தின் வீழ்ச்சி என்பன மொரிசனை வெகுவாகப் பாதித்தாலும் அவர் தனது மொழி பெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்தார். இதன் பயனாக 1814 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதையும் சீன மொழியில் அவரால் வெளியிடக் கூடியதாயிருந்தது.
மொரிசனது மொழிபெயர்ப்பு வேலைகளில் அவருக்கு உதவி செய்வதற்காக லண்டன் மிஷனரி சங்கம் வில்லியம் என்பவரை சீனாவுக்கு அனுப்பியிருந்த போதிலும் அவருக்கு கன்டனிலும் மெக்கவ்விலும் இருப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர் மலாக்கா எனுமிடத்துக்குச் சென்று அங்கிருந்தவாறே மொரிசனுக்கு உதவி செய்தார். 1819 ஆம் ஆண்டு முழுவேதாகமமும் சீன மொழியில் வெளியிடப்பட்டது. இதில் 10 புத்தகங்களை மலாக்காவில் இருந்த வில்லியம் மொழிபெயர்த்திருந்தார். கன்டன் நகரில் வேதாகமம் விற்பனை செய்யப்படுவதை சீன அரசாங்கம் தடை செய்த போதிலும் வேதாகம விற்பனையினால் புத்தக வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைத்தமையினால் அவர்கள் அதற்கு வேறு தலைப்புகளுடனான அட்டைகளைப் போட்டு விற்பனை செய்தனர்.
1834ஆம் ஆண்டு ரொபர்ட் மொரிசன் மரணமடைந்தார். இவரது மிஷனெரிப்பணி கன்டன் நகர எல்லைக்கு அப்பால் செல்லாதபோதிலும் காலப்போக்கில் இவர் மொழி பெயர்த்த சீன வேதாகமம், சீனா வெங்கும் சென்றது. பிற்காலத்தில் சீனாவுக்குச் சென்ற மிஷனெரிகள் மொரிசனது சீன வேதாகமத்தை உபயோகித்தே சீன மக்களுக்குத் தேவ வார்த்தையை அறிவித்தனர்.
(3) ஜப்பானிய மொழிபெயர்ப்பு
1831 ஆம் ஆண்டு பசிபிக் சமுத்தி ரத்தில் கடற்சூறாவளியால் தாக்கப் பட்ட ஜப்பானியக் கப்பலொன்றிலிருந்து மூன்று ஜப்பானிய மாலுமிகள் காப்பாற்றப்பட்டு கனடா வழியாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களது உதவியோடு நெதர்லாந்து மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த குட்லொஃப் என்பவர் யோவான் சுவிசேஷத்தை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். இது 1837இல் சிங்கப்பூரில் அச்சிடப்பட்டது. ஜப்பானிய மாலுமிகள் மூலமாக இதை ஜப்பானுக்கு அனுப்ப குட்லொஃப் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அவர் சென்ற கப்பல் ஜப்பானியத் துறைமுகத்தில் துப்பாக்கி குண்டுக்களுக்கே முகங் கொடுக்க வேண்டியிருந்தபடியால் அவர் சீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இதன்பின் அற்புதமான முறையில் வேதாகமம் ஜப்பானுக்குள் சென்றது.
1854இல் ஆங்கில கப்பலொன்றிலிருந்த ஒருவருடைய வேதாகமம் தவறி கடலில் விழுந்தது. அவ்வேதாகமத்தின் கதை அத்தோடு முடிவடைந்து விட்டதாக கப்பலிலிருந்தவர்கள் நினைத்தாலும், அது ஒரு ஜப்பானிய மீனவனுடைய வலையில் அகப்பட்டது. அவன் அதைத் துறைமுக அதிகாரியிடம் எடுத்துச் சென்றான். வேதாகமத்தைப் பார்த்த அதிகாரி அது சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டதோடு, அதன் ஒரு பிரதியை தன்னிடம் கொண்டுவரும்படியும் கட்டளையிட்டான். அதை வாசித்த அதிகாரி இரட்சிக்கப்பட்டதோடு, அவன் அதைத் தனது நண்பனுக்கும், சகோதரனுக்கும் காண்பித்தான். அவர்களும் சீன வேதாகமத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டதோடு, இம்மூவரும் அநேகரை இயேசுகிறிஸ்துவுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜப்பானுக்கு வந்த மிஷனெரிகள் ஜப்பானிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினர். ஜப்பானிலிருந்த அமெரிக்க பப்டிஸ்ட் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த கொப்பிள் என்பவர் 1871இல் புதிய ஏற்பாட்டை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கி, 1879இல் பூர்த்தி செய்தார். 1887இல் ஜப்பானில் பணியாற்றிய பலதரப்பட்ட மிஷனெரி சங்கங்களையும் சேர்ந்தவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் வெளிவந்தது. ரோமன் கத்தோலிக்க மிஷனெரிகள் 1895 முதல் 1897 வரையிலான காலப் பகுதியில் நான்கு சுவிசேஷங்களையும் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.
1900இல் கிரேக்க ஓர்த்தடொக்ஸ் சபையினர் மொழி பெயர்த்த ஜப்பானிய புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1955இல் திருத்தப்பட்ட புதிய ஜப்பானிய வேதாகமம் வெளியிடப்பட்டது.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜூலை-ஆகஸ்டு 2014)
1. அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்துவருகிறது. எங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் பிள்ளைகள் வாழ்க்கைக்கும் அநுகூலமாக இருந்து வருகிறது.
Bro.Aaron Raj, Goa.
2. All your Magazines are of much great value. Anuthinamum Christhuvudan is my guide for my Morning devotion and each day’s meditation are new each morning. Back to the Bible TV broadcasts are the only christian programmes I watch on the TV and the messages are refreshing. The prayer points is Anthinamum Christhuvudan is part of my daily prayers.
Mrs.Angelina Packianthan, Coimbatore.
3. We thank and praise God for all the blessings, He has showered on our family. We are greatly blessed by your Magazines and T.V. Messages.
Sis.Mary Prince, Villupuram.
4. தாங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது. மிக்க நன்றி. சரியான நேரத்தில் அனுப்பி எங்களை விசாரிக்கிறவர் இயேசு என்பதை உணர்ந்துகொள்ள, ஆறுதலடைய சத்தியவசனம் உதவி செய்தது. எனது கணவர் வயது 74. எங்களுக்காக ஜெபியுங்கள்.
Mrs.Leela Bai, Madurai.
5. சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின செய்தி மிகவும் அருமையாகவும் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடையவும் உதவியாக உள்ளது.
Mr.Immanuel Gideon Inbadas, Vellore.
6. இயேசு உங்களை விசாரிக்கிறார் என்ற புத்தகத்தை அனுப்பியதற்கு மிகவும் நன்றி கூறுகிறேன். எனக்காக எழுதப்பட்ட இந்த புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் உடனே வாசித்து முடித்தேன். என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. என் கணவரை இழந்து ஒரு வருடமாக மனவேதனையோடிருந்த எனக்கு இந்த புத்தகத்தின் செய்தி மிக ஆறுதலைத் தந்தது. இதை வாசிக்கும்போது என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன். ஆம் என் இயேசு என்னை நேசிக்கிறார், என்னை விசாரிக்கிறார் என்பதை இந்த செய்தி மூலம் அறிந்து என் இயேசுவுக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்காக ஜெபிக்கிறேன்.
Mrs.Devarakkam John, Mumbai.
7. என்னுடைய குடும்ப பாரங்களினிமித்தம் வேதனையோடிருந்த நேரத்தில்தான் இயேசு உங்களை விசாரிக்கிறார் என்ற புத்தகம் கிடைத்தது. அதை வாசித்தபின் உண்மையிலேயே பெரிய ஆறுதலையும் சமாதானத்தையும் அடைந்தேன்.
Mrs.Devanasam Gabriel, Tirunelveli.
8. I too completed reading the Bible. …. Thank you for encouraging me to read it everyday. This year too I reading regularly. May God bless your Gospel work.
Mrs.Ramani Livin, Nagercoil.