ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 புதன்
“நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்” (எசேக்.37:26) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் தம்முடைய கிருபையினாலே நம்மை நிலைநிறுத்தின தேவனை மனதார ஸ்தோத்திரித்து புதிய மாதத்தையும் கர்த்தர் ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.
இருப்பிடம் மாறும்போது…
தியானம்: செப்டம்பர் 30 புதன்; வேத வாசிப்பு: லூக்கா 15:11-22
“அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, …எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்” (லூக்கா 15:17,20).
ஒருவன் தான் இருக்கவேண்டிய இடத்திலிருந்து தான் இருக்கக் கூடாத இடத்திற்கு இடம் மாறிச்சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் வேதனையானதாக மாறிட இடமுண்டு.
இயேசுவானவர் கூறிய உவமைகளில் மனந்திரும்பிய குமாரனின் உவமை அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கூடாக ஒரு தகப்பனின் அன்பு, கெட்டுப்போன ஒரு மகனின் மனமாற்றம், மூத்த மகனின் எரிச்சல் சுபாவம் போன்றவற்றை நாம் அநேகமாக சிந்திப்பதுண்டு. இன்னுமொரு காரியத்தையும் இன்றைய நாளில் சிந்திப்போம். ஆம், ஒருவன் தான் இருக்கவேண்டிய இடத்தை விட்டு தன் இஷ்டப்படி இன்னுமொரு இடத்தை நாடிச் செல்லும்போது அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்றும் இவ் உவமைக்கூடாகக் காண்கின்றோம்.
இந்த உவமையில், சொத்து, சுகம், பாதுகாப்போடு தனது தகப்பன் வீட்டில் வாழ்ந்த இளைய மகன், தகப்பனுடைய இருப்பிடத்தைவிட்டு தன் இஷ்டப்படி தன் சிநேகிதரோடு சந்தோஷமாக வாழுவதற்காகத் தன் சொத்தைப் பிரித்து வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான். நாட்கள் செல்லச்செல்ல அவன் நினைத்தது போல் வாழ்வு அமையவில்லை. தந்தை வீட்டில் தான் அனுபவித்த சந்தோஷமான குடும்ப உறவு, வசதிகள், சமாதானம், பாதுகாப்பு, ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, தன் நண்பரிடத்தில் பெற்றுக்கொள்ளலாமென்று நினைத்துப் புறப்பட்டு வந்த சந்தோஷம், நட்புறவு அனைத்தையுமே இழந்தான். தான் இருக்கவேண்டிய இருப்பிடத்தை விட்டு வெளியேறி வேறிடம் சென்றதால் அவன் பல பாடுகள், வேதனைகள், இன்னல்கள், மனஉடைவுகளை அனுபவித்தான்.
தேவபிள்ளைகளாகிய நாமும்கூட இந்த இளைய மகனைப்போன்றே சிலவேளைகளில் நமது பரம பிதாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு, வழிநடத்துதல், சமாதானம், சந்தோஷம் ஆகியவற்றைப் பார்க்கிலும் உலகத்தாரிடமிருந்து பெற்றுக்கொள்பவை மேலானவை என்று எண்ணி தேவனிடமிருந்து விலகிச் செல்லுகிறோம்; தேவசித்தப்படி பெற்றுக்கொண்ட வேலையிலிருந்து அதிக ஊதியத்தை நாடி விட்டுவிலகுகிறோம். குடும்பத்தில் ஏற்படும் நெருக்கங்களால் குடும்பத்தையே விட்டுவிலகத் துணிகிறோம். அல்லது, நாம் ஆராதிக்கும் சபை பிடிக்காததால், சபையையே விட்டுவிலக யோசிக்கிறோம். அன்று அந்த இளைய மகனின் நிலைமை இன்று நமக்கு வரக்கூடாது. கர்த்தர் ஒரு நோக்கமின்றி நாம் இருக்கும் இடத்தில் நம்மை வைத்திருக்கமாட்டார். இருக்கும் இடத்தில் பிரச்சனை என்றால் தேவனை நோக்கிப் பார்ப்போம். அதுவே நமக்கு எப்போதும் சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தரும்.
நாம் இன்று இருக்கும் இடம், அது வேலைஸ்தலமோ, குடும்பமோ, சபையோ, அல்லது வேறு எதுவோ அங்கே தேவசித்தப்படிதான் இருக்கிறோமா? தேவ சித்தப்படி இருக்கும்போதும் சிலசமயம் புறப்பட்டுப்போகும்படியான சோதனை வருவது ஏன்? அவற்றை எப்படி ஜெயிப்பது என சிந்திப்போம்.
வாக்குத்தத்தம்: செப்டம்பர் 29 செவ்வாய்
…காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். (யோவா.20:29)
ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 செவ்வாய்
6 நாடுகளிலுமுள்ள Back To The Bible ஊழியப்பணிகள் தடைகளின்றி செய்யப்படுவதற்கும், ‘சமாதானத்தின் தேவன்’ (பிலிப்.4:9) தாமே ஊழியத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கான தேவைகளைச் சந்தித்து, ஊழியத்தலைவர்களை தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்த ஜெபிப்போம்.
வெற்றியுள்ள வாழ்க்கைக்கு…
தியானம்: செப்டம்பர் 29 செவ்வாய்; வேத வாசிப்பு: யோசுவா 1:1-9
“.. பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (யோசுவா 1:9).
வாழ்க்கையில் தான் கையிட்டுச் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் வெற்றி காணவேண்டும் என்று ஒருவன் நினைப்பது தவறல்ல. ஆனால், சில வேளைகளில் அந்த வெற்றி கிடைப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்! மோசேயின் மரணத்தின்பின் இஸ்ரவேல் ஜனங்களை வாக்களிக்கப்பட்ட கானானுக்குள் வழிநடத்தும் பொறுப்பை தேவன் யோசுவாவிடம் கொடுத்தார். யோசுவா தான் தேவனிடத்திலிருந்து பெற்ற பொறுப்பை வெற்றியோடு நிறைவு செய்து முடித்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று யோசுவா கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்களை இறுகப்பற்றிக் கொண்டான். அடுத்தது, எதிராளிகளோடு போராடவேண்டிய வேளைகளில் மட்டுமல்ல, எல்லா வேளைகளிலும் தேவபெலத்தைப் பெற்று, திடமனதோடு தன் பொறுப்பை நிறைவேற்றிக்கொண்டு சென்றான். இறுதியாக, தேவவார்த்தையை நம்பி, அதற்கு எப்போதும் கீழ்ப்படிந்து, ஜனங்களையும் அவ்வழியிலேயே நடத்தினான்.
தேவனுடைய வாக்குத்தத்தங்களில் பற்று, தேவபெலன், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் ஆகிய இம்மூன்றையும் தன் வாழ்க்கையில் இணைத்துச் செயற்படுத்தியதின் நிமித்தம் யோசுவா தன் வாழ்க்கையின் சகல நிலைகளிலும் வெற்றியைக் கண்டுகொண்டான். தான் தேவனிடத்திலிருந்து பெற்ற பொறுப்பை வெற்றியோடு நிறைவு செய்தான்.
இன்று நமது வாழ்விலும் அனைத்து நிலைகளிலும் வெற்றிகாண வேண்டும் என்று வாஞ்சிக்கின்றோம். அந்த வாஞ்சையின் நிறைவைக் காண முதலாவது தேவனை நோக்கிக் கூப்பிடுகின்றோம் என்பது உண்மை. ஆனால் நாட்கள் நகர நாம் தொடர்ந்தும் வெற்றியைக் காண்போமோ என்ற சந்தேகம் இருதயத்தை ஆட்கொள்கின்றது. சந்தேகம் வந்துவிட்டால் வாழ்க்கையை முன்னோக்கிப் பார்க்கும்போது பயமும் நம்மைப் பற்றிக்கொள்கின்றது. இதனால் வாழ்க்கை எப்போதும் தோல்வியாகவே காணப்படுகின்றது.
வாழ்வில் தோற்றுப்போன நிலையில் இன்று நீங்கள் இருப்பீர்களாகில் அந்த நிலையிலிருந்து மீண்டுகொள்ள முதலாவது, சூழ்நிலைகளைப் பார்ப்பதை விட்டு, நிலையான தேவனை நோக்கிப் பாருங்கள். இரண்டாவதாக, யோசுவாவைப்போன்று தேவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். மூன்றாவதாக தினமும் தேவனிடமிருந்து பெலத்தைப் பெற்று உங்கள் இருதயத்தையும், சிந்தனையையும் பெலப்படுத்திக் கொள்ளுங்கள். நான்காவதாக, தேவனின் வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படியுங்கள்.