ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 செவ்வாய்
“.. நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசா.43:19) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இப்புதிய மாதத்திலும் நமக்கு வழிகளை உண்டாக்கி, நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்தித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் தரிசனத்தோடு செயல்படுவோம்!
தியானம்: செப்டம்பர் 1 செவ்வாய்; வேத வாசிப்பு: நெகேமியா 1:1-3
“…என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன்” (நெகேமியா 2:5).
எகிப்து தேசத்திலே அடிமைகளாய் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்த கர்த்தர், அவர்கள் தமக்குப் பிரியமாக சாட்சியாக வாழ வேண்டுமென்று பல கற்பனைகள், கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால், அவர்களோ பல தடவைகள் அக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள். இதன் பலனாக பல எதிராளிகளினால் தாக்கப்பட்டு, இறுதியில் தமது சொந்த நாட்டையே இழந்தார்கள். கர்த்தருடைய தேவாலயமும், பட்டணத்தைச் சுற்றி இருந்த பாதுகாப்பின் அரண்களும் உடைக்கப்பட்டன. ஜனங்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டனர். இப்படியானதொரு காலகட்டத்தில் நெகேமியா என்ற யூதன் பாபிலோனின் அர்தசஷ்டா என்ற ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். என்றாலும் அவனது இருதயமும், சிந்தனையும் எருசலேமையும், அங்கிருக்கும் மக்களையும் குறித்ததாகவே இருந்தது. ஆனானியும் வேறு சில யூதர்களும் அவனைச் சந்தித்தபோது, எருசலேம் நகரைக்குறித்தும் மக்களைக்குறித்தும் விசாரித்தான். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டிருப்பதாகவும், ஜனங்கள் மிகுந்த நிந்தையை அனுபவிப்பதாகவும் அவர்கள் கூறினர். அதைக் கேட்டதும் நெகேமியா மிகவும் அழுது, துக்கித்து, உபவாசித்துத் தேவனை நோக்கி மன்றாடினான். பின்பு ராஜாவின் தயவையும் அனுமதியையும் பெற்று, எருசலேமின் அலங்கத்தைத் திரும்பவும் கட்டி, ஜனங்களின் நிந்தையை நீக்க வேண்டும் என்ற “தரிசனத்தோடு” புறப்பட்டான். கடைசிவரைக்கும் நெகேமியா அந்த தரிசனத்தின் நோக்கிலிருந்து பின்வாங்கவேயில்லை.
அன்று எருசலேமுக்கு நேர்ந்ததுபோன்று, இன்று அநேக குடும்பங்கள், சபைகள், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், நாடுகள் சத்துருவான சாத்தானின் சதி வலையில் சிக்குண்டு பலவிதங்களில் உடைவுகளுக்கும், அழிவுகளுக்கும், நிந்தைகளுக்கும் முகங்கொடுக்கின்றன. இந்த அழிவின் செய்திகளை கேட்கும்போது கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதாகக் கூறுகின்ற நாம், கிறிஸ்து நமக்குக் கொடுத்த “ஆத்தும ஆதாயம்” என்ற “தரிசனத்தோடு” செயற்படப் புறப்படுகின்றோம். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல ஆத்தும ஆதாயத்தை மறந்து நமது சுயதிட்டங்களாகப் பல்வேறு ஊழிய ஸ்தாபனங்களைக் கட்டும் தரிசனத்தோடு செயற்படுகின்றோம். அவை நல்ல காரியமாயினும், ஆரம்பத்தில் நமக்குள் இருந்த ஆத்தும ஆதாயத்தைக் குறித்த தரிசனத்திற்கு நாம் எவ்வளவு தூரம் உண்மையாயிருக்கிறோம் என்பது மிக முக்கியம். நெகேமியா தன் காரியத்தைச் செய்துமுடித்தார். நமது காரியம் என்ன?
ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் ஆத்தும ஆதாயத்தின் தரிசனத்தை முன்னெடுப்பதில் நாம் முன்நிற்கிறோமா? பின்நிற்கிறோமா? இயேசு கொடுத்த இறுதியானதும் பிரதானமானதுமான கட்டளையை நிறைவேற்றுவதில் நமக்கிருக்கும் தடை என்ன?
ஒரு நீண்ட நாள்!
அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2015)
– Dr.உட்ரோ குரோல்
தேவனுடைய வார்த்தைக்கும் விலங்கின உலகில் நிகழும் காரியங்களுக்கும் அநேக ஒற்றுமைகள் இருப் பதை வேதாகம மாணவர்கள் கண்டுகொள்வர். தேவனுடைய சிருஷ்டிகளில் சில உயிரினங்கள் தனித் தன்மைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. தேனீயை நாம் சுறுசுறுப்புக்கு உதாரணமாகக் கூறுகிறோம். ஒருவேளை இதைப் போன்று சுறுசுறுப்புள்ள வேறொரு உயிரினத்தை நம்மால் காணமுடியவில்லை போலும். ஆனால் ஒரு வகை பாடும் பறவையானது காலையில் 2.30 மணிக்கு எழுந்துவிடும். இரவு 9.30 மணி வரை அது தனது கடமைகளை ஓய்வில்லாமல் செய்து கொண்டிருக்கும். அதாவது சுமார் 19 மணி நேரம் அது வேலை செய்கிறது. அவ்வேளையில் அது தனது குஞ்சுகளுக்கு சுமார் 200 முறை ஆகாரம் அளிக்கிறது. தேனீயின் சுறுசுறுப்பைப் போன்றே இப்பறவையும் மிகவும் சுறுசுறுப்புடையது.
தேனீக்களின் சுறுசுறுப்பையும் இப் பறவையின் சுறுசுறுப்பையும் அப். பவுலின் வாழ்க்கையுடன் நாம் ஒப்பிடலாம். தமஸ்குவுக்கு செல்லும் வழியில் இரட்சிக்கப்பட்ட பவுல் தேனீயைப் போலவும், இப்பறவையைப் போலவும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தார். “.. சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்” (அப்.9:19,20) என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு வேளை பவுல், “ஆண்டவரே, நீர் என்னை இரட்சித்தால் அச்செய்தியை இவ்வுலகம் முடிவடையும்வரை கேட்டுக்கொண்டே இருக்கும்” என்று ஜெபித்திருப்பார்.
அப்போஸ்தலருடைய நடபடிகளின் கடைசி அதிகாரத்தில் அப். பவுல் இராயரிடத்தில் விசாரிக்கப்படுவதற்காக ரோமாபுரிக்கு ஒரு கடினமான பயணத்தை மேற் கொண்டார். அங்கு ஒரு வீட்டில் சிறைக்கைதியாக வைக்கப்பட்டார். அது அவருக்கு ஓய்வாகவும் பயணத்தின் சிரமங்களைத் தணித்துக் கொள்ளவும், தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் காலமாகவும் இருந்திருக்கலாம். இந்த சூழலில் கிறிஸ்துவைக் குறித்துப் பேசுவது தன்னுடைய வழக்குக்கு பாதகமாக அமைந்து இராயனால் தன்னுடைய ஊழியம் தடைபட்டுவிடும் என்றும் அவர் நினைத்திருக்கலாம். ஆயினும், “அதற்காக அவர்கள் ஒரு நாளைக் குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்” (அப்.28:23).
சிசெரியா பட்டணத்தில் இரண்டு ஆண்டுகள் கைதியாக இருந்தார். அவர் ரோம குடிமகனாக இருந்த மையால் தனது வழக்கை கடைசியாக அவர் இராயருக்கு மேல் முறையீடு செய்தார். ரோமாபுரிக்கு செல்லும் கடற் பயணம் அவருக்கும் மற்றவர்களுக்கும் பெருந்துன்பத்தைக் கொடுத்தது. கடுங்காற்றின் மத்தியில் பதினான்கு நாட்கள் அலைவுபட்டு இறுதியில் அவர்கள் ஒரு கடற் கரையை அடைந்தனர். தன்னுடன் பயணித்தவர்களுடன் கப்பலின் உடைந்த பலகைகள் மற்றும் துண்டுகளின் உதவியால் நீந்திக் கரை யேறினர். இது மட்டுமல்லாது, கடற்கரையில் ஒரு விரியன் பாம்பினால் கடிக்கப்பட்டும் உயிர் பிழைத்தார். மூன்று மாதங்கள் கழித்து தனது பயணத்தைத் தொடர்ந்து ரோமா புரியை அடைந்தார். இவை யாவும் அப்.28:23-க்கு முன்பு நடந்த சம்பவமாகும். கடுமையான விசாரணைக்குப் பின்னர் அவர் ஓய்வு எடுக்கவில்லை.
அன்று காலை தொடங்கி மாலை மட்டும் அவர் போதித்தும் பிரசங்கித்தும் வந்தார். இவ்வளவு நீண்ட காலம் உழைப்பதற்கு யாரும் அவருக்கு ஆலோசனை அளிக்கவில்லை.
தன்னுடைய அப்போஸ்தல ஊழியங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், கப்பற்சேதத்தைப் பயன்படுத்தி அதனால் பணம் சம்பாதிக்கவும் அவர் பிரசங்கிக்கவில்லை. அவருடைய செயல்பாடுகள் தேவனுடைய கிருபையை சாட்சியாக அறிவிக்கும் விதமாகவே அமைந்தது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து சாட்சியளித்து பிரசங்கித்தும், இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா என்றும் விளக்கம் அளித்து வந்தார். அவர் இயேசுவை பிரசங்கித்ததே சரியான செய்தி. அதை சரியான விதத்தில் காலை முதல் மாலை வரை செய்து வந்தார்.
தன்னுடைய ஊழியத்தின் இறுதிக்காலம் வரைக்கும் அவர் அயராது உழைத்தார். இதைப் போன்ற கடமையும், வாய்ப்பும் செய்தியும் நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நாமும் தேனீயைப் போலவும், பாடும் பறவையைப் போலவும் உழைக்க வேண்டும். நாள் முழுவதும் அப். பவுலைப் போலவே நாமும் உழைத்து, தேவனுடைய ஊழியத்தை நிறைவாய் செய்தோம் என்று திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் முடிப்போமா?
அதிகாலைப் பாடல்:
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்!
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
ஆப்பிரிக்க மொழிகளில் வேதாகமம்
மொஃபட், குருமன் என்னுமிடத்துக்குச் சென்று தனது இறைபணியை ஆரம்பித்தார். அங்கு அவர் பலவிதமான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தபோதிலும் 1823 இல், அப்பிரதேசத்து மக்களைத் தாக்க வந்த இன்னுமொரு ஆப்பிரிக்க கோத்திரத்திடமிருந்து அவர்களைப் பாதுகாத்தமையினால் அவர், அவர்களது தலைவராகினார்.
எனினும் அவரால் சுவிசேஷத்தை அப்பிரதேச மக்களுக்கு அறிவிக்க முடியாதிருந்தது. இதற்குக் காரணம் தான் அவர்களது மொழியைச் சரிவர கற்காதமையே என்பதை உணர்ந்து கொண்ட மொஃபட், 1827 இல் 11 வாரங்களாக அப்பிரதேச மொழியைத் தொடர்ச்சியாகக் கற்றார். அதன்பின் வேதாகமத்தை அம்மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் லூக்கா சுவிசேஷத்தை மொழி பெயர்த்த மொஃபட் கேப்டவுனுக்குச் சென்று, அரச அச்சகத்தில் அதை அச்சிட்டார்.
பின்னர், தனது இருப்பிடத்திற்கு திரும்பி வரும்போது மிஷனரி சங்கம் அனுப்பியிருந்த அச்சு இயந்திரத்தையும் எடுத்து வந்து வேதாகமத்தின் மற்றபகுதிகளை மொழி பெயர்த்து அச்சிட்டார். முழுவேதாகமத்தையும் குருமன் பிரதேசத்து பெக்குவானாஸ் எனும் இனத்தவரது மொழியில் மொழி பெயர்த்து முடிக்க மொஃபட்டுக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டது.
ஆப்பிரிக்காவில் பணியாற்றிய புரட்டஸ்தாந்து சபை மிஷனரிகளில் ரொபர்ட் மொஃபட் முதலிடம் வகித்தாலும் அவரது மருமகனான டேவிட் லிவிங்ஸ்டனே முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் தனது 27 ஆவது வயதில் லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பில் ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றார். ஆப்பிரிக்காவில் இவர் மிஷனரியாகப் பணியாற்றாதபோதிலும், ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலுள்ள நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்திப்பதற்கான பாதைகளைக் கண்டு பிடிக்கும் பல பிரயாணங்களை மேற்கொண்டார். 1841 ஆம் ஆண்டிலிருந்து 30 வருடங்களாக டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவில் மேற்கொண்ட பிரயாணங்களின் போது கண்டுபிடித்த பாதைகள், பிற்காலத்தில் மிஷனரிகள் அங்குள்ள மக்களுக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல உதவின. இதனால் இருண்ட கண்டமென அழைக்கப்பட்டு வந்த ஆப்பிரிக்க கண்டத்திற்குள் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது.
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கிணி எனும் நாட்டில் 1918 ஆம் ஆண்டு மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்நாட்டின் சில மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிகின்றோம். மேற்கு ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான சியரலியோன் இல் 1816 ஆம் ஆண்டே மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 150 வருடங்களின் பின்பே முழுவேதாகமமும் அந்நாட்டின் ஒரு கோத்திர மக்களது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 1970ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி அந்நாட்டின் ஒரு கோத்திர மொழியில் முழுவேதாகமமும், 3 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடும், நான்கு கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன.
அதே போல இன்னுமொரு மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவிலும் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் அதிகம் நடைபெறவில்லை. 140 வருட கால மிஷனரிப் பணியின் பின்னர் அந்நாட்டின் 11 கோத்திர மக்களது மொழிகளில் மட்டுமே வேதாகமத்தின் சில பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 1967ஆம் ஆண்டே அந்நாட்டின் மொழிகளில் ஒன்றான பெல் எனும் மொழியில் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இதேவிதமாக மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட் நாட்டிலும் வேதாகம மொழிபெயர்ப்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
45 வருட கால மிஷனரிப் பணியின் பின்பே இரு கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டது. அவற்றுள் ஒன்று 1953 இலும் மற்றது 1960 இலும் வெளிவந்தது. இதைவிட இன்னும் 11 கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான மாலி இல் 1919ஆம் ஆண்டு மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்நாட்டின் பம்பாரா எனும் மொழியில் 1937இல் புதிய ஏற்பாடும், 1962இல் முழு வேதாகமமும் வெளியிடப்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மேல் வொல்டா எனும் நாட்டில் 1921 ஆம் ஆண்டு மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நாட்டின் மோர் எனும் மொழியில் முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாடானது இன்னும் இரு மொழிகளில் முறையே 1954 இலும் 1958 இலும் வெளியிடப்பட்டன. இந் நாட்டின் வேறு சில கோத்திர மொழிகளிலும் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. கானா எனும் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 5 மொழிகளில் வேதாகமமும், 5 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாக 1970ஆம் ஆண்டு அறிக்கைகள் அறியத்தருகின்றன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மொத்தம் 250 மொழிகள் பேசப்படுகின்றன.
1970ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 7 மொழிகளில் புதிய ஏற்பாடும் 45 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதை விட இன்னும் சில மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தன.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2015)
1. இயேசுவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். சில ஆண்டுகளாக சத்தியவசன ஊழியப்பணியில் விசுவாசப்பங்காளராக கரம் கொடுத்து சிறிது பொருளாதார உதவியினால் தேவபணியில் பங்கெடுக்க ஆண்டவர் கொடுக்கிற கிருபைக்காக நன்றி. சத்தியவசன வெளியிடுகள் அதில் வெளியாகும் சத்தியங்களை குறித்து எழுத்தினால் பாராட்டுவதைவிட நடை முறையில் வாழ்ந்துகாட்டுவதே தேவனுக்கு மகிமையுள்ளதாயிருக்கும் என்பதால் அதன்படி வாழ பிரயாசப்படுகிறேன். ஒவ்வொரு ஆலோசனையும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையே தேவன் விரும்புகிறபடியால் இதற்கேற்றபடி வாழ எங்களுக்காக ஜெபியுங்கள்.
Mr.J.M.Chinnapparaj, Rajapalayam.
2. Dear Brother in Christ, Thank you for your prayers. My daughter Janice has got 1095 marks in +2 exam. Your Magazine, daily reading book, TV Programmes are very useful to us. We are praying for your Ministry.
Dr.Simpson Ravi, Palayamkottai.
3. தங்களது மாத இதழ் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. நான் அதிகம் விரும்பி படிக்கும் பத்திரிக்கை. மேலும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உறுதுணையாக உள்ளது. எனக்கும் தொடர்ந்து பத்திரிக்கையை அனுப்பித் தரக் கேட்கிறேன்.
Mrs.Ramani Balram, Ooty.
4. வணக்கமும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. உங்கள் பத்திரிக்கைகளும், காலண்டர் மற்றும் அவ்வப்போது பங்காளர்களுக்கு அனுப்பும் புத்தகங்களும் எங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. ஊழி யங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம்.
Mr&Mrs.Vasan, Agastheeswaram.
5. கிறிஸ்துவுக்குள் அன்புள்ள ஐயா, அனுதினமும் கிறிஸ்துவோடு தொடர் நடைபோட ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ எனக்குத் துணை செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நான் நடக்க வேண்டிய வழி, செயலாற்ற வேண்டிய திட்டங்களை எனக்குத் தந்து அவைகளை நிறைவேற்ற உதவிசெய்கிறது. அதற்காக நான் என் தேவனுக்கும் செய்திகளை அனுப்பித்தரும் உங்களுக்கும் நன்றி கூறுகிறேன். பாடுகள் நிறைந்த என் வாழ்வில் சரீரத்தின் உடல் வேதனைகளையும் மறந்து ஆவிக்குரிய நன்மைகளை ருசித்து சுவைத்து இன்பம் காண தியானபுத்தகம் எனக்கு துணை செய்கிறது.
Mrs.Navamalar Johnson, Tirunelveli.
6. சத்தியவசனம் சஞ்சிகை மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மிகவும் பயனுள்ளவை. தினசரி தின தியானங்கள் மிகவும் ஆழமான வேதவசனங்களாக உள்ளதால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகுந்த பயனுடையதாக உள்ளன. கர்த்தர்தாமே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக!
Mrs.Glory Sam, Trichy.