ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 சனி

“.. நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் … தேடினபோது நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார்” (2நாளா.14:7) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை தமது வல்ல கரத்தால் அரவணைத்து பாதுகாத்துக்கொண்டமைக்காக, ஈவாய் தந்த ஒவ்வொரு நாட்களுக்காகவும் நன்றி செலுத்துவோம்.

துதியினால் நிரம்பியிரு!

தியானம்: அக்டோபர் 31 சனி; வேத வாசிப்பு: சங்கீதம் 136:1-26

“கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங்கீதம் 136:1).

நாம் கடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பிப் பார்ப்போமானால், எத்தனை ஆச்சரியமாக கர்த்தரின் சமுகம் நம்மோடுகூட வந்துள்ளது என்பதை உணரமுடியும். எத்தனை கஷ்டங்கள், துக்கங்கள், கேள்விகள், சந்தேகங்கள், சோர்வுகள், வருத்தங்கள், எதிர்ப்புகள், அவமானங்கள்! இவைகளின் மத்தியிலும் நம்மை நடத்திவந்த பரமபிதாவின் அன்பு எத்தனை பெரியது! அதை எண்ணி ஆண்டவரை துதிப்போமா!

துதி என்பது இன்னொருவர் சொல்லி வருவதில்லை. அது உள்ளத்தில் இருந்து ஊற்றெடுக்கவேண்டும். அது ஊற்றெடுக்கவேண்டுமானால் நாம் ஆண்டவரை நமது வாழ்வில் அனுபவித்திருக்க வேண்டும். பிள்ளையற்றிருந்த லேயாள், அற்பமாக எண்ணப்பட்டாள். கர்த்தர் அவளது சிறுமையைப் பார்த்து அவள் கர்ப்பத்தை ஆசீர்வதித்தார். அடுத்தடுத்து அவளுக்கு நாலு குமாரர்கள் பிறந்தார்கள். நான்காவது மகன் பிறந்தபோது, அவள், “கர்த்தரைத் துதிப்பேன்” (ஆதி.29:35) என்று கூறி அவனுக்கு ‘யூதா’ என்று பெயர் வைத்தாள். இன்று நமது வாழ்க்கையில் நம்முடைய சிறுமையைப் பார்த்து நமக்குப் பதில் கொடுத்த அந்த அன்பின் இயேசுவைத் துதிக்கிறோமா?

தாவீது பாடிய அத்தனை துதி கீதங்களும் அவர் சொகுசான சூழ்நிலையில் இருந்தபோது எழுதவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர் எதிர்ப்புகள், இழப்புகள், நிந்தைகள், அவமானங்கள் என்று பல அனுபவங்களுக்கூடாகக் கடந்து செல்லவேண்டியதிருந்தது. ஆனாலும், அவர் எப்போதும் தன் வாழ்க்கையைத் துதியினால் நிரப்பி, அத்துதியின் ஊடாக தமது அனுபவங்கள் அனைத்தையும் வெற்றியோடு கடந்து சென்றார். அப்படியிருக்க, நமது வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் மலைபோன்ற துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள், வறுமை இவையனைத்திலும் நமது நிலை என்ன?

அருமை சகோதரனே, சகோதரியே, எல்லா நிலையிலும் உன்னைத் தாங்கி வழிநடத்திவரும் உன் இயேசுவை நீ துதிக்கிறாயா? அல்லது, வாழ்வின் சோதனைகளால் சோர்ந்து, பற்றற்றவனாக தளர்ந்துபோய் இருக்கிறாயா? இது வரையிலும் உன்னை நடத்தி வந்தவரை மறந்து, உன் சூழ்நிலையின் காரணமாக நீ தேவனைச் சந்தேகிக்கலாமா? தம்மையே உனக்காக முழுமையாக ஈந்தவர் உன்னைக் கைவிடுவாரா? அவருடைய கிருபை என்றும் நமக்குண்டு. நீ மறந்தாலும் உன்னை மறவாத இயேசுவானவர், இறுதிவரை தம் தயவினாலும் கிருபையினாலும் உன்னைத் தாங்கி வழிநடத்துவார். ஆகையால், உன் சந்தேகத்தைக் களைந்து, இப்பொழுதே உன் தேவனைத் துதிக்க ஆரம்பித்து விடு. தேவனைத் துதிப்பதே நமக்கு பெலன்.

அன்றாடம் நம்முடைய ஜெபத்திலும், கூட்டு ஜெபங்களிலும் நாம் துதிக்கும்போது அது பழக்கதோஷத்திலிருந்து வெளிவருகிறதா? அல்லது, உண்மையாகவே நம் ஆண்டவரை அனுபவித்து ருசித்துத் துதிக்கிறோமா?

ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 வெள்ளி

“தேவன் நமக்கு … ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங்.46:1) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கும் 9 நபர்களுக்கு கர்த்தர் அவர்கள் பட்சத்தில் அவர்களுக்கு துணைநின்று, அவர்களது தேவைகளில் அற்புதங்களைச் செய்திட ஜெபிப்போம்.

கர்த்தர் நீதி செய்வார்

தியானம்: அக்டோபர் 30 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 37:1-40

“துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்”(சங்கீதம் 37:17).

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகம். இயேசுவை ஏற்று, அவரது வழியில் வாழவேண்டும் என்று வாஞ்சிக்கும் ஒருவன், அநீதி நிறைந்த இந்த சமுதாயத்திலும், துன்மார்க்கரின் வலையிலும் சிக்கித் தவிக்கிறான் என்பது உண்மை. அப்போது, எந்தப் பெரிய விசுவாசியும் ஒருகணமாவது தடுமாறமாட்டான் என்று சொல்லமுடியாது. “நமக்கு நீதி எப்போது கிடைக்கும்? நீதி உலகத்திற்குத் தெரியாது. துன்மார்க்கரின் பொய்யான குற்றச்சாட்டுக்களால் மனமுடைந்து, மதிப்பற்றுப் போனோமே” என்றெல்லாம் வேதனைப்பட நேரிடுகிறது. அதிலும் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருக்கிற பலரே கிறிஸ்துவின் பிள்ளைகளைத் துன்பப்படுத்தி, அவர்களது நீதியை அவமாக்கும் காரியங்களில் இறங்கும்போது அது அதிக வேதனையைக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குள் அகப்பட்டு மனமுடைந்திருக்கும் சகோதரனே சகோதரியே, நீ கலங்காதே.

நமது ஆண்டவர் நீதிபரர். அப்படியிருந்தும் அவர் உலகில் வாழ்ந்தபோது, அநீதியின் கொடுமையை அதிகமாக அனுபவித்தார். அவருடைய நீதி எடுபட்டுப்போயிற்று. ஆனாலும் அவர் அவமானத்தை எண்ணாது தன் பிதாவின் நீதியைத் தரித்தவராக இறுதிவரை வழுவாதவராக வாழ்ந்தார். பிதாவோ, இயேசுவோடு கூடவேயிருந்து, சிலுவை மரணத்திலும் தம் குமாரனைத் தாங்கி, நீதியின் பொற்கிரீடத்தை அவருக்குக் கொடுத்து, மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்குக் கொடுத்தார். அவர் திரும்பவும் நீதி செய்கிறவராக வரும்போது, அவரைக் குத்தினவர்களும் அவரைக் கண்டு புலம்பத்தான் போகிறார்கள்.

அந்த நீதியுள்ள ராஜாதி ராஜாவின் பிள்ளைகளான நாம் எத்தனை வேதனைகளை அனுபவித்தாலும் அவர் நம்மைவிட்டு விலகமாட்டார். தம்முடைய கரத்தினால் தாங்குவார். நமது நீதியை வெளிப்படுத்துவார். “அவர்கள் (நீதிமான்கள்) அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்” (சங். 37:40) ஆகையால், நாம் கலங்காது வெட்கப்படாது, எந்த அவமானத்திலும் பொறுமையோடு கர்த்தருக்குள்ளான நீதியிலே நிலைத்திருக்கலாம். “…உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்” (ஏசா.58:8). ஆகவே, அவசரப்பட்டு நமது நீதியை நாமே விளங்க வைக்க முயற்சிக்க வேண்டாம். கர்த்தரே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளட்டும். அப்போது நாம் அசைக்கப்பட மாட்டோம்.

உண்மையாகவே நாம் தவறு செய்யாதபோது, அநீதியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வேளைகளை நாம் சந்தித்திருக்கிறோமா? அந்த நேரங்களில் நாம் எப்படி நடந்திருக்கிறோம்? நமது ஆத்திரமும், நமது நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற வெறியும் நமக்கு என்ன பலனைத் தந்திருக்கிறது?