ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 வெள்ளி

“சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்” (சங்.33:2) கர்த்தரை கீர்த்தனம் பண்ணும்படியாக செய்யப்பட்டு வரும் சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களின் மூலமாக கர்த்தர் நாமம் மகிமைப்படவும், இவ்வூழியத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

தேவனுக்குப் பிரியம்

தியானம்: அக்டோபர் 9 வெள்ளி; வேத வாசிப்பு: மத்தேயு 3:13-17

“என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக் கண்கள்” (உன்னதப்பாட்டு 1:15).

தன் தகப்பனைப் பிரியப்படுத்தும் மகன், எப்போதும் தன் தகப்பனுக்குக் கீழ்ப்படிகிறவனாகவும், தகப்பன் சித்தத்தையே தன் வாழ்க்கையில் நிறைவேற்றுகிறவனாகவும் இருப்பான். தகப்பனும் அவனைக் குறித்து மகிழ்ச்சியடைவான். இதற்கு மாதிரி இயேசு உலகில் வாழ்ந்த வாழ்க்கைதான். பரமபிதா தமது குமாரனைக் குறித்து, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்.3:17) என்று சாட்சி கொடுத்திருக்கிறார். குமாரனாகிய இயேசுகிறிஸ்து பிதாவுக்கு ஒரேபேறான குமாரனாக இருந்தும், மனுக்குலத்தின் பாவத்தை நீக்க, பிதாவின் சித்தப்படி விண்ணுலகம்விட்டு மண்ணுலகிற்கு வந்து, கீழ்ப்படிதலோடு, தம்மைத் தாழ்த்தினார். அவர் இவ்வுலகிலே வாழ்ந்தபோது, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதையே தமது போஜனமாகக் கொண்டி ருந்தார். அதன்பிராகாரம் மனுமக்களுக்கு பாவத்தில் இருந்து மீட்பைப் பெற்றுத் தந்தார். உண்மையாகவே இயேசு பிதாவின் நேச குமாரனாகவே ஜீவித்தார்.

“என் பிரியமே” என்று மணவாளன் தன் மணவாட்டியைப் பார்த்து அன்போடு அழைத்த இந்த உன்னதப்பாட்டு வார்த்தை, இன்று திருச்சபைக்கும் மணவாள னாகிய இயேசுவுக்கும் உள்ள உறவை நமக்கு வெளிப்படுத்துகிறது. நாம் யார்? இத் திருச்சபையின் அங்கத்தினர். இன்று ஆண்டவர் நம்மைப் பார்த்து, “என் பிரியமே” என்று அழைக்கத்தக்கதாக நாம் அவருக்குப் பிரியமாய் வாழுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுப் பார்ப்போமாக.

இன்று, இயேசுவின் பிள்ளை என்று சொல்லிக்கொள்கிற நாம், “என் பிரியமே” என்று ஆண்டவர் நம்மை அழைக்கவும், “இவன் எனக்குப் பிரியமான வன்” என்று பிறர் மத்தியில் நமது பரம பிதா சாட்சிசொல்லவும் தக்கதாக நமது வாழ்வு இருக்கிறதா? நாம் யாருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறோம்; நாம் யாருக்குப் பிரியமாக நடக்கிறோம்?

இப்பாதை கடினம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், ‘கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்’ என்று பெயர் பெற்ற தாவீது ராஜா பலவேளைகளிலும், “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்.40:8) என்றும், “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தரு ளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழி யிலே நடத்துவாராக”(சங்.143:10) என்றும், விண்ணப்பம்செய்து, கர்த்தருக்குப் பிரியமானதை தன் வாழ்க்கையில் நிறைவேற்றுவதையே வாஞ்சித்து வாழ்ந் தார். நாம் மெய்யாகவே தேவனுடைய பிள்ளைகள் என்றால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம் அல்லவா!

“நான் என் நேசருடையவன், அவர் பிரியம் என்மேல் இருக்கிறது” என்று சொல்கிற நாம் உண்மையாகவே அவருடைய நேசத்திற்கு ஏற்றபடி வாழுகிறோமா? எங்கே நாம் தவறுகிறோம்?