ஜெபக்குறிப்பு: அக்டோபர் 25 ஞாயிறு
“பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (சங்.66:1) என்ற வாக்குப்படியே கர்த்தரே தேவன் என நாவுகள் யாவும் அறிக்கைப்பண்ணவும், கர்த்தரைத் துதிக்கும் துதியின் சத்தம் பூமியின் எல்லையெங்கிலும் தொனிக்கத்தக்கதாக மன்றாடுவோம்.
உனக்கொருவர் இருக்கிறார்
தியானம்: அக்டோபர் 25 ஞாயிறு; வேத வாசிப்பு: சங்கீதம் 142:1-7
“…நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.” மத்தேயு 12:20
“சர்வத்தையும் படைத்த என் சர்வ ஜீவ தயாபர பிதாவே, சிறு நாணற்புல்லாக என்னை படைத்தீரே. நன்றி! இதுவரை காலமும் என்னை ஆச்சரியமாகப் பாதுகாத்து, போஷித்து வளர்த்து வந்தீர். நன்றி! ஆனால் இன்று நான் என்னைச் சுற்றியுள்ளவற்றினால், மரங்களாலும், கற்களாலும், வழிப்போக்கராலும் அதிகமாய் நெருக்கப்பட்டு முறிந்துபோகும் நிலையில் இருக்கிறேன். நெருக்கத்தை நீக்கி, எனக்கு நியாயம் செய்து என்னை விடுவித்தருளும். அப்போது உமக்காக நான் என்னையே கொடுப்பேன்” என்று ஜெபித்ததாம் நெரிந்துபோன நிலையிலிருந்த ஒரு ‘நாணற் புல்’. அவ்வழியே வந்த ஒரு பெண், அந்தப் புல்லைக்கண்டு அதனை மெதுவாகத் தூக்கி, ஒரு தாபரத்தைக் கொடுத்து தண்ணீர் கிடைக்க வழியும் செய்துவிட்டுப் போனாளாம். அந்தப் புல் தேவனுக்கும் அவளுக்கும் நன்றி கூறியது. நாட்கள் நகர்ந்தன. எபிரெய ஆண் குழந்தைகளைக் கொன்றுவிடும்படி எகிப்து ராஜாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தனது அழகான ஆண் குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தோடு, நதியோரம் நடந்துவந்த அதே பெண்ணின் மன ஆதங்கத்தை அறிந்த அந்த நாணற்புல், ‘இதோ என்னை எடுத்து ஒரு பெட்டி செய்து உன் குழந்தையைக் காப்பாற்று’ என்று சொல்லுவதுபோல் காற்றில் அசைந்தாடிய தாம். அதுவே குழந்தை மோசேயைக் காப்பாற்றிய நாணற்புல்; அது பெட்டியாக மாறியது. அழிந்துபோக இருந்த தன்னை எடுத்துப் பயன்படுத்திய தேவனுக்கு அது நன்றி சொன்னதாம். (இது ஒரு கற்பனை)
எல்லாப் பக்கமும் நெருக்கப்பட்டு, முறிந்துபோகும் நிலையில் சோர்ந்து போயிருக்கும் என்னை யார் விடுவிப்பார்; யார் எனக்கு நியாயஞ்செய்வார் என்று மனமுடைந்திருக்கும் தேவபிள்ளையே, “தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ் செய்வேன்” (எரே.15:11) என்று வாக்களித்த கர்த்தர் உனக்கிருக்கிறார். அவர் நீதியுள்ளவர், அன்புள்ளவர், இயல்பாகவே உன்னை வழிநடத்த வல்லவர். உன் ஆவியில் நீ நொந்திருக்கும்போது அவர் உன்னை ஒதுக்கமாட்டார், நொறுக்க மாட்டார். நீ “ஒன்றுக்கும் உதவாதவன்” என்றுன்னை தள்ளமாட்டார். மெதுவாகத் தூக்கி, உன்னை நடத்துவார். மங்கும் உன் ஒளியை அணைக்கமாட்டார். அதை இன்னும் பற்றியெரியச் செய்வார். உலகம் உன்னை உதவாது என்று தள்ளலாம். ஆனால் ஆண்டவர், உன்னைத் தாங்குவார். நீ அவரை நோக்கிக் கூப்பிடு. அவர் உன்னை விசாலத்திலே வைப்பார். இவை வெறும் வார்த்தை ஜாலம் அல்ல; இது சத்தியம். கர்த்தருடைய பிள்ளைகளின் அனுபவம். இந்த அனுபவம் இன்று நமதாகட்டும்.
நொறுங்குண்ட சூழ்நிலைகளில் நாம் இதுவரை யாரிடம் தஞ்சம் புகுந்தோம்? யார் உதவியை நாடினோம்? அதனால் என்ன நேர்ந்தது? ஆனால், கர்த்தரைச் சார்ந்து நிற்கும்போது அது என்ன அனுபவத்தைத் தரும்?