ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 திங்கள்

“.. ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (சங்.91:15) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நம்முடைய தேவைகளில் உதவி செய்தவரும் தப்புவித்தவருமாகிய தேவாதி தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.

நான் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன்

தியானம்: நவம்பர் 30 திங்கள்; வேத வாசிப்பு: எண்ணாகமம் 6:22-27

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1:3).

“மருத்துவமனைக்கு அவசரமாகப் செல்லவேண்டியிருந்ததால் ஞாயிறு ஆராதனை முடியுமுன்பே வந்துவிட்டேன்” என்றார் ஒரு விசுவாசி. “சென்ற வாரம், ‘வழுவாதபடி உங்களைக் காக்கவும்…’ என்று போதகர் வழக்கத்தைவிட அற்புதமாக அளித்த ஆசீர்வாதத்திற்கு நிற்காததால்தானோ சென்ற வாரம் நீர் வழுக்கி விழுந்து, இப்போது ஆஸ்பத்திரிக்கு அலைகிறீர்?” என்றார் மற்றவர்.

வனாந்தரத்திலே அலைந்து திரிந்த இஸ்ரவேலர் தேவனுடைய துணையின்றி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை தம்மால் நெருங்க முடியாது என்பதை அறிந்திருந்தனர். தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், பாதுகாப்புக்காக தேவனையே நோக்கிப் பார்க்க நேர்ந்தது. ஆனால், வாழ்வுக்குரிய ஒழுங்குகளையும் பிரமாணங்களையும் அளித்த தேவன், உணவும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பெலப்படுத்தவும் தவறவில்லை. இன்றைய வாசிப்புப் பகுதியிலே, இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பது எப்படி என்று கர்த்தர் மோசேக்குக் கற்றுக்கொடுத்ததை வாசிக்கிறோம். ஆக, ஆசீர்வதிப்பது தேவ சித்தம்! அடுத்தது, அவர் என்ன சொல்லுகிறார்: கர்த்தர் காக்கிறவர்; கர்த்தர் கானானுக்கு வழிநடத்தும்படி கிருபையாய் இருக்கிறார்; அவரே சமாதானம் அருளுகிறவர். பாதுகாப்பு, கிருபை, சமாதானம் இவற்றின் ஊற்றான தேவன் கூடவே இருப்பதே மேலான ஆசீர்வாதம்! இவையின்றி அவர்கள் கானானைச் சேர்ந்திருக்க முடியாது.

இது இஸ்ரவேலருக்கு மாத்திரமல்ல, நமக்குந்தான். இந்தப் பகுதியிலே ‘உன்னை, உன்மேல்’ என்று ஆறு தடவைகள் கூறப்பட்டுள்ளது. ஆகவே, பரம கானானை நோக்கிப் பயணிக்கும் நாமும் இதனைச் சுதந்தரிக்கலாம். யூதாவும் இதனையே குறிப்பிட்டுள்ளார். நம்மைக் காக்கவும், தமது சந்நிதானத்தில் மாசற்றவர்களாய் நம்மை நிறுத்த கிருபையாயும், மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அருளுகிறவருமாகிய தேவன் நம்மோடிருப்பதே உலகம் என்ற வனாந்தரப் பாதையில் பயணிக்கும் நமக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைத் தருகிறது.

“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்காய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், அவர் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். ( யூதா 24,25).

தேவ ஆசீர்வாதம் என இதுவரை நாம் நினைத்திருந்தது என்ன? பாதுகாப்பிற்காக சமாதானத்திற்காக யாரை நாடுகிறோம்? ஏற்கனவே சகல ஆசீர்வாதத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நான் ஏன் தடுமாறுகிறோம்?

ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 ஞாயிறு

“பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி.12:14) இவ்வாக்குப்படியே தேவன் விரும்புகிற பரிசுத்தத்தோடு ஆலய ஆராதனையில் பங்கெடுத்து, அகில உலகமெங்குமுள்ள திருச்சபைகளிலும் தாழ்மையின் சிந்தை, ஐக்கியம், ஆத்துமாக்களை குறித்த கரிசனை இவைகள் காணப்பட ஜெபிப்போம்.

சபையாகிய சரீரத்தின் அவயவம்

தியானம்: நவம்பர் 29 ஞாயிறு; வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 12:12-31

“அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது” (எபே.4:16).

“கண்ணாடி போடுவதற்கு மூக்கும் காதும் மறுத்துவிட்டால் கண் எப்படிப் பார்க்கும்;?” இப்படியாக சபை ஒற்றுமையைக் குறித்து முழக்கினார் பிரசங்கியார். சபையிலிருந்து எழுந்தது ஒரு குரல். “அப்படி மறுத்தால் இருக்கவே இருக்கிறது “Contact Lens”. விபத்திலே வெட்டுண்ட தன் கையை எடுத்துக்கொண்டு பல மைல்கள் ஓடி, வைத்தியர்கள் உதவியுடன் அதைப் பொருத்திக்கொண்ட ஒருவரிடம், ‘இது எப்படி உங்களால் முடிந்தது’ என்று கேட்டபோது, “இது என் கை ஐயா” என்றாராம். சம்பவத்தை நாம் பத்திரிகையில் வாசித்திருக்கிறோம்.

சிறிதும் பெரிதும் பலதரப்பட்ட பணிபுரிகிறதுமான பல அவயவங்களை ஒன்று கூட்டி, உணர்வு நரம்புகளாலும் இரத்தக் குழாய்களினாலும், தசைநார்களாலும் ஒன்றிணைத்து சரீரத்தைப் படைத்து, அதைத் தலையோடு இணைத்து, அதன் மூலமாக பின்னால் வரும் சபையையும், அதன் தலையாக கிறிஸ்துவும், சரீரமாக சபையும், அவயவங்களாக நாமும் இருப்போம் என்பதை அந்தப் படைப்பிலேயே வெளிப்படுத்திய தேவஞானத்தின் முன் தலைவணங்குவோமாக. சிறிதோ பெரிதோ நமது சரீரத்தின் ஒவ்வொரு அவயவமும், விரலிலுள்ள நகம் கூட நமக்கு முக்கியம். அதேபோல கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அவய வங்களும் வேறுபட்டவை, வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவை. ஆனால், சரீரம் முழுமையாக இயங்குவதற்கு எல்லா அவயவங்களும் தேவை. ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு திறமை உண்டு. அதைக் கண்டுகொண்டு பயன்படுத்துவது முழுச் சபையினதும் கடமை. அதேபோல, ஒருவன் பெலவீனப்பட்டால், உடைந்துபோனால் அவனை வெட்டிப்போடாமல், தாங்கி நிமிர்த்தி, பெலவீனத்தைச் சுட்டிக்காட்டி வெட்கப்படுத்தாமல் அன்பினால் வென்று வெற்றி நடைபோடுமானால், அதுதான் சபையும், சபை வளர்ச்சியும் ஆகும். மாறாக, அவயவங்கள் ஒன்றுக்கு விரோதமாக ஒன்று போரிட்டால் அதன் வேதனை கிறிஸ்துவுக்குத்தான். நாம் ஒருவனை நோகடிக்கும்போது கிறிஸ்துவே வேதனைப்படுகிறார்.

“ஆதலால், ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்” (1 கொரிந்தியர் 12:26).

திருச்சபையில் நாம் எந்த அவயவமாய் இருக்கிறேன்? நமது திருச்சபையில் நாம் யாருடனாவது மனக்கசப்பில் இருக்கிறேனா? ஏன் நம்மால் மற்றவரைப் பொறுத்துக்கொள்ள முடியாதிருக்கிறது?