ஜெபக்குறிப்பு: நவம்பர் 24 செவ்வாய்

நம்முடைய தேசத்தின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த இடங்களிலே சுவிசேஷம் வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் (1தெச.1:5) கடந்து செல்வதற்கு தேவ அநுக்கிரகம் உண்டாயிருக்கவும், அந்த பகுதிகளில் ஊழியம் செய்யும் மிஷனரிகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.

நானே கிறிஸ்துவின் சாட்சி

தியானம்: நவம்பர் 24 செவ்வாய்; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 1:3-14

“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்போஸ்தலர் 1:8).

ஒருவருக்காகச் சாட்சி சொல்லும்போது, அந்த ஒருவருக்கு நான் என்ன செய்தேன் என்பதல்ல; அந்த ஒருவர் எனக்கு என்ன செய்தார் என்பதைக் கூறுவதே சாட்சியாகும். இப்படியிருக்க, “நான் கர்த்தருக்காக இப்பணியைச் செய்ய கர்த்தர் கிருபை செய்தார்” என்று சொன்னால், சொல்லுகிறவன் எப்படி கர்த்தருக்குச் சாட்சியாவான்? மாறாக, “தமது பணியில் கர்த்தர் என்னையும் இணைத்துக்கொண்டார்” என்று சொன்னால் எப்படியிருக்கும்?

இயேசுவானவர் தமக்குச் சாட்சிகளாக தமது சீஷரை நியமித்தபோது, நீங்கள் போய் கண்டதையும் கேட்டதையும் உங்கள் இஷ்டப்படி சாட்சியாக அறிவியுங்கள் என்று அனுப்பவில்லை. கண்டதும் கேட்டதும் அனுபவித்ததுமாகிய மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் மரித்து உயிர்த்த இயேசுவின் நாமத்தினிமித்தம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்றும், “நீங்களே இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” (லூக்.24:47,48) என்றும் சீஷர்களுக்குத் தெளிவாகக் கட்டளையிட்ட ஆண்டவர், அப்படியே அவர்களை உலகிற்குள் அனுப்பிவிடவில்லை. முதலில், “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்” என்றுதான் ஆண்டவர் கட்டளையிட்டார்.

முதலாவது, காத்திருக்கவேண்டும்; பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆவியானவர் இவர்களை பெலத்தாலும் வல்லமையாலும் நிரப்புவார்; பின்னரே புறப்பட்டுப்போய், ‘இயேசுவே ஆண்டவர்’ என்று சாட்சியாய் அறிவிக்கவேண்டும். இதுதான் ஒழுங்கு. பரிசுத்தாவியானவர் தருகின்ற அந்த உன்னத பெலனானது, ஒரு சாதாரண மனுஷராகிய நம்மை தைரியம், வைராக்கியம், அதிகாரம், திடநம்பிக்கை, கெட்டித்தனம் எல்லாம் நிரம்பிய ஒருவனாகப் பெலப்படுத்துகிறது. ஆகவே, பரிசுத்தாவியானவரின் இப்பெலன் இல்லாமல் எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ என்று சாட்சி பகரமுடியாது. நாமோ தலைகீழாகவே செயற்படுவதுண்டு. நமது சொந்தப் பலத்தில் சாட்சி சொல்வதினால், அது சிலசமயம் தேவனுக்கு விரோதமான சாட்சியாகிவிடுவதற்கும் வாய்ப்பாகிவிடுகிறது.

“நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (யோவான் 15:27 ).

நாம் இதுவரை யாருக்காக எவ்விதமாக சாட்சி சொல்லியிருக்கிறோம்? இன்று நம் வாழ்வும், நம் வாயின் சொற்களும் யாருக்கு நாம் சாட்சிகளாயிருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது? சற்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம்.