ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 வியாழன்

“..தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக” (தானி.2:20) என்ற வாக்குப்படி இவ்வருடம் முழுவதும் தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகள் யாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தி புதிய வருடத்திற்குள் தேவபெலத்தோடு கடந்துசெல்ல ஜெபிப்போம்.

நம்பிக்கை

தியானம்: டிசம்பர் 31 வியாழன்; வேத வாசிப்பு: எரேமியா 17:5-8

“…நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்” (2 நாளா. 32:8).

இன்றைய தியான வசனமானது இரண்டுவித நம்பிக்கைகளைக்குறித்து பேசுகிறது. ஒன்று மனுஷன்மீது வைக்கும் நம்பிக்கை; மற்றது, தேவன்மீது வைக்கும் நம்பிக்கை. தேவன்மீது நம்பிக்கை வைப்பவன் எப்படிப்பட்ட மரத்தைப் போலிருப்பான் என்று இங்கே எழுதப்பட்டுள்ளது. வச.7ல் ‘கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டு’ என்னும்போது, கர்த்தர்மீது கொள்ளும் ஆழமான நம்பிக்கையை அது குறிக்கிறது. நாம் நம்புகிறோம். கர்த்தர்தான் நமது நம்பிக்கை என்றெல்லாம் வாய் பேச்சில் சொல்கிறோம். ஆனால், அந்த நம்பிக்கை எவ்வளவுக்கு ஆழமானது என்பதைச் சிந்தித்துப் பார்த்ததுண்டா!

கர்த்தர்மீது நம்பிக்கை கொண்டவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிற மரத்துக்கு ஒத்திருக்கிறான். எப்போதும் தண்ணீரை அது உறிஞ்சிக்கொண்டே இருக்கும். காரணம், அது நீரூற்றுள்ள கால்வாய் அருகில் தன் வேர்களை ஆழமாக விட்டிருக்கிறது. ஆகவே, அது உஷ்ணம் கூடினாலும் வாடாது, மழைத் தாழ்ச்சியான காலங்களிலும் சாகாது. காரணம் அது எப்போதும் நீருற்றுடன் தொடர்புபட்டுள்ளது. ஆகவே அந்த மரம் செழித்திருக்கும். தேவன்மீது கொண்ட ஆழமான நம்பிக்கையும் இது போன்றதே. தேவனோடு உறுதியான தொடர்பு இருப்பதால் எச் சூழ்நிலையிலும் அது அசையாது, எந்தக் காரியத்திலும் அது கலங்காது.

வருடத்தின் இறுதி நாளுக்குள் வந்துவிட்ட நாம், எந்த நம்பிக்கையோடு புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்கப்போகிறோம்! எசேக்கியா ராஜா ஜனங்களைப் பார்த்து ஒரு நம்பிக்கையின் வார்த்தையைக் கூறினான். “நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்.” அவனது வார்த்தையில் அசைக்கமுடியாத நம்பிக்கை தொனித்தது. அதைக்கேட்ட ஜனங்கள் அந்த வார்த்தையின்மீது நம்பிக்கை வைத்தார்கள். நாமும் கர்த்தர்மீது வைக்கும் ஆழமான நம்பிக்கையோடுகூட கடந்துபோவோம். நம்புகிறோம் என்று சொல்லியும், கலங்கிப்போவது நல்லதல்ல. வலது, இடது பக்கம் சாய்ந்துபோவதும் நல்லதல்ல. தேவனை முற்றிலும் நம்புவோம். இதுவரை நடத்தியவர் நம்மை இனியும் கைவிட மாட்டார். வரப்போகும் வருடம் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், எல்லா நிலைகளிலும் நம்மோடு கடந்துவருகிறவர் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து என்பதுதான் உண்மை. அதை நீ நம்புகிறாயா? இம்மட்டும் வழிநடத்தியவர் இனியும் நடத்துவார்.

சத்தியவசன பங்காளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 புதன்

இவ்வருடத்தின் கடைசிநாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் உபவாசக்கூட்டங்கள், வருடபிறப்பு ஆயத்தக் கூட்டங்கள் இவைகளில் சபையார் ஜெபத்தோடு, “… நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசு.3:5) என்ற வாக்குப்படி காத்திருக்க ஜெபிப்போம்.

ஆழமான உறவு

தியானம்: டிசம்பர் 30 புதன்; வேத வாசிப்பு: கொலோசெயர் 1:9-17

“சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்…” (கொலோ 1:10).

தங்க நகைக்கும், தங்கமுலாம் பூசப்பட்ட நகைக்கும் நிறையவே வித்தியாசமுண்டு. தங்க நகை எப்பவுமே மங்காமல் பிரகாசிக்கும். ஆனால், தங்க முலாம் பூசப்பட்ட நகையோ, தங்க நகைபோலப் பிரகாசமாய் இருந்தாலும், நாளுக்கு நாள் மங்கி தன் சுயரூப போலித்தனத்தை காட்டிவிடும்.

இது போலவே பரிசுத்தவான்கள் போலத் தம்மைக் காட்டிக்கொள்பவர்களுக்கும், உண்மையுள்ளவர்கள்போல. இரக்கமுள்ளவர்கள்போல, உதவுபவர்கள்போல காட்டிக்கொள்பவர்களும், இக்குணாதிசயங்களை உண்மையிலேயே கொண்டவர்களாக இருப்பவர்களுக்கும் வித்தியாசமுண்டு. தேவசாயலாக உருவாக்கப்பட்ட மனிதன், பாவத்தினால் தன் மகிமையை இழந்துபோனான். ஆனாலும் பாவமன்னிப்புப் பெற்று தேவபிள்ளையாகி, கிறிஸ்துவைப்போல மாற பிரயாசப்படுபவனும், தேவனோடு தன் உறவைக் கட்டிக்காப்பவனும், நாளாந்தம் அவ்வுறவில் வளருபவனுமே உண்மையான தங்கத்தைப்போல எல்லா சூழ்நிலைகளிலும் பிரகாசிக்க முடியும்.

தேவனோடு உறவில்லாதவன், நற்குணங்களை காட்டினாலும் அவன் போலியானவன். சூழ்நிலைகள் மாறும்போது அவன் தனது சுயரூபத்தை வெளிக்காட்டுவான். அவனால் எப்போதும் எல்லா நிலையிலும் ஈடுகொடுக்க இயலாது. ஆகையால் கிறிஸ்துவின் குணாதிசயத்தில் வளரவேண்டுமாயின், உள்ள வண்ணமே நம்மை அவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரது மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, அவர் நம்மை சுத்தம் பண்ணவும், வனையவும் விட்டுக்கொடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாவது, அவரோடு நமது உறவை பேணவேண்டும். உறவில் உறுதியாய் இருப்பவனே எப்போதும் உறுதியாய் அசையாமல் நிற்பான்.

இன்று நமது காரியம் என்ன? தங்கம்போல் கிறிஸ்துவுக்காய் உண்மையாய் ஜொலிக்கிறோமா? அல்லது, போலியான தங்கம்போல மின்னிவிட்டு மங்கி விட்டோமா? நமது உண்மை நிலைமைகளை ஏற்றுக்கொள்வதிலும் போலித்தனம் கூடாது. உண்மையாய் மனந்திரும்பி தீர்மானங்கள் எடுக்கும்போதுதான் அவைகள் உறுதியானதாக இருக்கும். முழு இரவு ஆராதனையில் எடுக்கும் நொடிப்பொழுது தீர்மானங்கள் மறுநாள் விழித்தெழுந்தவுடனேயே மறைந்துவிடுவதுண்டு. பிரியமானவர்களே! நமது போலித்தனம் அதிக நாட்கள் நீடித்திராது. அது கறுத்து மங்க ஆரம்பித்தால் அதை நம்மால் தடுக்கவும் முடியாது. ஆகவே, போலியான வேஷங்களைக் களைந்து, பவுல் அறிவுறுத்துவதுபோல கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்வோம்.

என் வாழ்வில் காணப்படும் போலித்தனம் அல்லது, வீண்பெருமைகளை நம்மால் அடையாளம் காணமுடிகிறதா? அவற்றை அறிக்கையிட்டு, மனந்திரும்பி, கர்த்தருக்காய் என்றும் ஒளிவீசுவோமா?