ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 புதன்
“…அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்” (அப்.2:1) இவ்வாக்குப்படியே இந்தநாளில் ஒருமனதோடு சத்தியவசன அலுவலகத்தில் கூடிவந்திருக்கும் பங்காளர்களை கர்த்தர் ஆசீர்வதித்து, ஏறெடுக்கப்படும் ஜெப விண்ணப்பங்கள் கர்த்தருக்கு உகந்ததூபங்களாக காணப்பட மன்றாடுவோம்.
ஆண்டவர் காப்பார்!
தியானம்: அக்டோபர் 14 புதன்; வேத வாசிப்பு: சங்கீதம் 10:1-18
“திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்.” எரேமியா 49:11
இனத்திற்கு விரோதமாய் இனம்; நாட்டுக்கு விரோதமாய் நாடு, இந்தப் போர்களில் சிக்கித்தவிக்கிறவர்கள் ஏராளம். இவர்கள் பாதுகாப்பு நாடி, சொந்த இடத்தைவிட்டு வேறிடம் செல்லும்போது தங்கள் குடும்பம், இனம் எல்லாவற்றிலுமிருந்து பிரிக்கப்படுகிறார்கள். இதனால், பல வழிகளிலும் தாக்கப்பட்டு பரிதாபமான நிலையில் ஜீவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றும் பரிதபிக்கும் தேவபிள்ளையே, உன்னை, உன் பிள்ளைகளை, உறவுகளைத் தம்மிடம் ஒப்புவிக்கும்படி ஆண்டவர் அழைக்கிறார்.
“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத்.10:29-31) என்று கூறிய இயேசு, “மரித்தேன், ஆனாலும், இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி.1:18) என்று வாக்குப்பண்ணியுள்ளார். இவரிடம் நமது அன்பானவர்களை ஏன் ஒப்புவிக்கக் கூடாது? அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நமது குடும்பத்தவர்கள் கர்த்தருக்கு விசேஷித்தவர்கள். வாக்குத்தத்தத்தின் ஜனமாகிய இஸ்ரவேலர் எத்தனைமுறை அந்நிய ஜனங்களின் ஆளுகைக்குட்படுத்தப் பட்டு, சிதறடிக்கப்பட்டுப்போனார்கள். ஆனாலும், இரக்கமும் மனஉருக்கமுமுள்ள வாக்குமாறாத தேவன் அவர்களை கைவிடவில்லை. கண்மணி போல அவர்களைப் பாதுகாத்து திரும்பவும் அவர்களது தேசத்தில் கூட்டிச்சேர்த்தார்.
இவற்றையெல்லாம் நாம் அறிந்திருந்தாலும், சூழ்நிலைகள் நெருக்கும்போது விசுவாசத்திலும் தளர்ந்துபோகிறோம். என் ஆண்டவர் மரணத்தையே ஜெயித்தவர் என்ற எண்ணமே அந்த சந்தர்ப்பத்தில் வருவதில்லை. கலங்கித் தவித்து மனுஷ பாதுகாப்புக்களை நாடி ஓடுகிறோம். பாதுகாப்பு என்று கருதி அடைக்கலம் புகுந்த எத்தனை ஆயிரங்கள் இன்று உலகில் இல்லை. இந்த நிலைமை ஏன்? நாம் தினந்தோறும் தேவனுடைய வார்த்தையில் நம்மை உறுதிப்படுத்துவதில் குறைவுபட்டுள்ளோம் என்றால் மிகையாகாது.
“நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன்” (யோவா.14:18) என்று வாக்களித்த இயேசு, நமது உறவுகளுக்காக ஏறெடுக்கும் ஜெபங்களை மாத்திரம் புறக்கணிப்பாரா? திக்கற்றவர்கள் எல்லார்மேலும் அவர் கண்ணோக்கமாய் இருக்கிறார். அவருடைய ஓங்கிய புயத்துக்குள் நாமும் நமக்குரியவைகளையும் ஒப்புவிப்பது ஒன்றுதான் நம்மால் செய்யக்கூடிய காரியமாகும்.
ஆபத்துக்கள் நேரிட்டபோது, ‘கடவுளே’ என்று பழக்கதோஷத்திலே கதறினாலும், இதுவரை யார் பாதுகாப்பை நாடியிருக்கிறேன். மனுஷ பாதுகாப்புக்கும் ஆண்டவர் அருளும் பாதுகாப்புக்கும் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேனா?