ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 வெள்ளி
“.. இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிற” (1நாளா. 29:17) தேவன்தாமே ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 13 நபர்களுடைய இருதய சுத்திகரிப்புக்காகவும், தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து பெருகவும் ஜெபிப்போம்.
அந்நிய நுகம்
தியானம்: அக்டோபர் 2 வெள்ளி; வேத வாசிப்பு: உபாகமம் 7:1-16
“…அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2கொரி. 6:15).
பொதுவாக இரட்சிக்கப்பட்ட வாலிபப் பிள்ளைகள் ஆண்டவராகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களோடு திருமண பந்தத்தில் இணையக்கூடாது என்பதைக் குறிப்பிடுவதற்கு இந்த வசனத்தை எடுத்துக்காட்டிப் போதிப்பதுண்டு. ஆனால், இந்த வசனம் திருமண வாழ்வுக்கு மட்டுமல்ல, நம்மை அவிசுவாசிகளோடு பிணைக்கக்கூடிய எந்தவித உறவுகளாக இருந்தாலும், உதாரணத்திற்கு வியாபாரமாக இருந்தாலும் நாம் அவர்களோடு நம்மைப் பிணைத்துக்கொள்ள இடமளிக்காதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றே எச்சரிக்கின்றது.
சாதாரணமான ஒரு வியாபார காரியத்திலே அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளோடு பிணைக்கப்படாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமேயானால், கடைசிவரை இணைந்திருக்கவேண்டிய ஒரு திருமண பந்தத்திலே எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்? இன்று கிறிஸ்துவை அறிந்த பிள்ளைகள் என்று கூறிக்கொள்பவர்களும்கூட பலவேளைகளில் தேவகட்டளையாயிருக்கும் இந்த வசனத்தை மறந்து, அவிசுவாசியுடன் தமது வாழ்க்கையை இணைத்துக் கொள்ளத் தீர்மானிப்பது எவ்வளவு வேதனைக்குரியது. சிலர் “அவிசுவாசியான என் துணையை, திருமணத்திற்குப் பின்பு கிறிஸ்துவண்டை வழிநடத்த என்னால் கூடும்” என்று தம்முடைய தவறான தீர்மானத்திற்கு சாக்குப்போக்குக் கூறுவதும் உண்டு. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல வேதனையும் கண்ணீரும் நிறைந்த வாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையே தர்க்கம், குடும்பங்களுக்கிடையே சண்டை சச்சரவு, இறுதியில் விவாகரத்து என எத்தனை பரிதாபமான முடிவுகள்?
எகிப்திலிருந்து மீட்கப்பட்ட தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில், “அந்நிய ஜனங்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக” (உபா.7:3) என்று கர்த்தர் தெளிவாகவே கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம், தமது மக்கள் அந்நிய தெய்வ வணக்கத்திற்கு இழுப்புண்டுபோவார்கள் என்பதேயாகும். தேவனோடு நெருங்கி ஜீவித்த சாலொமோன் ராஜாகூட, தேவபிரசன்னத்தை இழந்து, பாவத்தில் விழுந்தது, அந்நிய பெண்களோடு அவர் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பாலாகும். ஞானம் அறிவு செல்வம் என்று எல்லாவற்றிலும் பிரசித்தி பெற்று விளங்கிய சாலொமோனைக்குறித்த இறுதிக் குறிப்புகள் எவ்வளவு வேதனையானது. இயேசுகிறிஸ்துவையே சொந்த இரட்சகராக ஏற்று, அவருக்காக வாழ வாஞ்சிக்கும் மகனே, மகளே, ஒரு அவிசுவாசியின் அன்பிலே அழகிலே மயங்கி, திருமணத்திலும், வாழ்வில் எந்த நிலையிலும் தவறான தீர்மானம் செய்ய எத்தனிக்காதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக.
அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாமல் தேவனுடைய பிரமாணத்தின்படி கீழ்ப்படிந்து நடக்க நமக்கு இருக்கும் தடைகள் என்ன?