ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 சனி
சென்னையில் சத்தியவசன பிரதிநிதியாக செயல்பட்டு வரும் சகோ.விஜயகுமார் மற்றும் திரு.ஜேம்ஸ் டேனியல் ஆகியோருடைய பிரயாசங்களை கர்த்தர்தாமே ஆசீர்வதித்திடவும் இவர்களது சுகத்திற்காகவும் குடும்பத்தினர் அனைவரின் நல்ல சுக பெலனுக்காகவும், கைகளின் பிரயாசங்களுக்காகவும் மன்றாடுவோம்.
ஆத்தும காப்புறுதி
தியானம்: அக்டோபர் 10 சனி; வேத வாசிப்பு: எபிரெயர் 9:7-22
“நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம். 12:13).
நம்மில் பலர் பலவித “காப்புறுதிகளை” செய்திருக்கலாம். வீடுகள், பொருட்கள், சொத்துக்கள், வாகனங்கள் மாத்திரமல்ல, நமது வாழ்க்கைக்கும் பலவித காப்புறுதி முறைகள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காப்புறுதி என்பது என்ன? நம்முடைய பணத்தை நாமே முன்கூட்டி முதலீடு செய்து, மாதத்திற்குரிய தவணைப் பணத்தையும் செலுத்தவேண்டும், நமக்கு எதிர்பாராத நஷ்டம் அல்லது ஆபத்துக்கள் இழப்புக்கள் ஏற்படும்போது நாம் செலுத்தியதற்கும் மேலதிகமான பணம் நமது தேவைக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம். நாம் செத்தாலும் நமது குடும்பத்துக்கு ஒரு தொகை பணம் கிடைக்கும் என்று நம்புகிறோம். சுருக்கமாகச் சொன்னால் இது நமது பாதுகாப்பிற்காக நமக்கு நாமே ஏற்படுத்துகிற முன்னேற்பாடு. இது நல்லதுதான்.
ஆனால், ஒரு காரியத்தை நாம் மறுக்கமுடியாது. நாம் எடுக்கின்ற இந்தப் பாதுகாப்பு முயற்சிகளும் அதன் தற்காப்புகளும் இவ்வுலக வாழ்வு முடிந்துபோகும் போது, அதுவும் முடிந்துபோகும். அத்துடன் அந்தக் காப்புறுதி நமக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யுமேதவிர அந்த நஷ்டம்வராதபடி நம்மை காப்பாற்ற முடியாது. ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும் அதாவது எந்தக் காப்புறுதியானாலும் நமது அழியாத ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொடுக்க அதனால் முடியாது. அழிந்துபோகின்ற சகலத்திற்கும் காப்புறுதி கொடுக்கின்ற இந்த உலகத்திற்கு, அழியாத நமது ஆத்துமாவிற்குக் காப்புறுதி கொடுக்கவே முடியாது. ஏனெனில், இந்த உலகமே ஒருநாள் அழிந்துபோகுமே! தனக்கே காப்புறுதி இல்லாத உலகத்தால் நமது ஆத்துமாவிற்குப் பாதுகாப்பு கொடுப்பது எப்படி?
ஆனால் நமது ஆத்துமாவுக்கு ஒரு காப்புறுதி உண்டு. அதற்கு நாம் முதலீடு செய்யவோ, மாதாந்தர தவணைப் பணம் செலுத்தவோ அவசியமில்லை. நமது அழியாத ஆத்துமாவிற்குரிய காப்புறுதியை ஆண்டவர் அநாதியாய் ஒழுங்குசெய்து, அதற்கான முதலீட்டையும் தொகையாகவே செலுத்திவிட்டார். ஆம், அந்த முதலீட்டுக் கிரயம் நமது ஆண்டவராகிய இயேசுவின் இரத்தமே. அந்தத் திட்டத்தில் நாமும் பங்கடைந்து நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். எனக்காக ஒருவர் காப்புறுதிக் கிரயத்தைச் செலுத்திவிட்டார் என்று விசுவாசிப்பதே அது. அழியாத நமது ஆத்துமா நித்திய வேதனைக்குட்படாமல், ஆண்டவரோடு என்றும் வாழுவதற்கு இந்த ஆத்தும காப்புறுதி நமக்கு அவசியம். இந்தத் திட்டத்தில் நாமும் இணைந்து, மற்றவரையும் இணைத்திருக்கிறோமா?
நம்முடையதும் நம்முடைய குடும்பத்தினுடையதுமான பாதுகாப்பிற்காக நாம் இன்று ஏற்படுத்தியிருக்கிற பாதுகாப்பு ஒழுங்குகள் என்ன? இயேசுவின் இரத்தமா அல்லது உலக பாதுகாப்பா எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்?