ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 15 திங்கள்
கேரள மாநிலத்தில் பராம்பரிய கட்டுகளோடு உள்ள மக்களின் இரட்சிப்பிற்காகவும், செய்வினை, மந்திரலோசனை போன்ற பிசாசின் வஞ்சனைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்போரின் விடுதலைக்காகவும், அங்குள்ள அனைத்து திருச்சபை ஊழியங்களின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
என் சிலுவை!
தியானம்: பிப்ரவரி 15 திங்கள்; வேத வாசிப்பு: மாற்கு 8: 31-38
“….தன் சிலுவையை எடுத்துக்கொண்டு…” (மாற்கு 8 :34).
“கிறிஸ்துதாமே சிலுவை சுமந்துவிட்டார்; நான் ஏன் சுமக்க வேண்டும’; என சிலர் கேட்பதுண்டு. பிரியமானவனே, கிறிஸ்து சுமந்த சிலுவையை யாருமே சுமக்க முடியாது. அவரும் இன்னொருதரம் அதைச் சுமக்கத் தேவையுமில்லை. தாம் உலகிற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றி, பரத்துக்கு ஏறி, பிதாவின் வலதுபாரிசத்தில் ஆண்டவராக வீற்றிருக்கிறார். அங்கு அவர் களைத்துப்போய் உட்காரவில்லை. வெற்றிவேந்தனாக வீற்றிருக்கிறார். அவர் சிலுவையிலே செய்து முடித்ததை நாம் சுதந்தரிக்கும் வரை நமக்கு ஏது வாழ்வு?
சிலுவை என்பது நிந்தையை, அவமானத்தைக் குறிக்கிறது. அது மரணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த நிந்தையையும் அவமானத்தையும் மரணத்தையும் பற்றிப் பேச பேதுருவுக்கு விருப்பமில்லை. இயேசு தமது மரணத்தைப் பற்றிக் கூறியபோது, பேதுருவால் ஏற்றுக்கொள்ள முடியவுமில்லை. இயேசுவை இரகசியமாகக் கூட்டிச்சென்று, ‘இப்படிப் பேச வேண்டாம்’ எனப் பேதுரு அவரைக் கடிந்துகொண்டான். ஆனால் இயேசுவோ, “அப்பாலே போ சாத்தானே” என்று பேதுருவைக் கடிந்துகொண்டு, தம்மைப் பின்பற்ற விரும்புகிறவன் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு தம்மை பின்பற்றி வரக்கடவன் என்றார். ஆனால் பாருங்கள், இயேசு இந்த வார்த்தைகளைக் கூறியபோது, அவர் சிலுவையைச் சுமந்திருக்கவில்லை. ஆனால் தாம் சுமக்கவேண்டிய சிலுவையை அவர் அறிந்திருந்தார். தம்மைப் பின்பற்றுகிறவர்களும் தமது நிமித்தம், நிந்தைகளையும் அவமானங்களையும், ஏன் மரணத்தையும்கூட சந்திக்க நேரிடும். அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவன் தம்மைப் பின்பற்றலாம் என்பதையே ஆண்டவர் பேதுருவுக்கு உணர்த்தினார். ஏன் தெரியுமா? உலகமும் பாவமும் நமக்கு இன்பத்தைத் தரலாம். அதன் முடிவோ துன்பம்தான். தேவனுக்குரியவைகளை இந்த உலகம் வெறுக்கிறது. மாம்சத்திற்கு எதிரான எந்தவொரு காரியத்தையும் உலகம் அருவருக்கிறது. அப்படியிருக்க பாவத்தை வெறுத்து, மாம்ச கிரியைகளை அருவருத்து, கிறிஸ்துவினுடைய வழியில் நடக்கும் ஒருவனை இந்த உலகம் நிம்மதியாக இருக்கவிடுமா?
அருமையான தேவபிள்ளையே, கிறிஸ்துவின் வழியில் நடந்தும் உனக்குத் துன்பமும் பாடுகளும்தான் மிச்சம் என்று எண்ணுகிறாயா? கலங்காதே! நீதான் பாக்கியவான். நீ சுமப்பது துன்பமல்ல; அது கிறிஸ்துவுக்குள்ளான சிலுவை. அதன் முடிவு வேதனையும், மரணமாகக்கூடத் தெரியலாம். ஆனால் அது முடிவல்ல; அது உயிர்த்தெழுதலுக்கும் நித்திய வாழ்வுக்குமான ஆரம்பம். மரிக் காதவன் உயிர்த்தெழுவது எப்படி? இது மாய்மால வார்த்தை அல்ல. சத்தியம்! நீ உன் சிலுவையைச் சுமப்பாயா?
சிந்தனைக்கு: நமக்காக சிலுவை சுமந்தவருடைய வழியில் நடக்க நம்மை ஒப்புவித்திருந்தும், நிந்தைகள் பாடுகள் வரும்போது நாம் தடுமாறுகிறோமா? அப்படியிருந்தால் நமது ஒப்புக்கொடுத்தலை இன்று புதுப்பிப்போமாக.