ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வியாழன்
“.. தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்” (சங்.66:12) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் அநேக பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்தாலும் ஜீவாதிபதி இயேசு நம்மோடிருந்து நம்மை கைவிடாமல் நடத்தின பாதைகளுக்காய் துதிப்போம்.
இது முடிகின்ற காரியமா?
தியானம்: ஜுன் 30 வியாழன்; வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:1-6
“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலி.4:4).
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க நிச்சயமாக முடியாது” என்று உறுதியாய் கூறினாள் மலர். தான் கடந்துசென்று கொண்டிருக்கும் பாடுகளையும் கண்ணீரையும் அதற்குக் காரணம் காட்டினாள். இடை நிறுத்திய தோழி, அவளைப் பார்த்து, “நானும் உன்னைப் போலவே பாடுகளின் வழியாகவே கடந்துசெல்லுகிறேன்; நான் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இல்லையா? பாடுகள் பாதையில் குறுக்கிடும் போதெல்லாம், எனக்காக இதுவரை யாவையும் செய்துமுடித்த என் ஆண்டவருடய கரங்களில் எல்லாவற்றையும், என்னையும்கூடக் கொடுத்துவிடுவேன். அப்போது எனக்குள் உண்டாகும் சமாதானம், சந்தோஷத்தைத் தருகிறது” என்றாள் அவள்.
“சந்தோஷம், கர்த்தருக்குள்ளான சந்தோஷம்” என்பது நாம் சம்பாதிக்கத்தக்க ஒன்றல்ல; அதைத் தேவன் நமக்குள்ளே வைத்திருக்கிறார். அதை உணராமல், நாமே சந்தோஷத்தைத் தேடி அலைகிறோம். அதற்கென்றே பல வழிகளிலும் பணத்தைச் சேர்த்து வைக்கிறோம். ஆஸ்தி, பொருள் என நாம் பலவற்றை நமக்கும், பரம்பரைக்கும் சேர்த்துவைக்க அயராது உழைக்கிறோம். உயர் அந்தஸ்துகளையும், சுகபோக வாழ்வையும் நாடி சந்தோஷமாயிருக்கப் பிரயாசப்படுகிறவர்களும் அநேகர். ஆனால், இவை எல்லாம் தற்காலிகமானவைகளே என்பதையும், இவை எதுவும் மெய்யான சந்தோஷத்தைத் தராது என்பதையும் ஏனோ நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். இவ்வளவும் இருந்தும், எதிர்பாராத சமயத்தில் ஒரு பாதகமான சூழ்நிலை ஏற்படுமாயின், இவை எதுவும் நமக்குச் சந்தோஷம் தரப்போவதில்லை. பணம் இருந்தும், வயிறாரச் சாப்பிட முடியாத நிலை; ஆஸ்தி இருந்தும், வழிதவறிய மகனைத் திருத்த முடியாத நிலை; இப்படி எத்தனையோ! அதேசமயம், தங்கள் சொந்த முயற்சியில் சாயாது, வாழ்விலும் தாழ்விலும் கர்த்தரையே நம்பிக்கையாகவும், பெலனாகவும் கொண்டிருக்கும் அநேக தேவபிள்ளைகள், சொத்து, அந்தஸ்து, ஆஸ்தி, உயர்பதவி எதுவும் இல்லாதிருந்தும், எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது எத்தனை மேன்மை!
கர்த்தருக்குள் சந்தோஷம் என்பது சூழ்நிலைகளைச் சார்ந்திராத ஒரு அனுபவம். நாமோ சூழ்நிலைகளை நோக்கியே நமது பார்வையைத் திருப்புகிறோம். பிறரோடு ஒப்பிடுவதில் நேரம் கழிக்கிறோம். நமக்குள்ள நிறைவுகளை விடுத்து, குறைகளையே எண்ணுகிறோம். எப்படிச் சந்தோஷம் வரும்? வசனம் இவ்விதமாக கூறுகிறது:
“…கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24).
சிந்தனைக்கு: கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க முடியாதபடி நம்முடைய வாழ்க்கையில் தடையாக இருப்பவை எவை?
வாக்குத்தத்தம்: ஜுன் 29 புதன்
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். (நாகூம்.1:7)
ஜெபக்குறிப்பு: ஜுன் 29 புதன்
“… நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்” (எரேமி.29:11) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடிருக்கிற 11 குடும்பங்களில் கர்த்தர் அவர்களது விருப்பங்களையும் வாஞ்சைகளையும் நிறைவேற்றி தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே வழிநடத்திட வேண்டுதல் செய்வோம்.
கர்த்தர் செய்து முடிப்பார்!
தியானம்: ஜுன் 29 புதன்; வேத வாசிப்பு: சங்கீதம் 57:1-11
“எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்” (சங். 57:2).
தாவீதின் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்த ஒன்று. ஒரு மேய்ப்பனாக இருந்தவனைக் கர்த்தர் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தார். அவன் சவுல் ராஜாவுக்குப் பிரியமானவனாயிருந்தான் (1சாமு.21). ஆனால், தாவீது தேவபெலத்தோடு கோலியாத்தைக் கொன்றுபோட்டபின், மக்கள் தாவீதைப் போற்ற, சவுலுக்குத் தாவீதின்பேரில் எரிச்சல் உண்டானது. இதனால் தாவீதைக் கொன்றுபோட ராஜா முயற்சித்தான். அதற்குத் தப்பி, குகையிலே ஒளித்துக்கொண்ட தாவீது தன் நிலையை இப்படி விபரிக்கிறார்: “என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது. தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன். அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது” (வச.4) என்கிறார். ஒரு பெரிய கோலியாத்தை சிறு கவணினாலே கொன்றவன், பல யுத்தங்களில் வெற்றி பெற்றவன், இப்போது தன் வாழ்க்கைக்காக போராட்ட முனையில் அவன் ஒளித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்காக, தாவீது சோர்ந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தைத்தான் தனிமையாக நின்று ஜெயிக்க முடியாது என்பதை தாவீது உணர்ந்திருந்தான். அதேவேளை இப்போரில் தான் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதையும் அறிந்திருந்தார். இந்த நிச்சயத்திற்கு முக்கிய காரணம், தாவீது தன் போராட்டத்தைக் கர்த்தரின் கரங்களில் ஒப்புக்கொடுத்துவிட்டு, தேவனுக்கு அவர் உண்மையுள்ளவராக இருந்தார் என்பதே. தனக்காக யாவையும் செய்து முடிக்கத்தக்க ஒருவர் தனக்கிருக்கிறார் என்பதை தாவீது நம்பினார்; அவருடைய கரத்தில் தன்னை ஒப்புவித்தார். அதனால்தான், அத்தனை போராட்டத்தின் மத்தியிலும், “தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச.7) என இச்சங்கீதத்தை எழுத முடிந்தது.
நாம் தாவீது அல்ல; ஆனால் நாம் வாழுகின்ற நிலையில் நமக்கும் பல எதிராளிகள் எழும்பத்தான் செய்கிறார்கள். அந்தச்சமயத்தில் நாம் பயந்து கலங்கிப் போகிறோம். ‘இப்போராட்டத்தை நான் எப்படி மேற்கொள்வேன்’ என ஏங்குகின்றோம். ஏன் இந்தக் கலக்கம்? நமது யுத்தங்களை தேவகரத்தில் விட்டு விட்டு, நமது உண்மைத்துவத்தைக் காத்துக்கொள்வோமாக. எத்துன்ப நேரத்திலும் கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார்.
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது. உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக” (சங்.138:8) என நம்மால் உறுதியாகக் கூறமுடியுமா?
சிந்தனைக்கு: நமது போராட்டங்களை நாம் இன்னமும் சுமந்து திரிகிறோமா? யாவையும் தேவகரத்தில் கொடுத்துவிட்டு உறுதியான மனதுடன் இருப்போமாக.