ஜெபக்குறிப்பு: மே 31 செவ்வாய்
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2கொரி. 9:15) என்ற வாக்குப்படி, தமது உருக்கமான இரக்கங்களால் கர்த்தர் நம்மைச் சேர்த்துக்கொண்டு, ஒவ்வொருநாளையும் தேவதயவால் நடத்திச்செல்ல அருளிய கிருபைகளுக்காய் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.
கர்த்தரின் ஆசீர்வாதம்
தியானம்: மே 31 செவ்வாய்; வேத வாசிப்பு: 2சாமுவேல் 7:18-29
‘இப்போதும் உமது அடியானின் வீடு … என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்’ (2சாமு.7: 29).
புதிதாக ஒரு வீட்டிற்குக் குடிபோகும்போது சிலர் நல்ல நேரம், நல்ல நாள் எனப் பார்ப்பதுண்டு. சிலர் ஜெபக்கூட்டம் வைத்துவிட்டால், தேவாசீர்வாதம் இருக்கும் என்பர். இப்படியாக பலரும் பலவிதமாக சிந்திப்பதுண்டு. ஆனால், தேவாசீர்வாதம் இருக்க வேண்டுமானால் அந்த வீட்டில் தேவனுக்குப் பிரியமானதைக் கடைப்பிடித்து, அவரை ஆராதித்து, அவர் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் பல வேளைகளிலும் மறந்து விடுவதுண்டு!
‘உன் வீடும், உன் ராஜ்யமும் என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்’ (2சாமு.7:16) என கர்த்தர், நாத்தான் தீர்க்கன் மூலமாக தாவீதுக்குக் கூறியபோது, தாவீது கூறியதாவது: ‘கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?’ (2சாமு.7:18) என்பதே. கர்த்தருடைய ஆசியைப் பெற்றுக்கொள்ளுவதற்கு, தான் எம்மாத்திரம் என்பதைத் தாவீது உணர்ந்தார். தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கின்ற ஆசீர்வாதமே உண்மையான ஆசீர்வாதம்! அதைப்பெற்றிட தனக்கு என்ன தகுதியுண்டு என தாவீது, தன் குறைவினை ஒப்புக்கொண்டவராக தன்னைத் தாழ்த்தினார். கர்த்தர், அவர் உள்ளத்தைக் கண்டார். தமது வாக்குப்படி தாவீதை ஆசீர்வதித்தார்.
இன்று நாம் உலகப்பிரகாரமான செல்வங்களையும், கார், பங்களாக்களையும் வைத்துக்கொண்டு, ‘ஆண்டவர் என்னை ஆசீர்வதித்துள்ளார்’ எனப் பெருமை பேசுகிறோம். ஆனால், ஆண்டவரின் ஆசீர்வாதம் மெய்யாகவே நமது இல்லத்தில், குடும்பத்தில் உள்ளதா என்பதை அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தாவீதைப்போல ஆண்டவரின் ஆசியைப் பெற்று வாழ நம்மை அர்ப்பணிப்போமாக. ஆண்டவரின் ஆசியைப் பெறுகின்ற நாம் அதற்குப் பொறுப்பாளிகளாகவும் நடந்துகொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பணத்தைக் கையாளுவதிலும், நமது பொருட்களை உபயோகிப்பதிலும், நமது பிள்ளைகளை நடத்துவதிலும்கூட நாம் ஆண்டவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் மெய்யான ஆசியைத் தேவ கரத்திலிருந்து பெற்றுக் கொள்ளும்போது, அது நாம் மட்டுமல்ல, நமது பிள்ளைகளும், அவர்கள் சந்ததியும் ஆசீர்வதிக்கப்படுகிறது. இது எத்தனை மேன்மை! நமக்குள்ளதெல்லாம் ஆண்டவர் நமக்குத் தந்தவைகளே! ஆகையால் மீண்டும் ஆண்டவருக்கே கொடுக்கவும் நாம் ஆயத்தமாக இருப்போம்!
‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா’ (சங்.127:1).
சிந்தனைக்கு: நமது வீடுகள் தேவனால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதமா? அல்லது தீமைகளாலும் அநியாயத்தினாலும் உண்டான சம்பாத்தியத்தால் வந்தவைகளா?
வாக்குத்தத்தம்: மே 30 திங்கள்
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். (ஏசா.45:2)
ஜெபக்குறிப்பு: மே 30 திங்கள்
பலவித விபத்துக்குள்ளாகியும், கொடிய வியாதியினால் தாக்கப்பட்டும் அநேக நாட்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்காக ஜெபிப்போம். மருத்துவமனை ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து புற இன மக்களும் கிறிஸ்துவை கண்டுகொள்ளத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.
தேவனோடு நடத்தல்
தியானம்: மே 30 திங்கள்; வேத வாசிப்பு: ஆதியாகமம்; 6:8-22
‘….நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதி மானும் உத்தமனுமாயிருந்தான்’ நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்’ (ஆதி.6:9).
‘என்னோடேயே இருப்பான், நான் சென்றால் செல்லுவான், நான் நின்றால் நிற்பான், நான் இருந்தால் இருப்பான். முன்னால் செல்லுவான், பின்னால் வருவான். நண்பகலில் அவனைக் காண்பது கடினம்’. இது ஒரு விடுகதை. இந்த விடுகதையை விடுவிக்கும்படி என்னைக் கேட்ட போது, விடுவிக்க முடியாமல் நான் விழித்தேன்! திடீரென அது எனது நிழல் என்பதை அறிந்து கொண்டேன். தேவனோடு நடத்தல் என்பதுவும் இது போன்றதே. எந்நேரமும் அவரோடுள்ள நெருங்கிய உறவு அது.
நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான் என்று வாசிக்கிறோம். தேவனோடு வாழ்ந்த நோவாவுடன் தேவன் இடைப்பட்டார். அவனோடு தேவன் பேசினார். தமது திட்டத்தை அவனுக்குத் தெரியப்படுத்தி, ஒரு பேழையைக் கட்டும்படிக்குப் பணித்தார். நோவாவும் மழை வருவதற்குரிய எந்த அறிகுறியும் இல்லாதபோதும், தேவனுடைய வார்த்தையை நம்பி பேழையைக் கட்டினான். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் நோவாவும், அவனது குடும்பமும், அவனோடுகூட பேழைக்குள் உட்புகுந்த மிருக ஜீவன்களும் காக்கப்பட்டன.
தேவனோடு நடக்க நாம் கற்றுக் கொண்டிருக்கின்றோமா? தேவனோடு நமக்குள்ள உறவைச் சீர்ப்படுத்தி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கே உண்மையுள்ளவர்களாக வாழுவோமானால், தேவனோடு நடப்பது என்பது என்ன? என்னும் கேள்விக்கே இடமிராது. நமது பிள்ளைகளுக்கும் சிறுவயதிலேயே தேவனோடு உறவுகொண்டு வாழக் கற்றுக்கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு. பாவம் நம்மைச் சுற்றிலும் உண்டு. பிசாசானவன் யாரை விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல சுற்றித் திரிகிறான். உலகம் தன் போக்கில் நம்மை இழுக்க வலை விரித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நாம் தேவனுடனான உறவை இழந்து போவோமானால் நாம் நம்மையே இழந்து விடுவோம்! அழிவின் பாதையில் நம்மை நாமே இட்டுச்செல்லுகிறவர்களாக இருப்போம். ஆகையால், தேவனுடனான நமது உறவை விழிப்புடன் காத்துக் கொள்வோம்! தேவன் நம்மை நேசிக்கிறார். அவரோடு நாம் ஐக்கியமாக வாழ வேண்டும் என்றே அவர் ஆசிக்கிறார். அவரது விருப்பத்தை நாம் உதாசீனம் செய்யாமல் தேவ உறவில் வளருவோம். எல்லாவற்றுக்கும் அவரிடம் பதில் உண்டு. முடிவும் அவர் கரத்திலுண்டு. ஆகையால் நாம் நம்பிக்கையோடு அவரோடே நடக்கலாம். பிள்ளை களுக்கும் அந்த நம்பிக்கையையும் பயபக்தியையும், தேவனுக்குப் பயந்து நடக்கவும் நாம் ஊக்குவிக்க வேண்டும். காலங்கடந்தபின் இவைகளை நாம் பிள்ளைகளுக்குள் உட்புகுத்துவது கடினமானது.
‘நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண்போகாது’ (நீதி.23:18).
சிந்தனைக்கு: நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது? நாம் அவரை முற்றிலுமாய் நம்புகிறோமா? அல்லது, நமது தேவைக்கேற்றபடி அவரைப் பயன்படுத்துகிறோமா?