ஜெபக்குறிப்பு: மே 26 வியாழன்
“… ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிற” (தானி.2:21) தேவன்தாமே நமது தேசத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமக்குச் சித்தமானவர்களை ஏற்படுத்தி, நீதியும் நியாயமும் நிலைத்திருக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.
ஐக்கியமின்மை
தியானம்: மே 26 வியாழன்; வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 12:14-27
‘நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயும் இருக்கிறீர்கள்’ (1கொரி.12:27).
நான்கு மாடுகள் ஒன்றாகத் திரிவதை நெடுநாட்களாகக் கவனித்து வந்த சிங்கம் ஒன்று அவற்றைப் பிடிப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஒவ்வொரு முறையும் சிங்கம் வரும்போது, நான்கு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தை விரட்டியடித்து விடும். ஒருநாள் அந்த நான்கு மாடுகள் மத்தியிலும் ஏதோ முரண்பாடு ஏற்பட்டதால், நான்கும் தனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. இதைக் கவனித்த சிங்கம் ஒவ்வொன்றாகப் பிடித்துத் தின்று, தன் நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டது. இது சிறுபிள்ளைகள் கதையே! ஆனாலும் நாமும் கவனிக்க வேண்டிய விஷயம் இக்கதையில் உண்டு. மாடுகளின் ஐக்கியமின்மையால் எப்படி ஒரு சிங்கம் வெற்றி கொண்டதோ, அதுபோலவே கர்ச்சிக்கும் சிங்கம்போல எவனை விழுங்கலாம் என வகைபார்த்துச் சுற்றித்திரியும் பிசாசானவனும் ஐக்கியமின்மையைப் பயன்படுத்தி இலகுவாக அனைவரையும் விழுங்கி விடுவான்.
தலையாகக் கிறிஸ்துவும், அவயவங்களாக நாமும் இருக்கிறோம் என திருச்சபையைக் குறித்து பவுல் குறிப்பிடுகின்றார். அவயவங்களுக்குள் உள்ள ஒற்றுமையைக் குறித்துக் குறிப்பிட்ட பவுல், அதுபோலவே நாமும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அவயவங்கள் ஒன்றுக்காக ஒன்று கவலைப்படுகிறது, ஒன்றுக்காக ஒன்று பாடுபடுகிறது என்பதை பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவுக்குள் சபை ஒற்றுமையாக, ஐக்கியமாக இருந்தால்தான் அது ஆரோக்கியமானதாக, பெலனுள்ளதாக இருக்கும். அதனை யாரும் உடைக்கமுடியாது!
அதுபோலவே, குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிக அவசியம். குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதைச் சரிசெய்து ஒற்றுமையாக வாழுவதே ஆரோக்கியமான குடும்ப வாழ்வாக அமையும். பிள்ளைகள் ஆரோக்கியமான சிந்தையோடும், செயலோடும் வாழ அதுவே வழிவகுக்கும். குடும்பத்தில் பிரிவினைகளும், சண்டைகளும் இருக்குமேயானால் குடும்ப ஐக்கியம் குலைந்துபோகும். அதனால் பாதிக்கப்படுவது நமது பிள்ளைகளே! இதை நாம் மறந்து விடக்கூடாது. இன்று பெற்றோர் தமது சுயநலத்துக்காக பிரச்சனைகள் வந்தவுடன் விவாகரத்துப் பெற்று இலகுவாக ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து விடுகின்றனர். அதனால் பிள்ளைகள் எவ்வாறு பாதிப்படைகிறார்கள் என்பதை சிந்திப்பது இல்லை. இன்று குடும்பப் பிரச்சனைகளினால் அநேகம் பிள்ளைகள் விரக்தி நிலைக்கும், மனோநிலை பாதிப்புக்கும் உள்ளாகின்றனர். எனவே நமது குடும்பங்களின் ஐக்கியத்தைக் கட்டிக்காப்பது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து நடப்போமாக!
‘நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது’ (1யோவா.1:3).
சிந்தனைக்கு: நமது குடும்ப ஐக்கியம் எப்படியிருக்கிறது? அது குலைந்திருந்தால் உரிய காரணத்தை அறிந்து, குடும்ப ஐக்கியத்தை மீண்டும் உறுதியாக்குவோமா?