ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 சனி

“.. அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்” (1 யோவா.5:20) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் அவருக்குள் நமக்கு கிடைத்த மறைவிடம், பாதுகாப்பு, ஆவிக்குரிய நன்மைகள் எல்லாவற்றிற்காகவும் தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

சத்தம் கேட்கிறதா?

தியானம்: ஏப்ரல் 30 சனி; வேத வாசிப்பு: எண்ணாகம் 22: 21-31

‘…நான் பாவஞ்செய்தேன்: வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்: இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால் நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்’ (எண்.22: 34).

அலாரம் வைத்தவர் அயர்ந்து தூங்குவார்; விழித்தவர்களுக்கோ அது சின மூட்டுவதாய் இருக்கும். ‘எத்தனை தடவைகள் அலாரம் அடித்துவிட்டது. எழுந்திரு என்றால், “ஆ” அடித்ததா” என்று அவர் வியப்புடன் கேட்பார். தேவனுடனான உறவிலும் உறக்கநிலையில் இருப்போருக்கு, தேவசத்தம் எத்தனை வல்லமையுள்ளதாக இருந்தாலும், அது அவர்களது செவியில் கேளாது.

கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமாய் புறப்பட்ட பிலேயாமிற்கு கர்த்தருடைய தூதனானவர் குறுக்கே வந்து  நின்றது தெரியவில்லை. ஆனால் அவனது கழுதையோ தூதனைக் கண்டு பக்கமாய் விலகிக்கொண்டது. இதனால் கோபமடைந்த பிலேயாம் கழுதையை அடித்தான். பிலேயாம் காணாத தூதனை பிலேயாமின் மிருகமாகிய கழுதை கண்டுகொண்டது. பிலேயாம் தேவவார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் முரட்டாட்டம் பண்ணியதால், அவனால் தேவ வழிநடத்துதலைக் கண்டுகொள்ள முடியாமற்போனது. தேவனுக்கும் அவனுக்குமிடையில் இடைவெளி ஏற்பட்டு தேவவழி நடத்துதலைக் காணமுடியாதபடிக்கு அவன் தடுமாறிப்போனான். தேவன் பிலேயாமின் கழுதை மூலமாக அவனுடன் இடைப்பட்டு அவனை நல்வழிப்படுத்தினார்.

நாமும் தேவனுடைய வழிநடத்துதலையும், அவரது உறவையும் அசட்டை செய்தோமானால், அவரது வழிநடத்துதலையோ சத்தத்தையோ நம்மால் அறிந்துகொள்ளவோ கேட்கவோ முடியாது. இன்று அநேகர் தேவசத்தத்தைக் கேட்பதற்காகவும், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் பல இடங்களுக்கும் ஓடித்திரிகின்றனர். தங்களுக்குள் இல்லாத ஜெப ஆவியை வேறு ஊழியரிடத்தில் தேடிச்செல்கின்றனர். தங்களிடத்தில் இல்லாத ஆவியையும், வழிநடத்துதலையும் இன்னுமொருவரிடத்தில் எதிர்பார்த்து அலைகின்றனர். ‘அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்’ (சங்.55:17) என்கிறார் சங்கீதக்காரர். நாம் அனுதினமும் தியானிக்கும்போது நமது சத்தம் தேவசமுகத்துக்கு எட்டும்; நம்மோடு பேசும் தேவசத்தத்தையும் நாம் கேட்டிடமுடியும். தேவ சத்தம் கேட்பதற்கு அவரோடு நெருங்கிய உறவும் அமைதி நேரமும்தான் தேவையே தவிர, ஆரவாரம் அல்ல. அமைதியான நேரத்தில் அமைதியாய் இருந்து தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, தேவ சத்தம் இருதயத்தில் கேட்காமற்போகுமா? தேவன்தான் நம்மை ஏமாற்றுவாரா?

‘தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (சங்கீதம் 145: 18).

சிந்தனைக்கு: தேவன் வார்த்தை மூலமாகவோ வேறு எந்த வழியிலோ நம்முடன் இடைப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 வெள்ளி

“கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்” (சங்.118:16) இவ்வாக்குப்படி பற்பலத் தேவைகளோடிருக்கிற 10 குடும்பங்களுக்கு கர்த்தர்கூட இருந்து அவர்களது எல்லா நெருக்கத்திலிருந்தும் விடுவித்து, நீதியையும் நியாயத்தையும் செய்து அவர்களது காரியங்களை வாய்க்கப்பண்ண வேண்டுதல் செய்வோம்.

முறுமுறுப்புக்கள்

தியானம்: ஏப்ரல் 29 வெள்ளி; வேத வாசிப்பு: யாத்திராகமம் 16:1-8

“…உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்” (யாத்திராகமம் 16:8).

முறுமுறுப்புகளில் பலரகம் உண்டு. தமக்குப் பிடிக்காத விஷயங்களை வாய்விட்டுச் சொல்லமுடியாதோர் முறுமுறுப்பர். தாம் நினைத்தது போல காரியங்கள் நடைபெறாவிட்டால் மனவிரக்தியில் முறுமுறுப்பர். சிலர் முறுமுறுத்துப் பழகிவிட்ட பழக்கதோஷத்திலும் எதையோ சொல்லிச் சொல்லி முறுமுறுத்தவண்ணமே இருப்பர். இதில் நாம் எந்த ரகம்?

இஸ்ரவேலரின் வாழ்விலும் இந்த முறுமுறுப்புகள் இருந்தன. கர்த்தர் செய்த அதிசயங்களைக் கண்டு, அவரது அதிசயமான வழிநடத்துதலை அனுபவித்து, விடுவிக்கப்பட்டு, வாக்குப்படியே கானானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள், பசி வந்ததும், எகிப்தின் வெங்காயத்தையும் உள்ளியையும் எண்ணி முறுமுறுக்க ஆரம்பித்தனர். இம்மட்டும் வழிநடத்திய தேவன் இந்த நிலையிலும் வழிநடத்துவார் என்பதை உணராத மக்களாய் நடந்துகொண்டனர். கர்த்தரும் கிருபையாய் அவர்களுடைய பசியைப் போக்க மன்னாவைப் பொழிந்தருளினார். இத்தோடு அவர்களது முறுமுறுப்பு நின்றுவிடவில்லை; அது தொடர்ந்து கொண்டே சென்றது. தொடர்ந்து வரும் அதிகாரங்களைப் படித்தீர்களென்றால் எத்தனை தடவைகள் அவர்களது முறுமுறுப்புகள் தொடர்ந்தன என்பதை நாம் அறியலாம்.

கர்த்தருடைய வழிநடத்துதலை இஸ்ரவேலர் ஒரு நிமிடத்தில் மறந்து போனார்கள். நமது வாழ்விலும் நாமும்கூட இப்படியாக தேவனையும், அவரது வழிநடத்துதலையும் மறந்து நமது இஷ்டத்துக்கு, நாம் நினைத்தபடியெல்லாம் தேவனுக்கு எதிராக முறுமுறுத்து, நமது இஷ்டம்போல நடப்பதுண்டு. தேவனும் நம்மீது கிருபையாக இன்னமும் இருக்கிறார். முறுமுறுப்புகள் நம்மிடமிருந்து நீங்கவேண்டுமானால், தேவனுடைய வழிநடத்துதலை ஒருபோதும் மறந்து போகாமல், அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அவர் நமக்குத் தந்த ஆசீர்வாதங்கள் ஈவுகளை மறவாத உள்ளம் நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் தேவனை மறந்துவிடாமல் எப்போதும் துதியுடன் வாழமுடியும்.

நாம் முறுமுறுக்கும் ஒவ்வொரு தடவையும், நாம் தேவனை மாத்திரமல்ல, அவருடைய வல்லமையையும் சந்தேகிக்கிறோம்; நமது முறுமுறுப்புகளை நீடிய பொறுமையுடன் பொறுத்துக்கொண்டு, கர்த்தர் நம்மீது கிருபையாய் இருப்பதை நாம் நமக்குச் சாதகமாக்கிக்கொள்கிறோம். திருப்தியற்ற உள்ளங்களும், ஆசையும் இச்சையும் உள்ள உள்ளங்களுமே முறுமுறுக்க ஆரம்பிக்கிறது. இது, நாம் தேவனை மறக்கவும், அவரைவிட்டுப் பின்வாங்கிப் போகவும் நம்மை இட்டுச் செல்லாது என்று சொல்வதற்கில்லை. முறுமுறுக்கும் நாவை அகற்றி, நன்றியுள்ள இருதயத்தைத் தரும்படிக்குக் கேட்போமா!

சிந்தனைக்கு: நன்றி இருக்கும் வாயில் முறுமுறுப்புக்களுக்கு இடமிருக்காது. எல்லாவற்றிலும் திருப்தியற்று முறுமுறுத்துக்கொண்டு, நாம் தேவனுக்கு நன்றியாயிருக்கிறோம் என்று சொல்லுவது சுத்த பொய். இக் காரியம் நம்மிடம் உண்டா?