ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 ஞாயிறு

“… நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி 22:11) இந்தநாளின் ஆராதனையில் கலந்துகொள்ளும் யாவரும் நீதியும் பரிசுத்தமுள்ளவர்களாக, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டுதல் செய்வோம்.

ஆவியில் ஆராதனை

தியானம்: ஏப்ரல் 10 ஞாயிறு; வேத வாசிப்பு: ரோமர் 11:33-12:2

“…நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1).

‘ஏன் இப்போது ஆலயத்துக்கு வருவதில்லை’ என்று கேட்டால், ‘உங்கள் ஆராதனையில் ஆவி இல்லை. அதனால் நாங்கள் ஆவிக்குரிய சபைக்குப் போகிறோம்’ எனக் கூறுகிறவர்கள் அநேகர். ஆனால், நாம் நின்று சிந்திக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு. அதாவது, ஆராதனையில் ஆவி இல்லையா, அல்லது நமக்குள்ளேயே ஆவி இல்லையா? நாம் செத்துப்போயிருந்தால், அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருந்தால் நாம் பார்ப்பவை, ஆராதிப்பவை எல்லாமே உயிரற்றதாகவே தெரியும். ஆகவே, உயிரில்லாத ஒரு வாழ்வை நாம் வாழ்ந்துகொண்டு, நமது சபை செத்துவிட்டது, ஆராதனைகள் உயிரற்று விட்டன எனக் கூறுவது பிரயோஜனமற்றது.

ஆவியானவரின் நிரப்புதல், அந்நிய பாஷையின் வரங்கள், அற்புத அடையாளங்கள் ஆகிய யாவும் உண்டு. இவற்றை ஆண்டவர் அந்தந்த நேரங்களில் தமது விருப்பப்படி கொடுக்கிறார், நடப்பிக்கிறார். சிலர் இவற்றால் தாங்கள் நிரப்பப்பட்டிருப்பதுபோல பாசாங்கு காட்டுவதும், நடிப்பதும் தேவன் அருவருக்கும் காரியங்களாகும். இவர்கள்தான் ஆவி இல்லை, உற்சாகம் இல்லை என்று ஆராதனைகளையும், சபைகளையும் குற்றஞ்சாட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். நமது சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதுமே புத்தியுள்ள ஆராதனை என்கிறார் பவுல்.

முதலாவது, நாம் நம்மைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். அவ்வாறு நமது வாழ்வு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நம்மால் உண்மையாக தேவனை ஆராதிக்கவும், ஆலய ஆராதனையில் தேவபிரசன்னத்தை உணரவும் முடியும். இல்லையேல் நாம் செய்யும் ஆராதனை மொத்தத்தில் வீணாகிவிடும். நாம் ஆலயத்துக்கு வரும்போது நம்மை ஆயத்தப்படுத்தியவர்களாக, ஜெபத்தோடுகூட வரவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் நம்மால் தேவனை விடுதலையோடு ஆராதிக்க முடியும். “அதிகாலமே உமது சமுகத்தில் வந்து ஆயத்தமாகிக் காத்திருப்பேன்” என்பது சங்கீதக்காரரின் அனுபவரீதியான ஜெபம். ஆயத்தத்தோடு வருகின்ற உள்ளத்திலேயே தேவாவியின் பிரசன்னத்தையும், வழிநடத்துதலையும் உணர்ந்திட முடியும். நம்மை நாமே ஆராய்ந்து மனந்திரும்புவதை விட்டுவிட்டு, சபையில் ஆவி இல்லை, ஆராதனையில் ஆவி இல்லை என்று முறுமுறுக்காதபடி எச்சரிக்கையாக இருப்போமாக. ஏனெனில், ஆராதனை நமக்கல்ல! அது தேவனுக்கே!

சிந்தனைக்கு: எந்த உள்ளத்துடன் சபை ஆராதனைக்கு நாம் செல்லுகிறோம்? தேவாவியானவரின் கரத்தில் நம்மையும், எல்லோரையும் ஒப்புவித்துச் செல்லுகிறோமா?