ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 திங்கள்

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி செய்தியாளர்களின் நல்ல சுகத்திற்காக வேண்டுதல் செய்து, அவர்கள் மூலமாக தேவன் தந்தருளும் வேதபாடங்கள் அநேகமாயிரமான மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாக இருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.

திருப்தியான வாழ்வு

தியானம்: ஏப்ரல் 4 திங்கள்; வேத வாசிப்பு: எண்ணாகமம் 11:20-35

“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1தீமோத்தேயு 6:6).

பேராசை பிடித்தவர்களைக் குறித்து அநேக கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். தங்கமுட்டை இட்ட வாத்தை வெட்டி எல்லா முட்டைகளையும் ஒரே நேரத்தில் எடுக்கமுயன்ற ஒருவனைப்பற்றி ஒரு கதையுண்டு. அதேபோல் நான் தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் கேட்ட அரசன், சாப்பிடுவதற்காக சாப்பாட்டைத் தொட்டதும், அதுவும் பொன்னானதைக் கண்டு பசியினால் துடித்ததாகவும் ஒரு கதை உண்டு. இக்கதைகளையெல்லாம் அறிந்தும் இன்னமும் போதுமென்கிற மனம் நமக்கு வரவில்லை என்பதும் ஒரு உண்மை.

ஒருமுறை சத்தியவசனக் காலண்டரில் அச்சடிக்கப்பட்டிருந்த ஒரு வாசகம் என் மனதைத் தொட்டது. “திருப்தியுள்ள மனமே மகிழ்ச்சியான வாழ்வின் இரகசியம்”. ஆம், அதுபோலவே, “போதுமென்கிற மனதுடனேகூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்” என்று பவுலடியார் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். திருப்தியுள்ள மனம், போதுமென்கிற மனம் இவைகள் சந்தோஷமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். திருப்தியில்லாத மனதில் சந்தோஷம் செத்துவிடும். தேவன் நமக்குத் தந்த நன்மையான ஈவுகளில் நாம் நிறைவு காணவேண்டும்.

உயிர் வாழ உணவு அவசியம். அதற்கேற்ற ஒழுங்கை இஸ்ரவேலருக்குக் கர்த்தர் செய்திருந்தார். ஒரு வேலையும் செய்யாமலே, வானத்திலிருந்து விழுந்த முழுமையான உணவான மன்னாவை அவர்கள் சாப்பிட்டனர். ஆனால், அதற்கும் மேலாக இஸ்ரவேலர் உணவை இச்சித்து முறுமுறுத்தார்கள். தேவன் எவ்வளவு நன்மைகளைச் செய்தும், எவ்வளவு அதிசயமாய் நடத்தியும், அவ்வப்போது அவர்கள் தேவைகளையெல்லாம் சந்தித்தும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கியும், எல்லாவற்றையும் ஒரு நொடிப்பொழுதில் மறந்து போனார்கள். இறைச்சி வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். அளவுக்கு அதிகமாக, காடைகளைச் சேர்த்துவைக்க முற்பட்டார்கள். ஆனால், நடந்தது என்ன? அவர்கள் கேட்டதை ருசித்துப் புசிக்கும் முன்னரே, இறைச்சி அவர்களுடைய பற்களினால் மெல்லப்படும்போதே இச்சித்தவர்கள் தேவகோபாக்கினைக்கு ஆளானார்கள்.

நமது வாழ்விலும் தேவை, ஆசை இரண்டும் அலைமோதுவது வழக்கம். இவற்றையும் மீறி இச்சைக்கு நாம் இடமளிக்கும்போதுதான் நாம் பிரச்சனைக்குள்ளாகிறோம். தேவைகளை நாம் தேவனிடம் கேட்போம். ஆசைகளை அறிக்கையிடுவோம். இச்சைகளைக் கட்டுப்படுத்தி வாழப் பெலன் கேட்போம். எப்போதும், தேவன் தரும் ஆசீர்வாதங்களில் திருப்திகாண முயலுவோம். தேவன்தாமே அதற்கான பெலனையும், பொறுமையையும் தந்தருளுவாராக.

சிந்தனைக்கு: இன்று என்னென்ன விஷயங்களில் நாம் திருப்தியற்றிருக்கிறோம். அது நமக்குத் தேவைதானா, அல்லது ஆசையா, அல்லது நாம் இச்சிக்கிற காரியமா?