ஜெபக்குறிப்பு: ஜூலை 31 ஞாயிறு

“நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங். 104:33) என்ற வாக்குப்போல, இம்மாதம் முழுவதும் நம்மை நடத்தின தேவனை நன்றி நிறைந்த இருதயத்தோடு ஆராதித்து, கீர்த்தனம் பண்ணி அவரைத் தொழுதுகொள்வோம்.

வனாந்தரத்திலும் வழிநடத்துவார்!

தியானம்: ஜூலை 31 ஞாயிறு; வேத வாசிப்பு: மாற்கு 1:9-13

நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்… அவர் வனாந்தரத்திலே நாற்பது நாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு..” (மாற்.1:11,13).

பிதாவாகிய தேவன் தமது குமாரன் மேல் பிரியம் வைத்திருந்தார். நாம் வாசித்த பகுதியில், இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று வெளியேறியதும் ஆவியானவர் தம்மேல் இறங்குவதைக் கண்டார் என்றும், பின்பு ஆவியானவராலேயே வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டார் என்றும் வாசித்தோம். வனாந்தரத்திற்கு ஓய்வெடுப்பதற்காக அல்ல! சாத்தானால் சோதிக்கப்படவே கொண்டு செல்லப்பட்டார். காட்டு மிருகங்களின் மத்தியில் சஞ்சரித்த இயேசுவுக்கு தேவதூதர்கள் ஊழியஞ் செய்தார்கள்.

தேவனுடைய பிள்ளைகள் நாம் அவரில் வளரவும், அவரது வழியில் நடக்கவும் வாஞ்சிப்பது நல்லது. அதற்காக, நமது வாழ்க்கைப் பாதை எளிதாயிருக்கும் என்றெண்ணி நாம் ஏமாற்றமடைந்து விடக்கூடாது. கீழ்ப்படிதலின் பாதையில் நடந்து பரிசுத்தாவியானவரின் நிரப்புதலைப் பெற்றுக்கொண்டாலும், நமது வாழ்க்கைப்பாதை வனாந்தரப் பாதையாக இருக்கமுடியும். சோதனை, சோர்வு. பசி, தனிமை போன்றவற்றுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும் (2தீமோத்.3:12). தேவனை நெருங்கி வாழ நாம் எவ்வளவாய் முயற்சிக்கிறோமோ, அவ்வளவாய் சாத்தான் நம்மைச் சோதிக்க முயற்சிப்பான். இயேசுவைப்போல காட்டுமிருகங்கள் மத்தியில் சஞ்சரிக்க நாம் அழைக்கப்படுவோமோ இல்லையோ, காட்டு மிருகங்களின் குணாதிசயங்களைக் கொண்ட மனிதர் மத்தியிலே வாழுவதைத் தவிர்க்கவே முடியாது. எரிச்சல், பொறாமை, கொலை, பகை ஒருவரையொருவர் அழிக்க முயற்சித்தல் என இப்படியான குணங்களுள்ள மக்களை நாம் தினமும் சந்திக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதால் இந்த உலகைவிட்டு வேறு உலகில் வாழப் போவதில்லை. இந்த உலக வாழ்வுக்கு நாம் முகங் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஓடி ஒழிந்து வாழ முடியாது.

ஆண்டவரைத் தொழுதுகொண்டும் இப்படியான சூழ்நிலையில் தத்தளிக்கும் தேவபிள்ளையே! நமக்கு முன்னே இச்சூழ்நிலையைச் சந்தித்த கிறிஸ்து, தோற்றுப் போகவில்லையே! அவருடைய வல்லமையினால் நாமும் வெற்றி பெறுவது நிச்சயம். இயேசு வனாந்தரத்தில் இருந்த நாட்களில் தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ் செய்தார்கள். அதேபோல, ‘இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ (மத்.28:20) என வாக்களித்தவர், நமது வனாந்தர அனுபவங்களில் நம்மைக் கைவிடுவாரா? ஆகவே, தைரியத்தோடு இந்த உலக வாழ்வின் ஓட்டத்திற்கு முகங்கொடுப்போமாக. நாம் ஜெயம்பெறும்போது மகிமைப்படுகிறவர் இயேசு அல்லவா!

சிந்தனைக்கு:  என்ன வியாதியோ வேதனையோ, ‘இயேசு நம்முடன் கூடவே இருப்பதால் நாம் பயப்பட மாட்டோம்” என்று நம்மால் சொல்ல முடியுமா?

ஜெபக்குறிப்பு: ஜூலை 30 சனி

“.. முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங்.71:18) என்ற வாக்குப்படி பங்காளர் குடும்பங்களில் உள்ள முதிர்ந்த வயதுள்ள ஒவ்வொருவருக்கும் வேண்டிய நல்ல சுகம், சமாதானம், ஆதரவு கிடைத்து அவர்கள் சந்தோஷத்தோடு காணப்பட கர்த்தர் வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

உண்மையுள்ள ஆராதனை

தியானம்: ஜூலை 30 சனி; வேத வாசிப்பு: மாற்கு 3:1-5

‘(இயேசு) அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது’ (மாற்கு 2:27).

ஞாயிறு ஆராதனைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் தான் கடுமையாக  வியாதிப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனைக்குச் செல்ல உதவி செய்யும்படியும் தகவல் அனுப்பினார். அவரைக் கூட்டிச்சென்றதால், அன்று என்னால் ஆராதனைக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், வியாதிப்பட்ட ஒருவருக்கு உதவிய திருப்தி மனதை நிறைத்திருந்தது. என் வாழ்வில் ஆண்டவர் மகிமைப்பட்டதாக அவரை நன்றியோடு ஸ்தோத்திரித்தேன். ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயந்தான் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கிறாரே (மத்.12:12).

ஜெப ஆலயத்தில் பிரவேசித்த இயேசு, சூம்பின கையையுடைய ஒரு மனுஷனைக் கண்டார். ஓய்வு நாளில் இயேசு அவனைக் குணப்படுத்தினால் இயேசுவில் குற்றம் சுமத்துவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்தனர் பரிசேயர். இயேசுவோ அவனுடைய கையைக் குணப்படுத்தினார். ஓய்வு நாளில் நன்மை செய்வதே நியாயம் (மாற்.3:4) என்பதைப் புரியவைத்தார். இதற்கு முந்திய அதிகாரத்தில் ஓய்வு நாளில் பயிர்வழியே சென்ற இயேசுவின் சீஷர்கள் கதிர்களைக் கொய்யத் தொடங்கியதையும், அதிலும் பரிசேயர் குற்றம் கண்டுபிடித்தனர். ஆம், ஓய்வு நாளைக் கர்த்தர் மனுஷனுக்காக உண்டாக்கினார். நம்மை ஓய்வுபடுத்தி நன்மை பெறுகிறவர் அல்ல கடவுள். நாம் ஓய்விலிருக்கும்போது, சரீரத்திலும், தேவனுடனான உறவிலும் நாம் வளருகிறோம்! வளரவேண்டும். ஆனால், பரிசேயரோ ஓய்வு நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சட்டங்களைக் கையில் எடுப்பதற்கு முன்னர், அந்தச் சட்டத்திற்கான நோக்கத்தை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிலே பரிசேயர் தவறி விட்டனர்.

ஆராதனை முக்கியம்;; ஆனால், இன்னொருவர் உயிரும் மிக முக்கியம். ஓய்வு நாள் ஓய்வு முக்கியம்; இன்னொருவரின் ஆபத்தில் உதவியாயிருப்பதும் மிக முக்கியம். கிறிஸ்துமஸ் நாளில் ஆராதனைக்குப் புறப்பட்ட ஒரு சகோதரி, அடுத்த வீட்டில் வசிக்கும் வயோதிபத் தாய் ஒருவருக்கு வியாதி கடுமையானதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். “இம்முறை கிறிஸ்துமஸ் எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது” என்றார் அவர். கர்த்தர் ஓய்வு நாளை நமக்கென்றே உருவாக்கினார். புpறரின் தேவையைக் குறித்து நாம் உணர்த்தப்படும்போது, அதனைக் கருத்தில் கொள்வதும் அவருக்குச் செய்யும் பெரிய ஆராதனையாகும். உன்னைப்போல உன் அயலானையும் நேசி என்று கூறிய ஆண்டவர், நமது வாழ்வே தமக்கு ஆராதனையாக மாறவேண்டுமென்றே விரும்புகிறார். அந்த ஆராதனையை ஏறெடுக்க நாம் ஆயத்தமா?

சிந்தனைக்கு: இன்று நாம் ஆண்டவரை ஆராதிக்கும் ஆராதனை எப்படிப்பட்டது?