ஜெபக்குறிப்பு: ஜூலை 1 வெள்ளி

“இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசா.52:12) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம் போக்கு வரவுகளை ஆசீர்வதிக்கவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பாதுகாத்து வழிநடத்திடவும் ஜெபம் செய்வோம்.

விசுவாசித்தபடியே…

தியானம்: ஜூலை 1 வெள்ளி; வேத வாசிப்பு: யோசுவா 14:7-11

அப்பொழுது காலேப் …: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான் (எண்ணா.13:30).

சில மூத்த நண்பர்களைச் சந்தித்து, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று ஒரு கேள்விதான். “வயது போய்விட்டது, அடிக்கடி வியாதிகள் என்று ஒருவர் சலித்துக்கொண்டார். மற்றவரோ, ‘நன்றாய்ப் போகின்றது, மனம்தான் எல்லாம், வயது ஒரு பொருட்டே அல்ல’ என்று சந்தோஷமாகக் கூறினார். இருவரும் ஒரே வயதுள்ளவர்கள். ஆனால், மனநிலையோ வேறுபட்டிருந்தது.

கானான் தேசத்தை வேவுபார்ப்பதற்காக பன்னிரண்டு கோத்திரங்களிலும் பன்னிரண்டு பேர் தெரிந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களில் பத்துப்பேர் துர்ச்செய்தியும், இரண்டுபேர் மட்டுமே நல்ல செய்தியும் கொண்டுவந்தனர். அந்த இருவரும் காலேபும் யோசுவாவுமே. காலேப் தன் இருதயத்தில் விசுவாசித்தான். கானானில் மிகுந்த பலமுள்ள இராட்சதர்களைக் கண்டும், அவர்களை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டார். அது எப்படி? ’கர்த்தர் நம்மோடே இருக்கிறார்’ (எண்.14:9). இதுதான் காலேப் கொண்டிருந்த நம்பிக்கையின் இரகசியம். மற்றப் பத்துப்பேருமோ அங்கே போனால் அழிந்துபோவோம் என்னும் துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஆதனால் கலங்கி நின்ற மக்களிடம், ‘நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்’ (எண்ணா.13:30) என தைரியப்படுத்தியதும் இந்தக் காலேப்தான். இந்த விசுவாசமும் மனத்தைரியமும் காலேபுக்கு இருந்ததினால்தான், நாற்பது வயதில் அவரிடம் இருந்த பெலன் எண்பத்தைந்து வயதிலும் குறையவில்லை. யுத்தத்திற்கும் போக்கும் வரத்துமாயிருந்தார் (யோசு.14:10,11). அவர் விசுவாசித்தார்; ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்!

மெய்விசுவாசத்துடன் கர்த்தரையே உத்தமமாய்ப் பற்றிக்கொண்டு வாழும் வாழ்வு என்றும் ஆரோக்கியமும் நன்மையும் கொண்டுவரும். யார் என்ன ஆலோசனை கூறினாலும், அது வேதவாக்கியங்களுக்கு ஏற்றபடி இருக்கின்றதா என ஆராய்ந்து நலமானவைகளைப் பற்றிக் கொள்வதே சரியான வழி (1தெச.5:21). இவ்வித மனப்பாங்குடன் வாழும்போது மலைபோல் தோன்றும் எந்தப் பிரச்சனைகளும் பனியைப்போல மறைவதைக் காணலாம். கர்த்தரை விசுவாசித்து, உண்மைத்துவத்துடன், அவரையே பற்றி வாழும்போது கர்த்தர் நம்மையும் ஆசீர்வதிப்பது நிச்சயம்.

சிந்தனைக்கு: நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும்படி பரப்பிய துர்ச்செய்திகளை உதறிவிட்டு, நலமான செய்திகளை அறிவிக்க நம்மை ஒப்புவிப்போமா!

காலமே தேவனைத் தேடு!

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 108:1-13
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன் (சங்கீதம் 108:2).

சிலர் வைகறையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவராய் இருப்பர். சிலர் இரவில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வார்கள். அதிகாலையில் எழுபவரோ அல்லது இரவு விழித்திருப்பவரோ யாராயினும் நம் இருதயம் தேவன்மேல் உள்ளதா என நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

“தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்” என்று தாவீது சங்கீதம்108 இல் எழுதியுள்ளார். அதிகாலையில் எழுபவரும், இரவில் விழித்திருப்பவரும் தேவனாகிய ஆண்டவரை அறிந்திருப்பவர்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிக் கலங்காமல் அமைதியான இருதயம் உடையவர்களாய் இருப்பார்கள். நம்முடைய அறிவு, ஆற்றல் ஆக்கத்திறன் இவற்றுடன் நம் உதடுகளும் அவரைப் பாடித் துதிக்கும். அது நமது இருதயத்தை துதிப்பாடலுடன் எழும்ப விடுக்கும் அழைப்பாகும். தாவீது அதிகாலையில் எழுந்தவர்; தான் மாத்திரமல்லாது தனது உதடுகளும் இசைக்கருவிகளும் அதைப் போன்று துதிகளைப் பாடவும் தீர்மானித்திருந்தார். ஆதலால் அவர் “வீணையே, சுர மண்டலமே, விழியுங்கள்” என்று அழைக்கிறார். தேவனுடைய துதிகளைத் தாம் மாத்திரம் பாடுவதுடன் நில்லாது தனது விரல்களையும் இசைக்கருவிகளின் நரம்புகளை மீட்டிப் பாடுவதில் விருப்பமுடையவராய் இருந்தார்.

ஆனால் அவருடைய துதியின் இரகசியம் அவருடைய குரலிலோ வீணையிலோ சுரமண்டலத்திலோ இல்லை. அது தேவனைத் துதிக்க தன் இருதயத்தை அழைத்துக்கொண்டதில் இருந்தது. பூரண மாற்றமடைந்த ஓர் ஆத்துமா தேவனைப் பாடும்பொழுது மட்டுமே அப்பாடல் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும். “வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்” (சங்.108:2). ஆதவனின் கதிர்கள் தோன்றுமுன்னர் தேவனைத் துதிக்கும் அவருடைய பாடல்கள் எழும்பும். ஒரு நாளின் மிகச் சிறந்த பிரகாசமான நேரத்தில் சங்கீதக்காரன் மகிழ்ச்சியுடன் எழும்பி தேவனைத் துதிக்கிறார். தாம் மாத்திரம் அதிகாலையில் எழுந்து தேவனைத் துதிப்பதுடன் மட்டுமல்லாமல் அவரது சரீரத்தின் ஒவ்வொரு நரம்பையும் எழுப்புகிறார். ஒரு சிலர் காலையில் எழும்பி கடமைக்கென அரைமனதுடன் தேவனைத் துதிக்கின்றனர். இவர்கள் பாடல்களை அரைகுறை தூக்கத்துடன் இழுத்து இழுத்து பாடுகின்றனர். சிலர் அதிகாலையில் எழுந்து துதித்தாலும் அவர்களுடைய எண்ணங்கள், மொழிகள் மற்றும் சரீரத்தில் விழித்திருப்பதில்லை. அதிகாலையில் எழும்பி தேவனைப் பிரியப்படுத்த விரும்புவோர் தேவனைத் துதிக்கும் முன்னர் தாம் முற்றுமாக விழித்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்களுடைய அதிகாலைத் துதி வெறும் ஒரு சடங்காகவே இருக்கும்.

வைகறையில் எழுந்து தேவனுடன் நேரம் செலவழிப்பது ஓர் அற்புதமான உணர்வு. ஆனால் அநேக வேளைகளில் நம்முடைய காலை ஜெபமானது சோர்வு, தூக்கம், அரை குறை விழிப்பு இவற்றால் நிரம்பியுள்ளது. நம்முடைய அனுதின தியான நேரத்தில் தேவனைச் சந்திக்க விழிப்புடன் ஆயத்தமாயிருக்கிறோமா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஹென்றி வார்ட் பீச்சர் என்பவர் கனெக்டிகட் மாகாணத்திலுள்ள லிட்ச் பீல்டு என்ற இடத்திலுள்ள தனது தகப்பனாரின் பண்ணையில் வேலை செய்த ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். “அவருக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அதன் ஒரு மூலையில் ஒரு சிறிய கட்டிலும் இருந்தது. சிறுவனாக இருந்த நான் அதில் படுத்துக்கொண்டு அவருடைய தியான வேளையை கவனித்து வந்தேன். முதலாவதாக அவர் புதிய ஏற்பாட்டுப்பகுதி ஒன்றினை வாசிப்பார். நான் அந்த அறையில் இருப்பதைக் கண்டுகொள்ளமாட்டார். பின்னர் அவர் ஜெபம்பண்ணி பாடல்களைப் பாடி நகைப்பார். வேதாகமத்தை அந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் வாசிக்க முடியுமா என்று நான் அதுவரை கண்டதில்லை. அவருடைய ஜெபவேளை எனது வாழ்வில் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியது. அவருடைய செயல்கள் சரியானவையா என நான் சிந்தித்த தில்லை. ஆனால் ‘இம் மனிதர் இவ்வாறாக மகிழ்ச்சியுடன் செய்கிறார்’ என்றே நான் சிந்தித்ததுண்டு.

ஜெபநேரம் அதி இன்பமான நேரமாக இருக்கும் என்பதை எனது தாயார் மற்றும் தகப்பனாரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதைவிட இம் மனிதரிடமிருந்து அதிகமாக அறிந்து கொண்டேன். அதில் மகிழ்ச்சியும் நன்றியும் நிரம்பிவழியும் என நான் கண்டுகொள்ள அவர் உதவி செய்தார்” என்று குறிப்பிடுகிறார்.

தாவீதின் இருதயம் தேவன்மேல் நிலைத்திருந்தது அவரைத் துதிக்க அதிகாலையில் எழும்புவதில் ஆச்சரியமில்லை. நமது சிந்தனையும் இசைக் கருவிகளும் ஆயத்தமாக இருந்தாலும் நாம் ஆயத்தமாக இல்லையெனில் நமது அதிகாலை துதி ஆண்டவரை அவமதிப்பதாகும்.

நாம் எப்பொழுதும் விழித்திருந்து ஆயத்தமாகி அதிகாலையில் எழுந்து ஆண்டவரைத் துதிப்போமாக. நமது ஜெபத்தை அவர் கேட்கவேண்டுமெனில் நமது ஜெபவாழ்வு அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியுடையதாகவும் இருக்கவேண்டும். “தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின் மேலும் உயர்ந்திருப்பதாக” (சங்.108:5).

அதிகாலைப் பாடல்:

காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(1) சீகன்பால்க் மொழிபெயர்ப்பு

1714 ஆம் ஆண்டு, சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. 1715 இல், புதிய ஏற்பாட்டின் மிகுதிப்பகுதிகள் அச்சிடப்பட்டன. சீகன்பால்க், ஸ்கிமிட் என்பவரின் மூல மொழி வேதாகமத்தையும், ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு, மார்ட்டின் லூத்தர், ஓபன்பார்க் என்போரது ஜெர்மன் மொழிபெயர்ப்புகளையும் உபயோகித்து வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதற்கு முன் வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிராதமையினால், கிறிஸ்தவ மார்க்கக் கருத்துக்களைத் தமிழில் எவ்வாறு எழுதுவது என்பது சீகன் பால்க்கிற்கு பெரும் சிக்கலாயிருந்தது. இவ்விஷயத்தில், ரோமன் கத்தோலிக்க மிஷன் தமிழில் வெளியிட்டிருந்த ஒரு சில புத்தகங்களே சீகன் பால்க்கிற்கு பெரிதும் உதவின. அவர், அக்கால ரோம சபை மிஷனரிகளைப் போலவே கடவுளுக்கு ‘சருவேசுவரன்’ எனும் பதத்தை உபயோகித்தார். தமிழில் முதன் முதலில் வேதாகமத்தை மொழி பெயர்த்த சீகன்பால்க் 1719 இல் மரணமடைந்தார். அச்சமயம், அவர் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் புத்தகம் வரைக்கும் மொழிபெயர்த்திருந்தார். சீகன்பால்க் மரணமடைந்த வருடம் தரங்கம்பாடிக்கு மிஷனரியாக வந்த பெஞ்சமின் சூள்ட்ஸ் என்பவர், 1723 இல் பழைய ஏற்பாட்டின் மிகுதிப்பகுதியைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். 1725இல் பெஞ்சமின் சூள்ட்ஸின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இவரது முயற்சி காரணமாக 1723 இல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களும், 1724 இல் சங்கீதப்புத்தகமும், 1726 இல் ரூத் முதல் உன்னதப்பாட்டு வரையிலான (சங்கீதம் தவிர்த்து) புத்தகங்களும், 1727 இல் ஏனையவையும் அச்சிடப்பட்டன. 40 வருடங்களாக, தமிழ் கிறிஸ்தவர்கள் சீகன்பால்க், சூள்ட்ஸ் என்போர் மொழிபெயர்த்த இவ்வேதாகமத்தையே உபயோகித்து வந்தனர்.

(2) பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு

சீகன்பால்க் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்தின் மொழிநடை திருப்திகரமற்றது எனும் கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்தமையினால், அதைத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டியது அவசியம் என அநேகர் கருதினர். இதனால் ஜோஹான் பிலிப் பெப்ரீஷியஸ் என்பவர், சீகன் பால்க்கின் வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெப்ரீஷியஸ், 1740 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலுள்ள கடலூருக்கு மிஷனரியாகப் பணியாற்ற வந்தவராவார். 1742 இல், சென்னைக்குச் சென்ற இவர், மரிக்கும் வரை அங்கிருந்து இறைபணியாற்றினார். இவர் தன் ஊழியகாலத்தில் பலவிதமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்ததோடு, வயோதிப காலத்தில் பலதடவைகள் சிறைப்பட்டுமுள்ளார். மேலும், இவருடைய காலத்தில் ஏற்பட்ட பல யுத்தங்கள், பஞ்சம் என்பன இவரை வெகுவாகப் பாதித்தது. இவர் தனது துயர காலத்தில் பல கிறிஸ்தவப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் தயாரித்த 9000 சொற்கள் கொண்ட ஆங்கில – தமிழ் அகராதி பிரபல்யமானதொன்றாகும்.

வேதாகமத்தின் மூலமொழிகளில் பட்டம் பெற்றிருந்த பெப்ரீஷியஸ் இந்தியாவுக்கு வந்து 7 மாதங்களிலேயே தமிழ் மொழியைக் கற்று தமிழில் பிரசங்கிக்கக்கூடியவரானார். பெப்ரீஷியஸ் 1752 இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இவர் முழங்காலிலிருந்து வேதாகமத்தை மொழி பெயர்த்ததாகச் சொல்லப்படுகின்றது. சீகன்பால்க் இரு வருடங்களில் செய்த வேலையை பெப்ரீஷியஸ், இருபது வருடங்களாக மிகுந்த கவனத்துடனும் அதிக நுணுக்கமாகவும் நிதானமாகவும் செய்தார். பெப்ரீஷியஸ் தனது மொழி பெயர்ப்பைப் பலதரப்பட்ட மக்களுக்கும் வாசித்துக் காண்பித்து, அது சகலருக்கும் விளங்குகிறதா என்பதையும், மொழிபெயர்ப்புப் பற்றிய மக்களது கருத்துக்களையும் அறிந்து கொண்டார். இவரது புதிய ஏற்பாடு 1772 இல் தரங்கம்பாடியில் இருந்த கிறிஸ்து மார்க்க அபிவிருத்திச் சங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு வேலைகள் முடிவடைந்தவுடன், பெப்ரீஷியஸ் பழைய ஏற்பாட்டையும் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்ததில் பெப்ரீஷியசுக்குக் கிடைத்த அனுபவம், பழைய ஏற்பாட்டைச் சிறப்பான முறையில் மொழிபெயர்க்க அவருக்கு உதவியது. அத்தோடு பெப்ரீஷியஸ் வேதாகமத்தின் மூலமொழிகளை நன்கறிந்திருந்தமையினால், அவரது மொழிபெயர்ப்பு மூலமொழியோடு இணங்கும் மொழிபெயர்ப்பாய் இருந்தது. அத்தோடு, பெப்ரீஷியசின் தமிழ்மொழிநடை சீகன்பால்க்கினுடையதைவிட சிறப்பானதாக இருந்தது. எனினும், சொற்களைப் பொறுத்தவரை பெப்ரீஷியஸ் சீகன் பால்க்கின் மொழிபெயர்ப்பிலுள்ள பதங்களையே உபயோகித்துள்ளார்.

சீகன்பால்க் கடவுளுக்கு உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்திற்குப் பதிலாக பெப்ரீஷியஸ், “பராபரன்” எனும் பதத்தைத் தன்னுடைய மொழிபெயர்ப்பில் உப யோகித்திருந்தார். இது, அக் காலத்தில் பொதுவழக்கில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவசமயப் புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்டு 2016)

1. Greetings to you in the name of our Lord Jesus Christ. Your daily readings ‘Anuthinamum Christuvudan’ and the other books are quite useful in my day to day life. May God bless all those who work in this sathiavasanam Ministry abundantly. Surely His blessings would help you all to be a blessing to others.

Mrs.Padmini Victor, Madurai.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசிப்பதன் மூலம் எவ்வளவோ ஆறுதலையும் சமாதானத்தையும் அடைந்து வருகிறேன். என் பெலவீனத்தின் மத்தியில் வேதத்தை வாசிக்க தேவன் தந்த வாஞ்சைக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். கடந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரையும் கண்ணின்மணிபோல் பாதுகாத்து இம்மட்டும் நடத்திவந்த தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிக்கிறேன்.

Mrs.Victoria Isaac, Tirunelveli.

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வேதவாசிப்பு பகுதியின்படி கடந்த 1 வருடத்தில் வேத புத்தகத்தை வாசித்து முடித்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடமும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Mrs.Sargunar, Madurai.

4. 2015 ஆம் ஆண்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபை செய்தார். எத்தனையோ ஆண்டுகள் இப்படி வேதாகமத்தை வாசித்து முடிக்க தியானபுத்தகத்தின் அட்டவணை எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. தியானங்கள் என் வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. இந்த ஊழியங்களை ஆண்டவர் மேன்மேலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Regina Manickam, Palayamkottai.

page 1 of 2