Daily Archives: June 21, 2018

வாக்குத்தத்தம்: 2018 ஜுன் 21 வியாழன்

நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை .. கைவிடுவார். (1நாளா.28:9)
வேதவாசிப்பு: 1நாளா.27,28 | அப்போ.2:1-24

ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 21 வியாழன்

“உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (1தெச.5:24) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப்பணிக்கு கர்த்தருடைய அழைப்பைப் பெற்ற உதவி ஊழியரை ஏற்படுத்தித் தந்தருளவும் அந்த மாவட்டத்திலே சத்தியவசன முன்னேற்றப்பணி ஊழியங்கள் சிறப்புற நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.

மறுபடியும் ஒரு தருணம்!

தியானம்: 2018 ஜுன் 21 வியாழன்; வேத வாசிப்பு: யோனா 3:1-3

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி… (யோனா 3:1).
நமது வாழ்க்கைப் பாதையில், ஒவ்வொரு நாளும் என்று சொன்னதுபோய், ஒவ்வொரு விநாடியும் நமக்குக் கிடைக்கின்ற தருணம் என்று கூறுகின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நாம் செய்யவேண்டிய நேரத்தில் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் பின்போட்டு, பின்னர் அதையே செய்ய மனமிருந்தாலும் செய்யமுடியாமற்போன வேளைகளை நாம் சந்தித்திருக்கலாம். ஒரு தருணத்தை இழந்துவிட்டாலும் இன்னுமொரு தருணம் கிடைப்பது பெரும் பாக்கியம். இந்த இரண்டாவது தருணம் யோனாவுக்குக் கிடைத்தது.
நினிவே பட்டணத்துக்கு நேரிடவிருந்த அழிவை அறிவிக்கப்போன யோனா வுக்கு, அவர்கள் மனந்திரும்பினால் தேவன் இரக்கம் பாராட்டுவார் என்பதும் தெரியும். தேவ இரக்கத்தை அவன் நன்கு அறிந்திருக்கிறான்; அதனால், வரவிருந்த அழிவைக்குறித்து அவன் கூற விரும்பவில்லை. இஸ்ரவேலின் எதிரியான நினிவே அழிவிலிருந்து தப்பக்கூடாது என்பதே யோனாவின் தனிப்பட்ட எண்ணம். ஆகவே, அவன் கர்த்தருடைய வார்த்தையைத் தட்டிவிட்டான். ஆனால், கர்த்தரோ, யோனா வில் ஒரு திட்டம் வைத்திருந்தார்; சமுத்திரத்தில் மாண்டு விடாமல் காப்பாற்றினார். மீனின் வயிற்றிலிருந்தும்கூட தான் உயிரோடிருப்பதை உணர்ந்தபோது, யோனா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட மீனும் அவனைக் கரையில் கக்கியது. தமது சொல்லுக்குக் கீழ்ப்படிவதற்கு யோனாவுக்கு மீண்டும் ஒரு தருணம் கொடுத்தார் கர்த்தர். இம்முறை யோனா தேவகட்டளையை மறுக்காமல், நினிவேக்குச் சென்று, சொல்லவேண்டியதைச் சொன்னான் என்று வாசிக்கிறோம்.
இரண்டாவது தருணம், இது எல்லோருக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நமது வாழ்விலும் தேவன் தருணங் களைத் தந்திருக்கிறார். பாவ வழிகளிலிருந்து மனம்திரும்புவதற்கும், தேவன் அழைத்த அழைப்பை உதாசீனம்செய்யாமல் அதை முன்னெடுக்கவும், மன்னிக்க முடியாதிருக்கின்றவர்களை மன்னித்து அவர்களோடு சமாதானமாக வாழவும், பொய்வழிகளை விட்டு உண்மை வழிகளைப் பற்றிக்கொள்ளவும் தருணங்கள் தரப்பட்டுள்ளன. இதை நெகிழவிட்டால், பின் தருணமே இல்லாது போகக்கூடும். இயேசு சொன்ன உவமையில், நாட்டப்பட்ட அத்திமரத்துக்கு மூன்று ஆண்டுகள் தருணம் கொடுக்கப்பட்டது. பலனில்லாத அம்மரத்தை வெட்டிபோட கூறியபோது, தோட்டக்காரனோ இன்னுமொரு வருடம் தருணம் கேட்டு பரிந்து வேண்டினான். நமக்காகப் பரிந்து மன்றாடும் ஆண்டவரை நாம் சோதிக்காதிருப்போம். கர்த்தர் கிருபையாய்த் தந்த ஒவ்வொரு விநாடியும் அவருக்காகவே வாழ்வோம்.
“இது இந்த வருஷமும் இருக்கட்டும். நான் இதைச் சுற்றிலுங் கொத்தி எருப்போடுவேன். கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம் என்று சொன்னான்”(லூக்கா 13:8,9).
ஜெபம்: இரக்கமுள்ள தேவனே, நீர் எனக்குத் தந்த அருமையான தருணங்களைத் தவற விட்டதற்கு மன்னியும். உமது சித்தம் செய்ய மறுபடியும் நீர் தந்திருக்கிற தருணத்தை உபயோகிக்க என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்