Daily Archives: June 10, 2018

ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 10 ஞாயிறு

“இந்த ஜனங்கள் … தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” (ஏசா.29:13) என்ற ஆண்டவருடைய அங்கலாய்ப்பின் சத்தத்தைக் கேட்டவர்களாக இந்நாளில் உண்மையுள்ள உள்ளத்தோடு கர்த்தரை ஆராதித்து மகிமைப்படுத்த நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

தீயவன் வலையில் அகப்படாதிருப்போம்!

தியானம்: 2018 ஜுன் 10 ஞாயிறு; வேத வாசிப்பு: நெகேமியா 6:1-19

“என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்” (நெகே. 6:11).

கிறிஸ்துவுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்த ஒருவர், காடுகள் நிறைந்த கிராமம் ஒன்றிற்குச் சென்று அங்கிருந்த ஏழை மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்தார். நாட்கள் சென்றதும், கிராம மக்களின் தேவைகள் சந்திக்கப்பட வழிசெய்தார். அவரின் விடாமுயற்சியினால் அக்கிராமத்திலும், அயல் கிராமங்களிலும் சபைகளும், உதவி நிலையங்களும் ஆரம்பமாயின. இந்த வளர்ச்சியைக் கேள்விப்பட்ட கிறிஸ்தவ தலைவர்கள், வெகு தந்திரமாக, அந்தக் கிராமங்களைத் தாம் பொறுப்பேற்கும் நோக்கத்தோடு அவரை வேறு பக்கம் திசை திருப்பினார்கள். தலைவர்களின் உள்நோக்கைப் புரிந்துகொள்ளாத அவரும், வலையில் அகப்பட்டவராக, கிராம மக்களையும் அவர் ஆரம்பித்த பணியையும் விட்டு வெளியேறினார். அவர் வஞ்சகரின் வலையில் சிக்கிவிட்டார்.

நெகேமியாவின் தலைமையில் அலங்கம் கட்டிமுடிவதைக் கண்ட பகைவர்கள், அதைத் தடுக்க இதுவரை தாம் எடுத்த முயற்சியெல்லாம் வாய்க்காதே போனதை உணர்ந்து, நெகேமியாவை தம் வலைக்குள் தந்திரமாக விழசெய்ய உபாயம் செய்தனர். பொல்லாப்பு செய்யும் நோக்கோடு தம்முடன் வந்து பேசும் படி நெகேமியாவை நான்குமுறை அழைத்தனர். முத்திரை போடாத கடிதத்திற்கூடாக நெகேமியாவைப் பயமுறுத்தினர். நெகேமியாவைப்பற்றி பொய்யான தீர்க்க தரிசனம் கூற வைத்தனர். பாதுகாப்புக்காக தேவாலயத்தில் ஒளிந்துகொள்ளும் படியான ஆலோசனையும் கொடுக்கப்பட்டது. ஆனால் இவை எவற்றிற்கும் பயப்படாத நெகேமியா, “என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானேன்? என்னை போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானேன்? நான் போவதில்லை” என்று கூறித் தன் பணியைத் தொடர்ந்தான்.

தேவனுடைய பணி என்றுமே இலகுவானதல்ல. பிசாசு முன்னின்று மனிதரை ஏவி அவற்றை நிச்சயம் தடுப்பான். பணிகளைத் தடுத்து நிறுத்த பல வழிகளிலும் வலைகளை வீசிக்கொண்டேயிருப்பான். ஆனால், அது தேவபணி. தேவன் தாமே துணை நிற்பார். ஆகவே இப்படியான எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, வேலையைவிட்டு ஓட நினைப்போமானால் நாம் பிசாசின் வலையில் அகப்பட்டவர்களாவோம். பணியில் கால் வைக்கும் முன்னரே, எதிர்ப்புகள் வரும் என்று நம்மைத் தேவனுக்குள் திடப்படுத்தவேண்டியது அவசியம். பிறர் விரிக்கிற வலைகளை அடையாளங்காண தேவ ஆவியானவர் துணையும் அவசியம். ஆகவே, என்ன தடைகள் நேர்ந்தாலும், தேவபாதம் அமர்ந்து நம்மைத் திடப்படுத்திக்கொண்டு முன்செல்வோம். தேவன் ஆரம்பித்ததை நிச்சயம் முடிப்பார்.

“நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள். உத்தமனுக்குக் கர்த்தர் துணை” (2நாளா.19:11).

ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் பின்வாங்கிப்போகாமல் நிறுத்திவிட்ட பணியைத் தொடர உதவியருளும். நெகேமியாவிற்கு துணையாயிருந்த நீர் எங்களுக்கும் துணை செய்கிறீர் என்பதை விசுவாசிக்கிறோம், ஆமென்.

சத்தியவசனம்