ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 31 செவ்வாய்

“என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” (சங்.116:7) இம்மாதம் முழுவதும் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக நன்றி செலுத்துவோம். இம்மட்டும் நடத்தின ஜீவனுள்ள தேவன்மேல் தொடர்ந்து நம்பிக்கை வைத்து புதிய மாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

நிபந்தனையற்ற மாறாத அன்பு

தியானம்: 2018 ஜூலை 31 செவ்வாய்; வேத வாசிப்பு: ஓசியா 14:1-9

“நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன். அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன். என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று” (ஓசி.14:4).

பிள்ளை குற்றஞ்செய்ததால் கோபங்கொண்டு நீங்கள் அவனை அடித்ததும், பின்னர் அதை நினைத்து நினைத்து, பிள்ளையைப் பார்த்துப் பார்த்து நீங்கள் அழுததுமுண்டோ? அப்படி நடந்திருந்தால், தேவனுடைய அன்பும் கண்டிப்பும் நிறைந்த இருதயத்தை உங்களால் உணரமுடியும்.

இருளில் உழலுகின்ற மனுமக்களுக்குத் தம்மை அறிவிக்கவும், தமது அன்பை வெளிப்படுத்தவும் தேவன் யாரைத் தெரிந்துகொண்டாரோ, அவர்கள் தமது கட்டளைகள் நியாயங்களை மாத்திரமல்ல, தம்மையே விட்டு இருளின் விக்கிரகங்களைச் சேவித்தால் கர்த்தர் சும்மா விட்டுவிடுவாரா? மேலும், பாகாலுக்குப் பின் சென்றால் அழிவுதான் என்று அறிந்த தேவ அன்பு தமது மக்களைக் காப்பாற்றாமல் விட்டுவிடுமா? அவர்களுடைய தவறினால் கோபங்கொண்ட தேவநீதி, அவர்களைச் சும்மா விட்டுவிடுமா? தேவ அன்பு அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைப்பு விடுத்தது. ‘உன் சீர்கேட்டை நான் குணமாக்குவேன். என்னிடத்தில் திரும்பிவந்து விடு’ என்று தம் மக்களை அழைத்தது. தமது மக்களுக்காக அந்த அன்பு ஏங்கியது. அவர்களுடைய குற்றங்களைச் சகித்தது. எந்த நிபந்தனையும் போடாமல் அவர்களைத் திரும்பும்படி அழைத்தது. இதைத்தான் நாம் ஓசியா புத்தகத்தில் பார்க்கிறோம். தமது மாசற்ற, நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும்படி கர்த்தருக்கு ஒரு மனிதன் தேவைப்பட்டான். அப்படியே ஓசியா என்ற மனிதனுடைய வாழ்வையே தமது கரத்தில் எடுத்தார் கர்த்தர். ஓசியாவும் தன்னை அர்ப்பணித்தார்.

இன்று தேவன் தம்முடைய சாட்சிகளாக நம்மையே அழைத்திருக்கிறார். நாம் அதற்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா? அல்லது, அந்த அழைப்பை உதாசீனம் செய்து தேவனின் சிட்சைக்கு ஆளாயிருக்கிறோமா? அவர் நமது தகப்பன்; ஆகவே, சிட்சையை ஏற்றுக்கொண்டு மனந்திரும்புவோம். அவர் நம்மை நேசிக்கிறார். இன்று ஒரு ஓசியா தேவனுக்கு அவசியமில்லை. தேவன் தாமே மனிதனாய் வந்து, தமது மாசற்ற அன்பை சிலுவையிலே வெளிப்படுத்திவிட்டார். அந்த அன்பை நாம் உணர்ந்தது மெய்யானால், இன்று நம்மையே முழுதாக தேவசித்தத்துக்கு ஒப்புக்கொடுக்கவும், நமது சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்து நடந்த பாதையில் நடக்கவும் நமக்கு யாரும் கூறவேண்டிய அவசியமே இராது. நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, அவருடைய வார்த்தைகளைப் புறக்கணிக்க முடியாது. இன்றே அவரது வார்த்தையைக் கொண்டே அவரிடத்தில் திரும்புவோமாக.

“நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு. நீங்கள் ஆதி முதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ள வேண்டிய கற்பனை இதுவே” (2யோ.6).

ஜெபம்: ஆண்டவரே, ஓசியா புத்தகத்தின் வாயிலாக தேவனுடைய நிபந்தயைற்ற மாறாத அன்பை அறிந்துகொள்ளவும் தியானிக்கவும் கிருபை செய்தீர். அந்த அன்பில் நிலைத்திருக்க எங்களுக்கு கிருபைச்செய்யும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 30 திங்கள்

“.. ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2தீமோத்.1:9) இவ்வாக்குப்படி தேவனுடைய அநாதிதீர்மானத்தின்படி ஏற்படுத்தப்பட்டு நடந்துவரும் அனைத்து நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.

சிட்சிக்கும் தெய்வீக அன்பு

தியானம்: 2018 ஜூலை 30 திங்கள்; வேத வாசிப்பு: எபிரெயர் 12:5-11

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்…” (எபி.12:6).

தாய் தன் பிள்ளையில் அன்பு பாராட்டுவது இயல்பு. ஆனால், ஒரு தகப்பன் இவன் தன் பிள்ளை என்று பெருமை பாராட்டுவது மிகவும் மேலானது என்பேன். எங்கிருந்து அந்த அன்பும் பாசமும் சுரக்கிறது? இது தேவன் கொடுத்தது. இவ் அன்பில் ஒரு கண்டிப்பும் கலந்திருக்கும், இருக்கவேண்டும். “உன்னை நான் தண்டிப்பது வெறுப்பினால் அல்ல; உன்னை அதிகமாக நேசிப்பதால்” என்று ஒரு தகப்பன் சொல்லும்போது, மகனால் அந்த உறவைப் புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், தகப்பன் – மகன் உறவு எத்தனை பரிசுத்தமானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் பிறக்கும்போது, நமது குணாதிசயம் எப்படிப்பட்டது என்று பெற்றோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கர்த்தர் இஸ்ரவேலைத் தமது சொந்த ஜனமாக அழைத்தபோது, முடிவையும் அறிந்த சர்வஞானமுள்ள தேவனுக்கு எல்லாமே தெரிந்ததுதான். ஆகவேதான், “சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை” (உபா.7:7) என்று மோசே இஸ்ரவேலுக்குத் தெரிவித்தார். அவர்கள் விசேஷித்தவர்கள் என்பதால் கர்த்தர் அவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை; மாறாக, கர்த்தர் அவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் விசேஷித்தவர்களாயிருந்தார்கள் (யாத்.33:16) இந்த விசேஷித்த ஜனம் உலகத்தின் ஏனைய ஜனங்கள்போல வாழமுடியாதல்லவா! ஆக, அவர்களை தமது நீதிக்கு ஏற்ப வழிநடத்தவேண்டியது தெரிந்தெடுத்த தேவனுடைய பொறுப்பல்லவா? ஆகையால், அவர்கள் வழிதவறும்போது கர்த்தர் சும்மா விட்டுவிட முடியாது. கண்டித்தோ தண்டித்தோ அவர்களைத் தம்மண்டை சேர்த்துக் கொள்வார். ஏனெனில், அவர் அன்பு நிறைந்த தேவன்.

“தகப்பன் சிட்சிக்காத புத்திரன் உண்டோ” என்று எபிரெய ஆசிரியரின் நியாயமான கேள்விக்கு நமது பதில் என்ன? நாம் தவறு செய்தால், அப்பா நம்மை கண்டிப்பார் என்ற பயம் ஒரு உத்தம மகனுக்கு இருக்கும். இந்த உலக அப்பா தனக்குத் தெரிந்தபடி மகனின் நலன் கருதிச் சிட்சிக்கிறார். ஆனால், பரம தகப்பன் தமது பரிசுத்தத்தில் நாம் பங்குள்ளவர்களாக இருக்கும்படியல்லவா நம்மைச் சிட்சிக்கிறார்! நம்மை நம் போக்கில் விடுவதா, அல்லது நல்வழியில் நடத்துவதா எது ஒரு உத்தம தகப்பனுக்கு அழகு? தன் தகப்பன் சொல்லை அவமதித்து தன் வழி நடப்பதா அல்லது, நன்றியுடன் சிட்சையை ஏற்று தன்  வாழ்வை சீர்ப்படுத்துவதா எது ஒரு உத்தம பிள்ளைக்கு அழகு?

“…நீ …எனக்காகக் காத்திரு. உனக்காக நானும் காத்திருப்பேன்” (ஓசி.3:3).

ஜெபம்: மிகுந்த மன உருக்கமுள்ள ஆண்டவரே, எங்கள் தவறுகளில் விட்டுவிடாமல் சிட்சையினால் கண்டித்து உணர்த்துகிற உமது உன்னதமான நோக்கத்தை உணர்ந்து உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். ஆமென்.