Daily Archives: July 10, 2018

வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 10 செவ்வாய்

எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். (எஸ்றா.7:6)
வேதவாசிப்பு: எஸ்றா.6,7 | அப்போ.13:1-13

ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 10 செவ்வாய்

நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்” (எபேசி.6:20) என்ற பவுலடியாரின் வேண்டுதலைப்போல இந்நாட்களில் எதிர்வல்லமையுள்ள இடங்களில் சுவிசேஷப் பணிகளை செய்யும் ஊழியர்களை கர்த்தர் தமது கரத்தின் நிழலினால் மறைத்து வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.

மாறாத தேவ அன்பு

தியானம்: 2018 ஜூலை 10 செவ்வாய்; வேத வாசிப்பு: ஓசியா 11:1-11

“நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன். அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன். என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று” (ஓசியா 14:4).

தவறு செய்த பிள்ளையை அடித்துவிட்டு, பின்னர் அழுதுகொண்டு காயத்துக்கு மருந்துபோடுகின்ற அம்மாவை அப்பாவைக் கண்டிருக்கிறீர்களா! ஆம், அன்பு வேறு, செல்லம் வேறு. அன்பு கண்டிப்புள்ளது; அது நல்வழிப்படுத்தும். செல்லம் பயப்படும், கேட்டது கொடுக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று கேட்டதைக் கொடுத்துக் கெடுக்கும்.

நமது தேவனாகிய கர்த்தர் கெடுப்பவர் அல்ல; நல்வழிப்படுத்துகிறவர். தமக்கென்று தெரிந்தெடுத்த ஜனம் தனது அழைப்பிலிருந்து விலகி, அதன் விளைவை அனுபவித்தாலும், தேவன் அவர்களை அழிந்துபோக விட்டுவிடவில்லை. அவர் உடன்படிக்கையின் தேவன் அல்லவா! “நான் உங்கள் தேவன்; நீங்கள் என் ஜனம்” என்று தமது மக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறுவதற்கு அவர் மனுஷனா? தமது பிள்ளைகளின் தோல்வி, விழுகை, அழிவு இவை எதுவும் தேவசித்தமுமல்ல; தேவனுடைய பார்வையில் இவை எதுவும் முடிவும் அல்ல. அழிவுக்கென்று நியமிக்கப்பட்ட நம்மை மீட்டுக்கொண்ட அந்த இரக்கத்தையும் கிருபையையும் நாம் எவ்வளவாவது மறக்கலாகுமா? தேவன் நித்திய கிருபையும் மாறாத அன்புமுள்ளவர். ஆகவே, அன்று இஸ்ரவேலை மனந்திரும்புதலுக்குத் தேவன் அழைப்பதை ஓசியா அழகாக விளக்குகிறார். தேவஜனத்தின் மீறுதலைக் குறித்து ஓசியா அதிகம் பேசினாலும், இப்புத்தகத்தின் அடிப்படைச் செய்தியே தேவனுடைய மாறாத அன்புதான்! பாவத்திற்குத் தண்டனை நிச்சயம். ஆனால் தேவனுடைய நீதிக்கும் அன்புக்கும் இடையே, “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்” என்கிறார் கர்த்தர். ஆனால், இதற்கான தீர்வு கல்வாரியிலே காணப்பட்டாயிற்று.

தமது நோக்கத்தை நிறைவேற்றவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். அதை உணராமல், இந்த உலகத்தோடு சேர்ந்து, நமது சுயத்தை மையமாக்கிக் கொண்டு, தேவ நோக்கத்திலிருந்து தவறிப்போவதால்தான் நாம் அடிக்கடி அதன் பயனான துன்பங்களைச் சந்திக்கிறோம். நமது பாவத்தின் விளைவு நம்மைத் துரத்தும். ஆனாலும், தேவனுடைய மாறாத அன்பு நம்மைத் தொடருகிறது. நம்மை மனந்திரும்புதலுக்கு அழைக்கிறது; நாம் இழந்தவற்றை மீண்டும் நமக்குத் தர ஆவலாயிருக்கிறது. நாம் விட்டுவிட்ட, அல்லது செய்யத் தவறிய ஊழியத்தைச் செய்ய மீண்டும் நமக்குத் தருணம் அளிக்கிறது. இதுதான் கல்வாரியில் நடந்தது. இப்படியிருக்க, அந்தக் கல்வாரி அன்பைச் சந்தேகித்து, உலகோடு ஒத்திருந்து அந்த அன்பைப் புறக்கணிக்கலாமா?

“நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன். அவன் லீலிப் புஷ்பத்தைப் போல் மலருவான். லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்” (ஓசியா 14:5).

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, உலகத்தோடு ஒத்த வாழ்க்கை வாழாமல் உம்முடைய மாறாத தேவ அன்பில் நிலைத்திருக்க உதவி செய்யும். ஆமென்.

சத்தியவசனம்