ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 31 வெள்ளி

“…கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” (சங்.84:11) இம்மாதம் முழுவதும் கர்த்தர் தம்முடைய கிருபையையும் மகிமையையும் நமக்கு அருளி, வேண்டிய நன்மைகளை எந்தவொரு குறைவுமின்றி சந்தித்தபடியால் நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.

அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்

தியானம்: 2018 ஆகஸ்டு 31 வெள்ளி;
வேத வாசிப்பு: கொலோசெயர் 3:12-17

இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோ3:14).

பல வருடங்களுக்கு முன்பு மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல ஆயத்தப்படும்போது, வீட்டு உடையைக் கழற்றிவிட்டு, நல்ல மாற்று உடையைத் தரித்துக்கொண்டு செல்வார்கள். ஆனால், தொழில்நுட்பமும், நாகரீகமும் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில், மனிதர் புறப்படும்போது, உடையை மாற்றுகிறார்களோ இல்லையோ, கையடக்க தொலைபேசி கையில், அதைக் காதினுள் செருகி, கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு செல்வதற்கு மறப்பதேயில்லை. இப்படியாக எத்தனையோ தொழில்நுட்ப சாதனங்களைத் தரித்துக் கொள்ள மறக்காத மனிதர், அன்பைத் தரித்துக்கொள்ள மறப்பது ஏன்?

பவுல் கொலோசெயருக்கு எழுதும்போது, பல விஷயங்களைத் தரித்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார். வைத்துக்கொள்ளுங்கள், எடுத்துச் செல்லுங்கள் என்றில்லாமல், தரித்துக்கொள்ளுங்கள் என்னும்போது, நம்மோடு எப்போதுமே இருக்கவேண்டிய ஒன்று என்று அது பொருள்படும். அவையாவன உருக்கமான இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை ஆகிய இவை எல்லாவற்றின்மேலும் அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் என்கிறார். இவை கள் அனைத்துமே ஆவியின் கனியே. பரிசுத்தாவியானவரால் ஆட்கொள்ளப் பட்டவர்களாய் ஆவியின் கனியைத் தரித்து வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இதை நாம் எவ்வளவாய்த் தரித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்போம்.

இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த நற்குணங்கள் அற்றுப்போய், பெருமையும், மனமேட்டிமையும், அகங்காரமும், கோபமும், தன்னைவிட பெரியவன் இல்லையென்ற ஆணவமுமே மேலோங்கி நிற்கிறது. இதனால் சபைகளுக்குள்ளும், ஐக்கியம் குலைந்து, சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும், மன்னிக்க மறுக்கும் தன்மையும் மேலோங்கிவருகிறது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் வாழவேண்டிய நாமே, ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டும், கடித்துக்கொண்டும் இருந்தால் எப்படி சாட்சி பகருவது, எப்படி ஐக்கியத்தை வளர்ப்பது?

இன்று நமது சபைகளில் பவுல் இருந்தால் என்னதான் செய்வாரோ? நம்மைத் திருத்திக்கொள்வோம், உலகத்தவராய் நடவாமல், ஆவியின் பிள்ளைகளாய் அன்பைத் தரித்து அன்புகாட்டி வாழுவோம். அன்பைத் தரித்தவர்களாய், பிறருக்கும் அன்பைப் பகிர்ந்துகொள்கிறவர்களாய் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாய் வாழுவோம்.

எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை (1கொரி.13:3).

ஜெபம்: அன்பின் தேவனே, என்னிலே இருக்கும் கசப்புணர்வை எடுத்துப்போடும். கிறிஸ்துவை வெளிப்படுத்தும்படி அன்பைத் தரித்துக்கொள்ள எனக்கு உதவியருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 30 வியாழன்

“நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார்” (நீதி.15:29) என்ற வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடிருக்கிற 12 நபர்களுக்கு ஐசுவரிய சம்பன்னராகிய கர்த்தர் மனமிரங்கி அவர்களது மன விருப்பங்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி தேவைகளைச் சந்தித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.

முறுமுறுப்புக்கள்

தியானம்: 2018 ஆகஸ்டு 30 வியாழன்;
வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:17-27

அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து, என்னத்தைக் குடிப்போம் என்றார்கள் (யாத்.15:24).

எந்நேரமும் வாய்க்குள் எதையோ சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? எதிலுமே திருப்தியில்லாமல், எதையுமே சந்தோஷமாக எதிர்கொள்ளாமல், முறுமுறுத்துக் கொண்டிருப்பது வாழ்க்கைக்கு நல்லதொரு காரியமல்ல. திருப்தியோடு இருக்கும் உள்ளமே சந்தோஷத்தைக் கண்டடையும். அதுவும் ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் அவரில் சார்ந்து நிலைத்திருப்பவர்களாய், எந்நேரமும் சந்தோஷமாயிருக்கவே கற்றுக்கொள்ள வேண்டும்.

பாதையில் குறுக்கிட்ட சிவந்த சமுத்திரத்தையே ஆண்டவரின் உதவியோடு கடந்துவந்த இஸ்ரவேலர், தேவனின் அற்புதமான வழிநடத்துதலைக் கண்டு களிகூர்ந்தவர்கள். இப்போது வனாந்தரத்தில் மூன்று நாட்கள் தண்ணீர் இல்லாமல் அலைந்து, மாரா என்னும் இடத்திற்கு வந்தனர். அங்கே தண்ணீர் இருந்தது; ஆனால், குடிக்க முடியாத கசப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய விடுதலையைத் தந்த தேவன் தண்ணீருக்கும் வழி செய்வார் என்றில்லாமல், குடி தண்ணீருக்காக மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து, பிரச்சனை பண்ணுவதைக் காண்கிறோம். இப்போது மோசேக்கு இருந்த ஒரே அடைக்கலம் தேவன்தான். அவரை நோக்கிக் கூப்பிட்டபோது அவர் கசப்பான மாராவின் தண்ணீரை மதுரமாக்க ஒரு வழியைக் காட்டினார். பிரச்சனை ஒரு நொடியில் தீர்ந்தது. ஆனால், பிரச்சனை வந்தவுடன் இஸ்ரவேலர் நடந்துகொண்டது நல்லமுறை அல்ல. பிரச்சனை வந்தவுடன் முறுமுறுப்பதும், நிலைமை சரியானதும் சந்தோஷப்படுவதும் தேவனுடைய பிள்ளைகளுக்கு நல்லதல்ல.

தேவபிள்ளைகள் எல்லா சூழ்நிலையிலும் நிதானம் இழக்காதிருக்கவே அழைக்கப்பட்டுள்ளனர். அதுவே தேவன் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கைக்கு அடையாளம். நமது தேவன் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டவர். அவரை நம்பும்போது ஏன் நாம் இவ்வுலகில் வருகின்ற நிரந்தரமற்ற காரியங்களுக்காகக் கவலைப்படவேண்டும். எல்லா சூழ்நிலைகளையும் தேவபெலத்தோடே சந்திக்க ஆயத்தமாவோம். முறுமுறுப்புக்களை நம்மைவிட்டு அகற்றுவோம். வாழ்க்கையை தேவபெலத்தோடும், திருப்தியோடும் எதிர்நோக்குவோம். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ என்கிறார் பவுல். நாம் அப்படியானதொரு நிலையில் இருப்பதே தேவபிள்ளைகளாகிய நமக்கு அழகும், மற்றையோருக்கு முன்நிலையில் சாட்சியும் முன்மாதிரியாகவும் இருக்கும். முறுமுறுக்கின்ற தன்மையை நம்மைவிட்டு முற்றிலும் அகற்றிவிடுவோமாக. நமது வாழ்வு மற்றவர்களுக்கு முன்மாதிரி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது வாழ்வினூடாக தேவ நாமம் மகிமையடையவேண்டும் அல்லவா!

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள் (பிலி.2:16).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எதற்கெடுத்தாலும் முறுமுறுக்கும் குணத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும். கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க கிருபையருளும். ஆமென்.