Daily Archives: August 15, 2018

வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 15 புதன்

தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர். (சங்.65:9)
வேதவாசிப்பு: சங்கீதம். 59-65 | ரோமர்.11:13-36

ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 15 புதன்

“.. கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்” (ஏசா.62:4) என்ற வாக்கைப்போல இந்தியநாட்டின் 72வது சுதந்திர தினத்தை கொண்டாடிவரும் இந்நாளில் நம்முடைய தேசத்தின் செழிப்பிற்காகவும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தரிசனத்தோடு அனைவரும் செயல்பட ஜெபிப்போம்.

எந்த நிலையிலும்…

தியானம்: 2018 ஆகஸ்டு 15 புதன்; வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:10-19

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலி.(4:13).

நமது தேசம் தனது 72ஆவது சுதந்திர தினத்தை விமரிசையாய் இன்று கொண்டாடுகிறது. பிரிட்டிஷ்காரர்களின் அடிமைதனத்திலிருந்து நமது நாடு விடுதலை பெற்ற பின்பாக பல துறைகளில் முன்னேறி சாதித்துள்ளது. இருப்பினும் தீவிரவாதமும் பிரிவினைகளும் மதவாதமும் பாவமும் வன்முறையும் நம் தேசத்தில் பெருகி வருவதைக் கண்கூடாக பார்க்கிறோம். நம் தேசம் மெய்யான விடுதலை அடையவும், இரட்சகரான இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் இந்நாளில் நாம் பாரத்தோடு ஜெபிப்போம். (ஆ-ர்)

“வாழ்க்கையில் பிரச்சனைகளும், கவலைகளும், சந்தோஷங்களும் மாறிமாறி வரத்தான் செய்யும். ஆனால் எந்நிலையிலும் அவற்றைக் கண்டு தயங்கி நிற்காமல் அவற்றினூடாகக் கடந்துசெல்லப் பெலன் தாரும், ஆண்டவரே! என்று ஜெபிப்பதுதான் எனது ஜெபமாக இருக்கும்” என்று ஒரு தாயார் சொன்னது என்னைச் சிந்திக்க வைத்தது.

இங்கே பவுலும் அதைத்தான் வலியுறுத்துகிறார். ‘பிலிப்பியரே, என்னை விசாரிக்க நீங்கள் மனமலர்ந்தபடியால் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், என் குறைச்சலில் நான் இதைச் சொல்லவில்லை. நான் எந்நிலையில் இருந்தாலும் மனோரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன். ஏனெனில், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலன் உண்டு’ என்கிறார். ‘தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், எப்படிப்பட்ட நிலையிலும் என்னால் இருக்கமுடியும்; காரணம் என்னோடிருந்து என்னைப் பெலப்படுத்துகிறவர் கிறிஸ்துவே. அவரின் பெலத்தினால் நான் எந்த நிலையையும் சமாளித்து செல்லமுடியும் என்றதான நம்பிக்கை எனக்குண்டு’ என்பதே பவுலின் அறிக்கை.

நாமும் பவுலின் அனுபவத்தைப் பின்பற்றுகிறவர்களாகி திடனோடு நமது வாழ்வை எதிர்கொள்வோம். நமக்குப் பிரச்சனைகள் வரும்போது, ‘ஆண்டவரே, பிரச்சனையை என்னைவிட்டு அகற்றும் அகற்றும்’ என்று புலம்புவதைவிட்டு, நிதானமாக, ‘ஆண்டவரே, இப்பிரச்சனைகூட உமது அனுமதியின்றி என்னிடம் வரவில்லை. இதன்வழியாகக் கடந்துசெல்ல நீர் இதனை அனுமதித்திருக்கிறீர். எனவே, இதற் கூடாக வெற்றியோடு கடந்துசெல்ல எனக்கு உதவிசெய்யும்’ என்று ஜெபிப்போமானால், அதுவே உன்னதமான ஜெபமாக இருக்கும். இவ்விதமாக நாமும் பவுலைப்போல எந்நிலைமையிலும் மனோரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொள்வோம். நாம் திடப்பட்டால்தான் மற்றவர்களையும் திடப்படுத்த முடியும்.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது. அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான். தீமை அவனை அணுகாது (நீதி.19:23).

ஜெபம்: இரக்கமுள்ள தேவனே, நான் இன்று எந்த நிலையிருந்தாலும் மனரம்மியத்தோடும் திருப்தியோடும் வாழ எனக்குக் கற்றுத்தாரும். விசேஷமாக, எங்கள் இந்திய தேசம் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி மக்கள் உம்மை சேவிக்க கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்