ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 17 செவ்வாய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் குறைவான சதவீதத்தோடு உள்ள கிறிஸ்தவர்களுக்காகவும், அங்குள்ள திருச்சபை ஊழியங்கள் வலுப்பெறவும் ஆலயமே இல்லாத ஊர்களில் ஆலயம் கட்டப்படுவதற்கும் அறியாமைக்குள் இருக்கும் மக்களது மனக்கண்கள் திறக்கப்பட ஊழியங்கள் வல்லமையாய் செயல்பட ஜெபிப்போம்.

அடங்காத கிடாரி

தியானம்: 2018 ஜூலை 17 செவ்வாய்; வேத வாசிப்பு: ஓசியா 4:1-19

“இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது” (ஓசி.4:16).

கொட்டுகின்ற நீரருவியைப் பார்த்து ரசிக்கின்ற நாம், அது நமக்கு புகட்டு கின்ற பாடத்தை உணருகிறோமா! மேலிருந்து கீழே தொடர்ச்சியாகக் கொட்டுகின்ற இந்த நீரருவி, தொடர்ந்து விழுந்துகொண்டேதான் இருக்கும். பாவத்தில் விழுந்துவிட்டவனுடைய நிலைமையும், வாழ்க்கையின் தோல்விகளில் மூழ்குவதும் இதுபோன்றதுதான். அதிலும், நாம் விழுகின்றோமே என்ற உணர்வு கெட்டுப்போனால், நமது வாழ்வில் பின்னர் எழுந்து நிற்பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

அன்று, கீழே விழத்தொடங்கிய இஸ்ரவேலும் விழுந்துகொண்டே இருந்தது. சோரம் போனவர்கள், அந்த இடத்தில் உணர்வடைந்து மனந்திரும்பவில்லை. கர்த்தர், அவர்களுடைய நிலையை ஒரு “அடங்காத கிடாரி”க்கு ஒப்பிடுமளவுக்கு அவர்கள் மேலும் விழுந்தார்கள். கர்த்தர், தம்மை மேய்ப்பனாகவும் தமது மக்களை ஆடுகளாகவும் அடிக்கடி சொல்லியிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். “மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்” (ஏசா.40:11). ஆனால், இங்கே அவர்களை அடங்காத கிடாரிகளுக்கு ஒப்பிடுமளவுக்கு இஸ்ரவேல் செய்தது என்ன? ஆம், தேவன் தன்னிடம் எதிர்பார்த்த எதையும் இஸ்ரவேல் செய்யவில்லை. தேவனுக்குப் பயப்படும் பயம் என்பது இஸ்ரவேலிடம் அற்றுப்போயிருந்தது. “…நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே…” (மல்.1:6) என்கிறார் கர்த்தர். தேவபயம் அற்றுப்போகும்போது, தேவ சத்தமும் கேட்காது. தேவனை மதிக்காமல், தமக்கென்று ராஜாக்களை ஏற்படுத்தி, விரும்பிய தெய்வங்களையும் தேடினார்கள். மொத்தத்தில், அவர்கள் தேவனுக்குச் செவிகொடுக்கவில்லை. இதனால் தேவ ஆராதனையையும் விடுத்து, அந்நிய தெய்வங்களை ஆராதித்து, தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் பண்ணினார்கள் இஸ்ரவேலர்.

இன்று நமது ஆராதனை எப்படிப்பட்டது? தேவபயம், தேவசத்தத்துக்குச் செவிகொடுத்தல் என்பதெல்லாம் நமக்கு எப்படிப்பட்டதாயிருக்கிறது? “என் ஆடுகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. …அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது” (யோவா.10:27) என்று இன்றும் ஆண்டவர் நமக்கு மேய்ப்பனாகவே இருக்கிறார். ஆனால், நாம் அவரது ஆடுகளாக இருக்கிறோமா? அல்லது ஆடுகள்போல நம்மைக் காட்டிக்கொண்டு அடங்காத கிடாரிகள்போல, நமக் கென்று காரியங்களை ஏற்படுத்தி, கிறிஸ்துவின் பாதைக்கும், அவரது சத்தத்துக்கும் புதிய விளக்கங்களை ஏற்படுத்தி, தேவபயமற்று, நமக்கு இன்பம் தரும் பாதைகளில் செல்லுகிறோமா?.

“…சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்” (ஏசா.66:2).

ஜெபம்: “கர்த்தாவே, என் மெய்நிலையை எனக்கு வெளிப்படுத்தும், என்னை திரும்பவும் சேர்த்துக்கொள்ளும்” இயேசுவின்நாமத்தில் பிதாவே. ஆமென்.