ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 22 புதன்
நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி… பாழானஸ்தலங்களை எடுப்பிப்பவர் (ஏசா.44:26) சர்வவல்லமையுள்ள தேவன் தாமே அமெரிக்க தேசத்திலும் மற்ற நாடுகளிலுமுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை ஆசீர்வதித்து ஊழியங்களை பெருகச்செய்ய, தேவைகளைச் சந்திக்க வேண்டுதல் செய்வோம்.
எச்சரிக்கையாயிரு!
தியானம்: 2020 ஜனவரி 22 புதன் | வேத வாசிப்பு: உபாகமம் 8:6-18
“என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும்; இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும்…” (உபாகமம் 8:17).
ஒரு பெரிய செல்வந்தர் எல்லாவித செழிப்புடனும் வாழ்ந்தார். ஆனால், அந்த அழகான வீட்டின் ஒரு அறையில் ஒரு உடைந்த வண்டி காணப்பட்டது. இதைக்குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஆரம்பத்தில் நான் வயலுக்குச் சென்ற மாட்டுவண்டி இதுதான். இப்போது விதவிதமான வாகனங்களும், ஓட்டுனர்களும் எனக்கு இருந்தாலும், என் முன்னிலைமை இதுஎன்பதை மறந்துபோகக்கூடாது என்பதற்காக உடைந்த இந்த மாட்டுவண்டியை இன்னமும் வைத்திருக்கிறேன்’ என்றார் அவர்.
வசதி வாய்ப்புகள் வந்தவுடன் தங்கள் பழைய நிலைமையை மறந்து வாழுகிறவர்கள் அநேகர். ஆண்டவர் ஆசீர்வதித்தார் என்போம்; ஆனால், அந்த ஆண்டவரையே மறந்துவிடுவோம். ஒருவேளை உணவுக்காக நாம் பட்ட பாடுகளை மறந்து, இன்று ஏராளமான உணவைக் கொட்டிவிடுகிறோம். ஏதோ எல்லாமே நமது கைகளில்தான் இருக்கிறது என்பதுபோல நடந்துகொள்கிறோம். இதைக்குறித்தே கர்த்தர் இஸ்ரவேலரை எச்சரித்தார். ‘நீ புசித்து திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, …உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையாகாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப் பண்ணின… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும் இருக்க எச்சரிக்கையாயிரு’ என்றார் கர்த்தர்.
நமக்குண்டான சகலமும் தேவனிடமிருந்தே நமக்குக் கிடைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா? அவரது கிருபையால்தான் ஒவ்வொரு நாளிலும் நாம் வாழுகிறோம். களஞ்சியம் நிறையத் தானியங்களை நிரப்பிவிட்டு, “என் ஆத்துமாவே! அடித்துப் புசித்து சந்தோஷமாய் இரு; அநேக நாட்களுக்கு உனக்குத் தேவையான அத்தனையும் உண்டு” என்று சொன்ன ஐசுவரியவானைப் பார்த்து, ‘இன்றைக்கு உன்னுடைய ஆத்துமா உன்னைவிட்டு எடுக்கப்படுமானால், நீ சேர்த்து வைத்தவையெல்லாம் யாருடையதாகும்’ என்று சவால் விடுகிறார் சிருஷ்டிகரான நமது ஆண்டவர். நாளைக்கு நடப்பது இன்னதென்று தெரியாத அநித்தியமான வாழ்வை வாழுகின்ற நாம், நம்மை வழிநடத்துகின்ற தேவனை மறந்து வாழலாமா? நம்மாலேதான் எல்லாம் ஆகிறது என்பதுபோல பெருமை பேசலாமா? எந்த நிலைமையிலும் நமது ஆரம்பத்தை மறந்துவிடக் கூடாது.
“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?” (சக.4:10).
ஜெபம்: ஒன்றுமில்லாத எங்களை உயர்த்தி வைத்த ஆண்டவரே, நாங்கள் கடந்துவந்த பாதைகளையும், அற்பமான ஆரம்பங்களையும் மறவாமல் எந்நாளும் உமக்கு நன்றியாய் ஜீவிக்க கிருபை தாரும். ஆமென்.