ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 28 செவ்வாய்

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோம.11:29) திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், அப்பகுதிகளுக்கு ஊழியம் செய்யக் கூடிய உதவி முன்னேற்றப்பணியாளர் ஒருவரை கர்த்தர் இணைத்தருளவும் ஜெபிப்போம்.

பெருமையா? தாழ்மையா?

தியானம்: 2020 ஜனவரி 28 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 131:1-3

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக்கோபு 4:10).

தான் தாழ்மையுள்ளவர் என்றும், தாழ்மைக்குத் தானே மகா உதாரணம் என்றும், ஒருவர் தன்னைப்பற்றித் தானே சொல்லிக்கொண்டார். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர், ‘ஆனால் ஐயா, உங்களுக்குப் பரிசு கொடுப்பதாக இருந்தால் உங்களது பெருமைக்கே பரிசு கொடுக்க வேண்டும்’ என்றாராம். இப்படி அநேகருக்கு பெருமையான தாழ்மை உண்டு.

131ஆம் சங்கீதம் மூன்று வசனங்களைமட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த மூன்று வசனங்களிலும் தாவீதின் தாழ்மையான உள்ளம் தெளிவாகத் தெரிகிறது. ‘என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல; என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல. பெரிய காரியங்களிலும் எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை’ என்கிறார் தாவீது. இது, அவருடைய வாழ்வில் உண்மையுள்ளதாய் இருந்திருக்கிறது.

சவுலுக்குப் பதிலாக தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பின்பு, தாவீதைக் கொல்லுவதற்காக சவுல் பல தடவைகள் முயற்சித்தான். தாவீதோ, சவுலுக்குத் தப்பி காடுகளிலும் குகைகளிலும் ஒளித்து ஓடி, பல பாடுகளைச் சந்தித்தார். ஆனாலும், தான் தேவனால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்று தன்னைக்குறித்து பெருமைப்படவில்லை. தன்னை, தேவன் அந்த ஸ்தானத்தில் இருத்தும்வரைக்கும் பொறுமையோடு சகலத்தையும் சகித்துக் கொண்டார். சவுலைக் கொன்றுபோட தருணம் கிடைத்தும், அவர் சவுலின் மீது கைபோடவே இல்லை. எதைக் குறித்தும் கவலையின்றி தாய் மடியில் படுத்துறங்கும் குழந்தையைப்போல தேவனின் கரத்தில் தாவீது அடங்கியிருந்தார். தன்னை அழைத்த, அபிஷேகித்த தேவனை முழுமையாய் நம்பினார். அதனால்தான், ராஜ்யபாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டபின், தாவீதை இறுதிவரைக்கும் யாராலும் அசைக்க முடியவில்லை.

ஆண்டவருக்காக பணிசெய்யும் நாம், இன்று ஆண்டவரையே மிஞ்சி பெருமை பேசுகிறோமா என்பதில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ‘நானே இதைச் செய்தேன்’ என்று சொல்லி எந்த நிலையிலும் பெருமை பேசாதிருப்போமாக. தாழ்மையின் உருவாய் நம்மைத் தேடி வந்த ஆண்டவருக்குப் பணிசெய்கின்ற நாம், அவருடைய தாழ்மையை நமது அணிகலனாக அணிந்துகொள்ள வேண்டியது அதிக முக்கியம். நமது வாழ்வில் எப்போதும் தேவனே பெருமைப்படுவாராக.

“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1பேதுரு 5:5).

ஜெபம்: ஆண்டவரே, மனத்தாழ்மையை நீர் விரும்புகிறீர். எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பெருமையடைந்துவிடாதபடி மனத்தாழ்மையோடே நடந்துகொள்ள கிருபை செய்யும். ஆமென்.