ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 30 வியாழன்
நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன் (சங்.146:2) இம்மாதம் முழுவதும் நம்மை அற்புதமாய் பாதுகாத்து, சத்துருவின் முகத்துக்கு நம்மை விலக்கி வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மைகளை அருளின தேவாதி தேவனை முழு உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிப்போம்.
பின்பு, இயேசு சீஷர்களிடத்தில் வந்து, …. நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மத். 26:40-41).
யாருக்குப் பிரியமாய் நடப்பாய்?
தியானம்: 2022 ஜுன் 30 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 143:1-12

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; … (சங்கீதம் 143:10)
‘இது என் வாழ்க்கை; எனக்குப் பிரியமானதை நான் செய்வேன்’ என்று அநேகர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சமயத்திலே நாமும் சொல்லியிருக்கிறோம். ஆனால் ஒரு உண்மைக் கிறிஸ்தவன், யாருக்குப் பிரியமாய் நடக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்தெடுக்க வேண்டும். தேவனுடைய விருப்பமா? அல்லது தனது விருப்பமா? இது ஒரு முக்கிய தெரிந்தெடுப்பு. இது நமது வாழ்வின் பாதையையே தலைகீழாக மாற்றிவிடும்.
தனது நண்பனுடைய கோரச் சாவைக் கேள்வியுற்ற ஒரு வாலிபன் குழம்பித் தவித்தான். ஆறு வாரங்களுக்குப் பின் அவன் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அமைதியடைந்தான். தன் வாழ்விலே மாற்றம் கண்டவனாக, இனி ஆண்டவரைப் பிரியப்படுத்துவது மட்டுமே தன்னுடைய விருப்பமாகக் கொண்டான். ‘இது ஆண்டவரைப் பிரியப்படுத்துமா?’ என்ற வாசகத்தைத் தன்னுடைய அறையின் எல்லாப் பக்கமும் எழுதிவைத்தான். ஒரு சிறந்த வழக்கறிஞராக அல்லது நாடக ஆசிரியராக வரவேண்டும் என்ற தன்னுடைய ஆசைகளை விட்டுவிட்டு, இனி தேவனை மாத்திரமே பிரியப்படுத்துவேன் என்று உறுதிகொண்டான். அதன்படி அவன் பர்மா நாட்டிற்கு தன் மனைவியுடன் மிஷனெரியாகச் சென்று, பயங்கரமான சிறைவாசத்தை அனுபவித்தான். தன் அன்பு மனைவியை இழந்தான். இறுதியில் தனது குழந்தையையும் இழந்தான். அப்படியானால் இவன் தோற்றுப்போனவனா? இல்லை. ‘இந்தப் பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தைவிட்டுப் போவதில்லை’ என்ற அவனுடைய வைராக்கியமான தெரிந்தெடுப்பும் தீர்மானமும் வீண்போகவில்லை. 63க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பர்மாவிலே எழுந்தன. 7000 பேருக்கும் அதிகமாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இவர்தான் அதோனிராம் ஜட்சன் என்ற மிஷனெரிப் பணியாளர்.
ஒவ்வொரு மனுஷனுக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால், நமது காரியம் வேறு. நமக்காக கிறிஸ்து இரத்தம் சிந்தியதால் நாம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். இனி நமக்கென்று என்ன இருக்கமுடியும். ஆண்டவரைப் பிரியப்படுத்துவதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை? நமது வாழ்விலே அவருக்கு ஒரு நோக்கம் ஒரு திட்டம் உண்டு. அது கடினமான பாதையானாலும் மகிமையான பலனைத் தருவது உறுதி. தேவபிள்ளையே, கர்த்தரைப் பிரியப்படுத்த வேண்டுமானால் உனக்கு மிகவும் பிரியமான பல காரியங்களை விடவேண்டும் என்று யோசிக்கிறாயா? தேவனைப் பிரியப்படுத்துவதையே தெரிந்தெடுத்து, உறுதியான உள்ளத்தோடு உறுதியாக ஓடு. தம்மேல் பிரியம் வைக்கும் உன்னை தேவன் உயர்த்துவார்.
ஜெபம்: அன்பின் தேவனே, என் சொந்த விருப்புவெறுப்புகளை கிறிஸ்துவுக்குள் சிலுவையில் அறைந்துவிட்டு, உம்மைப் பிரியப்படுத்தி வாழ அருள் செய்யும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2022 ஜுன் 29 புதன்
உங்கள் குற்றங்களை… அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் (யாக். 5:16).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 17,18 | மாலை: அப்போஸ்தலர் 7:1-19
ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 29 புதன்
கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? (மீகா2:7) தம்முடைய வல்லமையும் பராக்கிரமமும் நிறைந்த கரத்தாலே பலவிதத் தேவைகளோடு கர்த்தருக்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள சிறியோர் பெரியோர் யாவரையும் கர்த்தர் நினைத்தருளி அவர்களை ஆசீர்வதிப்பதற்கும் தேவைகளைச் சந்திப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.
தனிமையிலும் உறவாகுவார்!
தியானம்: 2022 ஜுன் 29 புதன் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:6-9

..நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் (யோவான் 16:32).
அன்பான பெற்றோர், சகோதரர், உற்றார், உறவினர்கள் யாவரும் உன்னைச் சுற்றியிருப்பினும், தனிமை உன்னை வாட்டுகிறதா? கிறிஸ்தவ ஜீவியத்தில் தனிமையான நேரங்கள் எப்போதும் ஆசீர்வாதமான நேரங்களாகவே இருக்க வேண்டும். தனிமையில் கிறிஸ்து நம்மோடுகூட இருக்காவிட்டால், சாத்தான் நம் சிந்தனைகளை ஆட்கொண்டு, தேவசித்தத்தின் பாதையிலிருந்து நம்மை விலக்கிப்போடுவான்.
தகப்பனால் அதிகம் நேசிக்கப்பட்டு வாழ்ந்தவன், சகோதரரால் பிரிக்கப்பட்டு அந்நிய நாட்டிலே சிறையில் வாழ்ந்து வந்தான். சிறையில் வாழ்ந்தாலும், தனிமை உணர்வு தன்னை ஆட்கொள்ள இடமளிக்காததால் நித்திய பிதாவின் பிரசன்னம் அவன் உள்ளத்தை நிரப்பியது. அதனால், அநேக தேவ இரகசியங்களைத் தேவனிடத்திலிருந்து கற்றறிந்தான். இறுதியாக, தன் குடும்பத்திற்கும் மற்றும் அனைவருக்கும் ஆசீர்வாதமாக வாழ்ந்தான். அவன்தான் யோசேப்பு. அதைப்போல தாவீது ராஜாவின் வாழ்க்கையில் பல வேளைகளிலும் தனிமை அவரை ஆட்கொண்டது. ஆனாலும் அவர் அதனால் சோர்ந்துபோகவில்லை. தனிமை வேளைகளில் தேபிரசன்னத்தினால் தன் இருதயத்தை நிரப்பி தேவனோடு வாழ்ந்தார் தாவீது. நம்மை நடத்தும் நல்ல நாதர் இயேசுகிறிஸ்து தனிமையையே நாடிச் சென்று ஜெபத்தில் தன் நேரத்தைச் செலவிட்டு, தன் பிதாவின் பிரசன்னத்தைப்பெற்று, வல்லமையோடு தேவசித்தத்தை நிறைவேற்றினார்.
ஆம்! தேவன் ஒரு நோக்கத்துடனேகூட உங்கள் வாழ்விலும் தனிமையை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே தனிமையில் இருக்கும் நீங்கள் சோர்ந்து போகாமல், ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் நேரத்தைச் செலவிடுங்கள். உங்களை நடத்தும் தேவனோடு உள்ளத்திலே பேசுங்கள். தனிமையின் உணர்வு உங்களைவிட்டுப் படிப்படியாக மறைய, தேவபிரசன்னமும், வழிநடத்துதலும், தேவஇரகசியங்களும் வாழ்க்கையில் அற்புதமாக வெளிப்படும்.
தனிமை என் உள்ளத்தை வாட்டுகிறதே என்று தவிக்கும் ஆத்துமாவே, “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசா.58:11). ஆகவே, தனிமையில் தற்பரன் இயேசுவின் பிரசன்னத்தால் உன் உள்ளத்தை நிரப்பு. அவர் உனது தனிமையிலும் உறவாகுவார்.
ஜெபம்: தனிமை உணர்வினால் பரிதபிக்கும் என்னைக் கைவிடாத ஆண்டவரே, தனிமையை அனுபவிக்கும் என் வாழ்க்கையை உமது பிரசன்னத்தால் நிறைத்து, உம்மோடு நெருங்கி வாழ என்னை நடத்தும். ஆமென்.