ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 20 திங்கள்

தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம் (நீதி.25:25) திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சியை கர்த்தர் ஆசீர்வதித்து செய்தியாளர் Dr.ஜாண் நியூபெல்டு அவர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.

பொல்லாத புறங்கூறுதல்

தியானம்: 2022 ஜுன் 20 திங்கள் | வேத வாசிப்பு: யாக்கோபு 3:1-6

YouTube video

புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;… (நீதிமொழிகள் 11:13).

“பிறரைப்பற்றி எதையாவது அறியவந்தால், ஜெபத்திற்கு என்று பிறரிடம் கூறிவிட வேண்டும். யாருக்காவது சொல்லாவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும், இந்தப் பழக்கம் மற்றவருடைய வாழ்வைக் கெடுத்துப்போடுகிறது என்பதை உணர்ந்தபோது நான் பயந்தேன். அந்தப் பழக்கத்தை விடமுடியாதிருந்தது. இறுதியில், ஆண்டவரிடம் அறிக்கையிட்டேன். இப்போது எனக்கு தலையிடியே இல்லை. மனஅடக்கத்தைத் தேவன் கற்றுத்தந்து வருகிறார்.” – இது ஒருவரின் சாட்சி.

நான் படித்து சிந்தித்த ஒரு பகுதியை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ‘துப்பாக்கி முனையிலிருந்து வெளிவரும் குண்டுகளைக் காட்டிலும் நான் கொடுமையானவன். மற்றவர்களைக் கொன்றுபோடாமலேயே அவர்களை வெற்றி பெறுவேன். நான் குடும்பங்களை இடித்துப்போடுவேன். உள்ளங்களை உடைப்பேன். வாழ்வைச் சின்னாபின்னமாக்குவேன். காற்றிலும் வேகமாகப் பறப்பேன். குற்றமற்றவருங்கூட என்னை அச்சுறுத்தமுடியாது. எந்தத் தூய்மையும் என்னை நடுங்கச் செய்யுமளவுக்குத் தூய்மை படைத்ததல்ல. நான் உண்மையை மதிப்பதில்லை. நியாயத்தைக் கனப்படுத்துவதில்லை. தற்காப்பற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டுவதேயில்லை. எனக்குப் பலியானவர்கள் கடற்கரை மணலைப் போல மிகுதியாயிருக்கிறார்கள். ஒன்றுமறியாதவர்கள்கூட எனக்கு இலக்காகியிருக்கிறார்கள். நான் மறப்பதுமில்லை மன்னிப்பதுமில்லை. எனக்கு என் வேலைதான் முக்கியம். என்னுடைய பெயர்தான் புறங்கூறுதல்.” நம்மை நாமே கொன்றுபோடக்கூடிய கூரிய ஆயுதங்களில் ஒன்று ‘புறங்கூறுதல்’.

பிரியமானவர்களே, நாம் எதைப் பேசுகிறோம் என்பதுவும், எதைப் பேசாதிருக்கிறோம் என்பதுவும் மிகமிக முக்கியம். தகுதியான பேச்சு என்பது, சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவது மாத்திரமல்ல; பேசக்கூடாததைப் பேசாமல் நம்மைக் கட்டுப்படுத்துவதுமாகும். அலப்பு வாய், வீண்பேச்சு, பிறரின் வாழ்வை அழுக்காக்குதல், கதை திரித்தல், உள்ளதைக் கூட்டிப்பேசுதல், தீய ஆலோசனை, ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்தல், பொய்பேசுதல், சம்பந்தமே இல்லாதவரிடம் இன்னொருவரைக் குறித்து ஜெபத்திற்கு என்று அவரைப் பற்றிச் சொல்லுதல், ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி குறைபேசுவது, இவையனைத்தும் புறங்கூறும் நாவுக்குப் பரிச்சயமானது. இந்தப் பழக்கங்கள் நம்மிடம் உண்டா? உண்மையாய் சிந்தித்தால், அன்றாடம் நமது பேச்சில் புறங்கூறும் பேச்சுக்களே அதிகம். இங்கேயும் நமது சிந்தனைக்கூடம் பெரும்பங்கு வகிக்கிறது. புறங்கூறுதலைத் தவிர்த்தால் நமக்குப் பேசுவதற்குப் பேச்சே இராது. ஆகவே, எதைப் பேச நினைத்தாலும், ‘நான் பேசுவது உண்மையா?’ ‘இது தேவைதானா?’ என்ற கேள்விகளை நாமே நம்மிடம் முதலில் கேட்டுப் பார்ப்போமாக. அப்போது புறங் கூறுதல் தானே அடங்கிவிடும்.

ஜெபம்: அன்பின் தேவனே, அழிவையும் பிரிவினையையும் வேதனையையும் உண்டாக்கும் புறங்கூறும் பழக்கத்திலிருந்து பூரண விடுதலையை எனக்குத் தாரும். ஆமென்.