ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 31 ஞாயிறு
இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம் (1நாளா.29:13) மாதத்தின் இறுதிநாளில் கர்த்தரை ஆராதிக்க கூடிவந்த நாம் இந்தமாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எண்ணில்லாத நன்மைகளை நினைத்து நம்முடைய இருதயத்திலிருந்து ஆண்டவருக்கு நன்றியுள்ள ஆராதனையை ஏறெடுத்து அவரைப் போற்றித் துதிப்போம்.
தேவனே என் வாஞ்சை!
தியானம்: 2022 ஜூலை 31 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்.42:1-11, 2கொரி.5:1-9

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன் (சங்கீதம் 91:14).
பிரியமான தேவபிள்ளையே, உங்கள் ஆத்துமாவின் வாஞ்சைதான் என்ன? “வாஞ்சை” – இது சாதாரண எதிர்பார்ப்போ அல்லது வெறும் நேசமோ அல்ல. ஏதோவொன்றுக்காக ஏங்கித் தவித்து, அது நிச்சயமாகக் கிடைக்கவேண்டும் என்ற தாகம் உண்டாயிருத்தலே “வாஞ்சை” என்று பொருள்படும். சுமுகமானதும், இலக்கு அற்றதுமான வாழ்விலே “வாஞ்சை” என்ற ஒன்று இருக்கமுடியாது. ஆபத்தில் விடுதலை வேண்டுமா? ஆண்டவரின் பிரசன்னம் வேண்டுமா? தாங்கொண்ணாத வியாதியா? அல்லது, தாபரமின்றி அலைகிறாயா? பசி எடுக்கும் வயிறுதான் உணவுக்காக ஏங்கும். நமது ஆத்துமா எதற்காக வாஞ்சிக்கிறது?
நாம் எதன்மேல், அல்லது யார்மேலே வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். பரம்பொருளா? பரலோகமா? பணமும் பதவியுமா? அல்லது அழிவுக்குள்ளாகும் என்று தெரிந்தும் இந்த உலகத்தின் மீதுள்ள வாஞ்சையா? ஆனால் கர்த்தரோ, “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்” என்று வாக்களிக்கிறார். “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுகிறது.” “என் ஆத்துமாவே, நீ தேவனை நோக்கிக் காத்திரு” இப்படியாக தாவீதின் ஆத்துமா தேவனையே எதிர்பார்த்து தன் விடுதலைக்காகக் கதறுவதுபோல நாமும், “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது” (ஏசா.26:8) என்று கூறக்கூடுமா?
தேவனிடத்தில் வாஞ்சையாயிருந்தால் நமக்குக் கிடைப்பது என்ன? “விடுதலை”. மெய்யாகவே விடுதலை கொடுக்கவே மனுஷகுமாரன் உலகத்தில் வந்துதித்தார். இவ்வுலக பாரங்களிலிருந்து விடுதலை; பாவத்திலிருந்து விடுதலை; சாபத்திலிருந்து விடுதலை; ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுதலை. இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்போமாக (2 கொரி.5:2). பிரியமானவர்களே, இந்நாட்களிலே நம்மை ஆராய்ந்து பார்ப்போம். துர்க்குணங்களை அகற்றிவிட்டு, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாய் இருப்போம் (1பேதுரு 2:3). ஏனெனில் சத்தியமே நம்மை விடுதலையாக்குகிறது (யோவா.8:32). தேவபிள்ளையே, இந்த கடைசி நாட்களில் வாழ்கின்ற நாம் வீண் களியாட்டுகளையும் ஆடம்பரங்களையும் தவிர்த்து, தேவன் பேரிலும், அவரது வார்த்தைமேலும் வாஞ்சையுள்ளவர்களாக இருப்போமாக. அதுவே நமது உள்ளத்திற்கு விடுதலையையும் சமாதானத்தையும் தரும்!
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்.42:2).
ஜெபம்: பிதாவே, நான் உம்மீதும் திருவசனத்தின் மீதும் வாஞ்சையாய் இருக்கிறேன். இக்கடினமான நாட்களிலும் நீரே என்னை உயிர்ப்பித்தருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 30 சனி
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார் (சங்.121:3).
வேதவாசிப்பு: காலை: யோபு 24-28 | மாலை: அப்போஸ்தலர் 26
ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 30 சனி
அவனவன் … தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் (2கொரி.9:7) சத்தியவசன ஊழியத்தை விசுவாச பங்காளர் காணிக்கையினாலே உற்சாகமாகவும் ஜெபத்தோடும் தாங்கிவரும் பங்காளர்கள் அனைவரும் வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் காணப்பட ஜெபிப்போம்.
இரவிலும் பகலிலும்
தியானம்: 2022 ஜூலை 30 சனி | வேத வாசிப்பு: யாத்.14:15-30,சங்.64:1-10

இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்… பயப்படாதிருப்பாய் (சங்கீதம் 91:5,6).
இரவு பகலாக, நாள் முழுவதுமே சர்வவல்லவரின் பாதுகாப்பு என்றும் நமக்குண்டு என்பதனை தேவனுடைய வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. அப்படியிருக்க நாம் ஏன் பயப்படவேண்டும்? வியாதி, கவலை, எதிர்பார்ப்பு, இப்படி எத்தனையோ காரணங்களினால் நம்மில் அநேகருக்கு, இரவுவேளையைக் கழிப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அது மாத்திரமல்ல, இரவில் ஒரு சிறு சத்தம்கூட நமக்குப் பயத்தையே ஏற்படுத்துகின்றன.
இந்நேரங்களில் நாம் சற்று இஸ்ரவேலரை நினைவுகூருவோமாக. அவர்கள் எகிப்தை விட்டுப் பிரயாணப்பட்டுப் போகையில், பின்னால் துரத்திவந்த பார்வோனின் சேனையைக் கண்ட மாத்திரத்தில், இனி தப்புவதற்கு வழியில்லை என்று எண்ணித் தவித்தார்கள். ஆனால், இதுவரை அவர்கள் முன்னால் சென்ற தேவதூதனும், மேகஸ்தம்பமும் விலகி பின்னால் வந்துநின்றன. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாயிற்று; இஸ்ரவேலருக்கோ இரவு வெளிச்சமானது. எத்தனை ஆச்சரியம்! தொடர்ந்து கர்த்தர் இரவு முழுவதும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்காக கிரியை செய்து, ஜனங்களை சிவந்த சமுத்திரத்தினூடாகக் கடக்கப்பண்ணினார் என்று வாசிக்கிறோம். அந்நேரம், நிச்சயமாக “எப்போது இந்த இரவு விடியும்” என்று அவர்கள் அங்கலாய்த்திருப்பார்கள். ஆனால், விடியற்காலையில் தாம் சிவந்த சமுத்திரத்தைக் கடந்துவிட்டதையும், துரத்தி வந்த எகிப்தின் சேனைகள் மாண்டு போயிருந்ததையும் கண்டார்கள். “சென்ற இரவு தேவன் நம்மோடிருந்திருக்கிறார்; நாம் வீணாகக் கவலைப்பட்டோமே” என்று அவர்கள் பேசியிருக்கவும் கூடும்.
இரவில் மாத்திரமல்ல, பட்டப்பகலிலும் ஆபத்துக்களையும் சோதனைகளையும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனாலும், தேவன் தம் பிள்ளைகளை அற்புதமாகக் காப்பாற்றுகிறார். அத்துடன் நேரடித் தாக்குதலைப் பார்க்கிலும் மறைமுகமாக எய்யப்படுகின்ற அம்புகள் மிகுந்த ஆபத்தை விளைவிக்கின்றன. “மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்” (சங்.64:4). சடுதியான ஆபத்துக்கள் நம் சரீரத்தைத் தாக்குகின்றன. ஆனால், அம்பு போன்ற கசப்பான வார்த்தைகளோ நம் ஆத்துமாவையே கிழித்துவிடுகின்றன.
தேவபிள்ளையே, பயப்படாதே, இஸ்ரவேலரை இரவு பகலாக பாதுகாத்து வனாந்தரத்தில் வழிநடத்தி கானானுக்கு அழைத்து வந்தவர், இன்று உன்னையும் வழிநடத்த வல்லமைமிக்கவராகவே இருக்கிறார். எனவே இரவின் பயங்கரத்தையும் பகலின் அம்பையும் எதிர்கொள்ளத் துணிந்து நில்.
ஜெபம்: இஸ்ரவேலின் ஜெயபலமானவரே, உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன். உம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். உமது பெலத்தை அருளிய தேவனே, நான் உம்மை நன்றியோடே துதிக்கின்றேன். ஆமென்.